1 உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுக்கிற நாட்டிற்குள் நீங்கள் போய், அதை உரிமையாக்கி அங்கு குடியிருக்கப்போகிறீர்கள். 2 அப்போது உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நிலத்தின் விளைச்சல் எல்லாவற்றிலுமிருந்து, முதற்பலன்களை எடுத்து ஒரு கூடையில் போட்டுக்கொள்ளுங்கள். அவற்றை உங்கள் இறைவனாகிய யெகோவா தம்முடைய பெயர் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் உறைவிடத்திற்குக் கொண்டுபோங்கள். 3 அங்கே அவ்வேளையில் கடமையில் இருக்கும் ஆசாரியனிடம், “எங்களுக்குக் கொடுப்பதாக யெகோவா நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்குக்கொடுத்த நாட்டிற்குள் நான் வந்துவிட்டேன் என்று, உமது இறைவனாகிய யெகோவாவுக்கு இன்று நான் அறிவிக்கிறேன்” என்பதை சொல்லுங்கள். 4 அப்பொழுது ஆசாரியன் கூடையை உங்கள் கையிலிருந்து எடுத்து, உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பலிபீடத்தின்முன் கீழே வைப்பான். 5 அங்கே நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குமுன் சொல்லவேண்டியதாவது: “எனது தகப்பன்*முற்பிதா யாக்கோபு. அழிவுக்கு நேரான ஒரு சீரியனாக இருந்தான். அவன் ஒருசில மக்களோடு எகிப்திற்குப்போய் அங்கே வாழ்ந்தான். அவர்கள் வலிமையும், அதிக எண்ணிக்கையுமுள்ள ஒரு பெரிய நாடானார்கள். 6 ஆனால் எகிப்தியரோ எங்களைத் துன்புறுத்தி, எங்கள்மேல் கடுமையான வேலையைச் சுமத்தி வேதனைப்படுத்தினார்கள். 7 அப்பொழுது நாங்கள் எங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவை நோக்கி அழுதோம். யெகோவா எங்கள் குரலைக் கேட்டார். எங்கள் வேதனையையும் கடும் வேலையையும், ஒடுக்குதலையும் கண்டார். 8 எனவே யெகோவா தமது வலிமையான கரத்தினாலும், நீட்டப்பட்ட புயத்தினாலும், மகா பயங்கரத்தினாலும், அற்புத அடையாளங்களினாலும், அதிசயங்களினாலும் எகிப்திலிருந்து எங்களை வெளியே கொண்டுவந்தார். 9 அவர் எங்களை இந்த இடத்திற்குக் கொண்டுவந்து, பாலும் தேனும் வழிந்தோடுகிற இந்த நாட்டை எங்களுக்குக் கொடுத்தார். 10 யெகோவாவே, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற்பலனை இப்பொழுது நான் கொண்டுவருகிறேன்” என்று சொல்லி, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குமுன் அந்தக் கூடையை வைத்து, அவரை வழிபடுங்கள். 11 உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கும், உங்கள் குடும்பங்களில் உள்ளவர்களுக்கும் கொடுத்த எல்லா நன்மைகளினிமித்தம் நீங்களும், உங்கள் மத்தியில் வாழும் லேவியர்களும், அந்நியரும் மகிழ்ந்து களிகூருங்கள்.
12 பத்திலொரு பங்கு கொடுக்கும் வருடமான மூன்றாம் வருடத்திலே, உங்கள் விளைச்சலில் எல்லாம் பத்திலொரு பங்கை பிரித்தெடுத்து வையுங்கள். அவற்றை லேவியருக்கும், அந்நியருக்கும், தந்தையற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் கொடுங்கள். அவர்கள் உங்கள் பட்டணங்களில் சாப்பிட்டுத் திருப்தியடையட்டும். 13 பின்பு நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம், “நீர் கட்டளையிட்ட எல்லாவற்றின் படியேயும் நான் என் வீட்டிலிருந்து பரிசுத்த பாகத்தைப் பிரித்து லேவியருக்கும், அந்நியருக்கும், தந்தையற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் கொடுத்திருக்கிறேன். நான் உமது கட்டளைகள் ஒன்றையும் விட்டு விலகவில்லை. அவற்றில் ஒன்றையும் மறக்கவும் இல்லை. 14 நான் துக்கங்கொண்டாடியபோது, பரிசுத்த பங்கில் இருந்து ஒன்றையும் உண்ணவுமில்லை. நான் அசுத்தமுள்ளவனாய் இருந்தபோது அதில் ஒன்றையும் எடுக்கவுமில்லை. இல்லையெனில், அதிலொன்றையும் இறந்தவர்களுக்குப் படைக்கவுமில்லை. நான் என் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தேன். நீர் கட்டளையிட்ட எல்லாவற்றையும் செய்திருக்கிறேன். 15 நீர் உம்முடைய பரிசுத்த இடமாகிய பரலோகத்திலிருந்து கீழே பார்த்து, உம்முடைய மக்களாகிய இஸ்ரயேலரை ஆசீர்வதியும். எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என ஆணையிட்டு வாக்குச்செய்தபடியே எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டையும் ஆசீர்வதியும்” என்று சொல்லுங்கள்.
யெகோவாவின் கட்டளைகளைப் பின்பற்றுதல்
16 உங்கள் இறைவனாகிய யெகோவா இந்த விதிமுறைகளையும், சட்டங்களையும் பின்பற்றும்படி இன்று கட்டளையிட்டிருக்கிறார். எனவே உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் இவற்றைக் கவனமாய் கைக்கொள்ளுங்கள். 17 யெகோவாவே உங்கள் இறைவன் என்றும், அவருடைய வழிகளிலே நடந்து அவருடைய விதிமுறைகளையும், கட்டளைகளையும், சட்டங்களையும் கைக்கொள்வீர்கள் என்றும், நீங்கள் அவருக்குக் கீழ்ப்படிவீர்கள் என்றும், நீங்கள் இன்று அறிவித்திருக்கிறீர்கள். 18 நீங்கள் அவருடைய மக்கள் என்றும், அவர் வாக்குக் கொடுத்தபடி நீங்கள் அவருடைய அருமையான உரிமைசொத்து என்றும், நீங்கள் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவேண்டும் என்றும் யெகோவா இன்று அறிவித்திருக்கிறார். 19 அவர் தாம் படைத்த எல்லா நாடுகளுக்கும் மேலாக உங்களைப் புகழ்ச்சியும், கீர்த்தியும், கனமும் உடையவர்களாக்குவார் என்றும், அவர் வாக்குக்கொடுத்தபடியே நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு, பரிசுத்தமான மக்களாய் இருப்பீர்கள் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.
<- உபாகமம் 25உபாகமம் 27 ->