Link to home pageLanguagesLink to all Bible versions on this site
7
தரிசனங்கள்
1 ஆண்டவராகிய யெகோவா எனக்குக் காண்பித்தது இதுவே: அரசனுடைய பங்கு அறுவடை செய்யப்பட்டது. அதன்பின் இரண்டாவது விளைச்சல் வளர்ந்து கொண்டிருந்தபோது, யெகோவா வெட்டுக்கிளிக் கூட்டங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். 2 வெட்டுக்கிளிக் கூட்டம் நாட்டை வெறுமையாக்கியது. அப்போது நான், “ஆண்டவராகிய யெகோவாவே, மன்னியும்! யாக்கோபு எப்படி உயிர் பிழைப்பான்? அவன் மிகவும் சிறியவனாயிருக்கிறானே!” எனக்கூறி அழுதேன்.

3 எனவே யெகோவா தமது மனதை மாற்றிக்கொண்டார்.

“இப்படி இது நடக்காது” என்றும் யெகோவா சொன்னார்.

4 பின்பு ஆண்டவராகிய யெகோவா எனக்குக் காண்பித்தது இதுவே: ஆண்டவராகிய யெகோவா நெருப்பினால் நியாயத்தீர்ப்பை நியமித்தார். அது மகா ஆழத்தை வற்றச் செய்தது; நிலத்தையும் சுட்டெரித்தது. 5 அப்பொழுது நான், “ஆண்டவராகிய யெகோவாவே, நான் கெஞ்சிக்கேட்கிறேன். இதை நிறுத்தும். யாக்கோபு எப்படி உயிர் தப்புவான்? அவன் மிகவும் சிறியவனாயிருக்கிறானே” என்று அழுதேன்.

6 எனவே யெகோவா தமது மனதை மாற்றிக்கொண்டார்.

“இதுவும் நடக்காது” என்று ஆண்டவராகிய யெகோவா சொன்னார்.
 
7 பின்பு ஆண்டவராகிய யெகோவா எனக்குக் காண்பித்தது இதுவே: யெகோவா தூக்குநூலின்படி கட்டப்பட்ட சுவரின் அருகில் நின்றுகொண்டிருந்தார். அவர் கையில் ஒரு தூக்குநூல் இருந்தது. 8 அப்பொழுது யெகோவா என்னிடம், “ஆமோஸே, நீ என்னத்தைக் காண்கிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு நான், “தூக்குநூலைக் காண்கிறேன்” என்றேன்.
அதற்கு யெகோவா, “பார், இஸ்ரயேல் என்னும் எனது மக்கள் மத்தியில் தூக்குநூலை வைக்கிறேன். அது அவர்களுடைய பாவங்களை எடுத்துக்காட்டும். நான் இனி அவர்களை தப்பவிடமாட்டேன்.
9 “ஈசாக்கின் உயர்ந்த இடங்கள் அழிக்கப்படும்.
இஸ்ரயேலின் பரிசுத்த இடங்கள் பாழாக்கப்படும்.
யெரொபெயாமின் வீட்டிற்கு எதிராக நான் வாளுடன் எழும்புவேன்” என்று சொன்னார்.
ஆமோஸ், அமத்சியா
10 அப்பொழுது பெத்தேலின் ஆசாரியனான அமத்சியா இஸ்ரயேல் அரசன் யெரொபெயாமிற்குச் சொல்லி அனுப்பிய செய்தியாவது: “ஆமோஸ் இஸ்ரயேலின் மத்தியிலே உமக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறான். அவனுடைய வார்த்தைகளை நாட்டு மக்களால் சகித்துக்கொண்டிருக்க முடியாதிருக்கிறது. 11 ஏனெனில் ஆமோஸ் சொல்வதாவது:
“ ‘யெரொபெயாம் வாளினால் சாவான்.
இஸ்ரயேலர் நிச்சயமாக தங்கள் சொந்த நாட்டிலிருந்து
நாடுகடத்தப்பட்டுத் தூரமாய் போவார்கள்.’ ”

12 அதன்பின் அமத்சியா ஆமோஸிடம், “தரிசனக்காரனே நாட்டைவிட்டு வெளியே போ; யூதா நாட்டிற்குத் திரும்பிப்போ; அங்கே உழைத்துச் சாப்பிடு; அங்கேயே உனது இறைவாக்கையும் சொல். 13 இனிமேல் பெத்தேலில் இறைவாக்கைச் சொல்லாதே. ஏனெனில் இது அரசனின் பரிசுத்த வழிபாட்டு இடமும், அரசுக்குரிய ஆலயத்தின் இருப்பிடமுமாய் இருக்கிறது” என்றான்.

14 அதற்கு ஆமோஸ் அமத்சியாவிடம், “நான் இறைவாக்கினனும் அல்ல; இறைவாக்கினனின் மகனும் அல்ல, நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்தி மரங்களை பராமரிக்கிறவனுமாய் இருந்தேன். 15 ஆனால் மந்தை மேய்த்துக்கொண்டிருந்த என்னை யெகோவா அழைத்து, ‘நீ போய், இஸ்ரயேலரனான என் மக்களுக்கு இறைவாக்குச் சொல்,’ என்றார். 16 ஆகவே இப்பொழுதும் நீ யெகோவாவினுடைய வார்த்தையைக் கேள்,

“ ‘நீ இஸ்ரயேலருக்கு விரோதமாக இறைவாக்கு சொல்லாதே,
ஈசாக்கின் வீட்டிற்கு விரோதமாய் பிரசங்கிப்பதை நிறுத்து’ என்கிறாயே.

17 “ஆதலால் யெகோவா சொல்வது இதுவே:

“ ‘உன் மனைவி இந்த நகரத்தில் வேசியாவாள்,
உன் மகன்களும் மகள்களும் வாளால் சாவார்கள்.
உன் நாடும் அளக்கப்பட்டு பங்கிடப்படும்,
நீயும் இறைவனை அறியாதவர்களின் நாட்டிலே சாவாய்.
நிச்சயமாகவே இஸ்ரயேலர் நாடுகடத்தப்படுவார்கள்.
தங்கள் சொந்த நாட்டிலிருந்து அகற்றப்படுவார்கள்.’ ”

<- ஆமோஸ் 6ஆமோஸ் 8 ->