Link to home pageLanguagesLink to all Bible versions on this site
8
1 ஞானமுள்ளவனுக்கு ஒப்பானவன் யார்?
நிகழ்வுகளின் விளக்கம் யாருக்குத் தெரியும்?
ஞானம் மனிதனுடைய முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி,
முகத்தின் கடினமான தோற்றத்தை மாற்றுகிறது.
அரசனுக்குக் கீழ்ப்படிதல்
2 அரசனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நட என்று நான் சொல்கிறேன்; ஏனெனில் இறைவனுக்கு முன்பாக நீ சத்தியப் பிரமாணம் செய்திருக்கிறாய். 3 அரசனின் முன்னிருந்து போக அவசரப்படாதே. கொடிய காரியத்திற்கு உடந்தையாகாதே; ஏனெனில் அரசன் தான் விரும்பிய எதையும் செய்வான். 4 அரசனின் வார்த்தை அதிகாரமுடையது ஆகையால், “நீ என்ன செய்கிறாய்” என்று அரசனுக்கு சொல்ல யாரால் முடியும்?
5 அரசனின் கட்டளைக்குக் கீழ்ப்படிபவனுக்கு தீங்கு நேரிடாது;
ஞானமுள்ள இருதயம் அதற்குத் தகுந்த காலத்தையும், அதின் நடைமுறையையும் அறியும்.
6 ஏனெனில் ஒவ்வொரு செயல்பாட்டிற்குரிய காலமும்,
அதற்குரிய ஒரு நடைமுறையும் உண்டு;
ஒரு மனிதனுடைய கஷ்டம் அவனைப் பாரமாய் நெருக்கினாலும்
ஒவ்வொரு செயல்பாட்டிற்குரிய காலமும், நடைமுறையும் உண்டு.
 
7 எதிர்காலத்தை ஒரு மனிதனும் அறியாதிருப்பதால்,
வரப்போவதை அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?
8 காற்றை அடக்க யாராலும் முடியாது;
அதுபோலவே தன் மரண நாளையும் யாராலும் தள்ளிப்போட முடியாது.
அந்த யுத்தத்திலிருந்து ஒருவராலும் தப்பமுடியாது;
அதுபோலவே கொடுமையைச் செய்கிறவர்களையும் கொடுமை விடுவிக்காது.

9 சூரியனுக்குக் கீழே நடந்த எல்லாவற்றையும், என் மனதில் சீர்தூக்கிப் பார்த்தேன் அப்பொழுது, இவை எல்லாவற்றையும் நான் கண்டேன். தனக்கே துன்பம் ஏற்படுகிற போதிலும், ஒரு மனிதன் மற்றவனை அடக்கி ஆளும் காலமும் உண்டு. 10 கொடியவர்கள் அடக்கம்பண்ணப்பட்டதையும் நான் கண்டேன்; அவர்கள் பரிசுத்த இடத்திற்கு போக்குவரவாய் இருந்ததால், அவர்கள் கொடுமை செய்த அதே பட்டணத்தில் புகழப்படுகிறார்கள்[a]. இதுவும் அர்த்தமற்றதே.

11 ஒரு குற்றம் விரைவாகத் தண்டிக்கப்படாதபோது, மக்கள் தவறு செய்யத் துணிகிறார்கள். 12 கொடுமையானவன் நூறு குற்றங்களைச் செய்து நீடியகாலம் வாழ்ந்தாலும், இறைவனில் பக்தியாயிருந்து, இறைவனுக்குப் பயந்து வாழ்கிற மனிதர்களுக்கே அதிக நன்மை உண்டு என நான் அறிந்திருக்கிறேன். 13 ஆனாலும் கொடியவர்கள் இறைவனுக்குப் பயந்து நடக்காததினால், அவர்களுக்கு நலமுண்டாகாது; அவர்களுடைய வாழ்நாள் நீடித்திருக்காது, அது நிழலைப் போன்றது.

14 மேலும் பூமியில் நிகழ்கின்ற வேறு ஒரு அர்த்தமற்ற காரியமும் உண்டு: கொடியவர்களுக்கு வரவேண்டியது, நீதிமான்களுக்கு வருகிறது. நீதிமான்களுக்கு வரவேண்டியது, கொடியவர்களுக்கு வருகிறது. இதுவும் அர்த்தமற்றது என்றே நான் சொல்வேன். 15 எனவே நான் வாழ்க்கையில் இன்பமாயிருக்கச் சொல்கிறேன்; ஏனெனில் சூரியனுக்குக் கீழே மனிதனுக்கு சாப்பிட்டு, குடித்து, சந்தோஷமாய் இருப்பதைத் தவிர வேறு எந்த நன்மையும் இல்லை. அப்பொழுது சூரியனுக்குக் கீழே இறைவன் அவனுக்குக் கொடுத்திருக்கிற வாழ்நாளெல்லாம், அவனுடைய வேலையில் மகிழ்ச்சியிருக்கும்.

16 நான் ஞானத்தை அடையவும், மனிதன் இரவு பகல் நித்திரையின்றி பூமியில் செய்யும் கடின உழைப்பைக் கவனிப்பதற்கும் முயன்றபோது, 17 இறைவன் செய்த எல்லாவற்றையும் நான் கண்டேன். சூரியனுக்குக் கீழே நடப்பதை ஒருவனாலும் விளங்கிக்கொள்ள முடியாது. அதை அறிய முயற்சித்தாலும், அவனால் அதின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க முடியாது. ஞானமுள்ள ஒருவன் தனக்குத் தெரியும் என்று சொன்னாலும் உண்மையாகவே அவனால் அதை விளங்கிக்கொள்ள முடியாது.

<- பிரசங்கி 7பிரசங்கி 9 ->