Link to home pageLanguagesLink to all Bible versions on this site

1 சூரியனுக்குக் கீழே இன்னுமொரு தீங்கையும் நான் கண்டேன். அது மனிதரை பாரமாய் அழுத்துகிறது. 2 இறைவன் ஒருவனுக்கு செல்வத்தையும், சொத்துக்களையும், மதிப்பையும் கொடுத்திருக்கிறார்; அதினால் அவன் இருதயம் ஆசைப்படும் எதையும் குறைவில்லாமல் பெற்றிருக்கிறான். ஆனால் அவைகளை அனுபவிக்க இறைவன் அவனுக்கு இடம் கொடுக்கிறதில்லை. பதிலாக வேறொருவன் அவற்றை அனுபவிக்கிறான். இதுவும் அர்த்தமற்றதும், கொடுமையான தீங்குமாய் இருக்கிறது.

3 ஒரு மனிதனுக்கு நூறு பிள்ளைகளும் நீடித்த வாழ்வும் இருக்கலாம்; எவ்வளவு காலம் அவன் வாழ்ந்தாலும் அவன் தனது செல்வச் செழிப்பை அனுபவியாமலும், செத்தபின் முறையான நல்லடக்கம் அவனுக்கு நடைபெறாமலும் போனால், அவனைவிட கருசிதைந்த பிண்டமே மேலானது என்றே நான் சொல்வேன். 4 அது அர்த்தமற்றதாகவே வந்து, இருளில் மறைகிறது. இருளிலேயே அதின் பெயர் மூடப்பட்டிருக்கிறது. 5 அக்குழந்தை சூரியனைக் காணாமலும், ஒன்றையும் அறியாமலும் இருந்தபோதுங்கூட, இந்த மனிதனைவிட அது அதிக இளைப்பாறுதலை உடையதாயிருக்கிறது. 6 அந்த மனிதன் இரண்டு முறைக்கு மேலாக ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தாலும், தனது செல்வச் செழிப்பை அவன் அனுபவிக்கவில்லையே. அனைவரும் ஒரே இடத்திற்கு அல்லவோ போகிறார்கள்.

7 மனிதனுடைய எல்லா உழைப்பும் அவனுடைய வாய்க்காகத்தானே.
ஆனாலும் அவனுடைய பசியோ ஒருபோதும் தீருவதில்லை.
8 ஒரு மூடனைவிட, ஞானமுள்ளவன் எதில் உயர்ந்தவன்?
மற்றவர்களுக்கு முன்பாக எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என அறிவதினால் ஒரு ஏழைக்குக் கிடைக்கும் இலாபம் என்ன?
9 ஆசைக்கு இடங்கொடுத்து அலைவதைவிட,
கண்கள் கண்டதில் திருப்தியடைவதே நல்லது.
இதுவும் அர்த்தமற்றதே,
காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே.
 
10 இருக்கிறவையெல்லாம் முன்னமே பெயரிடப்பட்டிருக்கின்றன;
மனிதன் எப்படிப்பட்டவன் என்பதும் அறியப்பட்டேயிருக்கிறது.
தன்னிலும் வலிமையுள்ளவரோடு
ஒரு மனிதனாலும் வாக்குவாதம் பண்ண முடியாது.
11 வார்த்தைகள் கூடும்போது,
அர்த்தம் குறையும்.
இதினால் யாராவது பயனடைந்ததுண்டோ?

12 ஒரு மனிதன் தனது குறுகியதும், அர்த்தமற்றதுமான வாழ்நாளில், ஒரு நிழலைப்போல் கடந்துபோகிறான்; அந்நாட்களில் எது வாழ்க்கையில் நல்லது என்று யாருக்குத் தெரியும்? அவன் செத்துப்போனபின் சூரியனுக்குக் கீழே என்ன நடக்கும் என அவனுக்கு யாரால் கூறமுடியும்?

<- பிரசங்கி 5பிரசங்கி 7 ->