Link to home pageLanguagesLink to all Bible versions on this site
11
பல முயற்சிகளில் முதலீடு செய்யுங்கள்
1 கடல் வாணிபத்தில் முதலீடு செய்;
பல நாட்களுக்குப் பிறகு நீ இலாபத்தைத் திரும்பப் பெறுவாய்.
2 உன்னிடம் இருப்பதை ஏழு பேருடனும், எட்டுப் பேருடனும் பங்கிட்டுக்கொள்.
பூமியின்மேல் என்ன பேராபத்து வரும் என்பதை நீ அறியாதிருக்கிறாயே.
 
3 மேகங்களில் தண்ணீர் நிறைந்திருந்தால்,
அவை பூமியின்மேல் மழையைப் பொழியும்.
ஒரு மரம் வடக்குப் பக்கம் விழுந்தாலும்,
தெற்குப் பக்கம் விழுந்தாலும் அது விழுந்த இடத்திலேயே கிடக்கும்.
4 காற்றைப் பார்த்துக் கொண்டிருப்பவன் விதைக்கமாட்டான்;
மழைமேகங்களை நோக்கிப் பார்த்திருக்கிறவன் அறுவடை செய்யமாட்டான்.
 
5 காற்றின் வழியையோ,
தாயின் கருப்பையில் குழந்தை உருவாகும் விதத்தையும் உன்னால் அறிய முடியாது.
அதுபோலவே எல்லாவற்றையும் படைக்கும்
இறைவனின் செயல்களையும் விளங்கிக்கொள்ள உன்னால் முடியாது.
 
6 உனது தானியத்தைக் காலையில் விதை,
பிற்பகல் முழுவதும் உனது கைகளை நெகிழவிடாமல் விதை.
இதுவோ, அதுவோ,
எது பலன் தரும் என்பது உனக்குத் தெரியாதே;
ஒருவேளை இரண்டுமே நல்ல பலனைக் கொடுக்கலாம்.
உன் இளமையில் படைத்தவரை நினைவில்கொள்
7 வெளிச்சம் இன்பமானது,
சூரியனைக் காண்பது கண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
8 ஒருவன் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும்,
அவன் அவற்றை மகிழ்ச்சியுடன் களிக்கட்டும்.
ஆனால் இருளின் நாட்களையும் நினைவில் கொள்ளட்டும்,
ஏனெனில் அவை அநேகமாயிருக்கும்.
வரப்போகும் யாவும் அர்த்தமற்றதே.
 
9 வாலிபனே, உன் இளமைக் காலத்தில் மகிழ்ச்சியாயிரு,
உன் வாலிப நாட்களில் உன் இருதயம் உனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கட்டும்.
உன் இருதயத்தின் வழிகளையும்,
உன் கண்கள் காண்பவற்றையும் பின்பற்று.
ஆனால் இவை எல்லாவற்றிற்காகவும்
இறைவன் உன்னை நியாயத்தீர்ப்புக்குக் கொண்டுவருவார் என்பதை அறிந்துகொள்.
10 எனவே உனது இருதயத்திலிருந்து கவலைகளை அகற்று,
உனது உடலின் வேதனையை உன்னைவிட்டு அகற்று.
ஏனெனில் இளவயதும் வாலிபமும் அர்த்தமற்றதே.