6 அவன் எட்டு அல்லது பத்து நாட்கள் அவர்களுடன் தங்கிவிட்டு, செசரியாவுக்குப் போனான். மறுநாள் அவன் நீதிமன்றத்தைக் கூட்டி, பவுலைத் தனக்கு முன்பாகக் கொண்டுவரும்படி உத்தரவிட்டான். 7 பவுல் அங்கே வந்தபோது, எருசலேமிலிருந்து அங்கு வந்த யூதர் அவனைச்சுற்றி நின்றார்கள், அவர்கள் அவன்மேல் மிகவும் கடுமையான, அநேக குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள். ஆனாலும், அவர்களால் அவற்றை நிரூபிக்க முடியாமல் போயிற்று.
8 அப்பொழுது பவுல் தன் சார்பாகப் பேசிச் சொன்னதாவது: “நான் யூதருடைய சட்டத்திற்கு எதிராகவோ, ஆலயத்திற்கு எதிராகவோ, ரோம பேரரசன் சீசருக்கு எதிராகவோ, எந்தக் குற்றமும் செய்யவில்லை” என்றான்.
9 பெஸ்து யூதருக்கு தயவுகாட்ட விரும்பியவனாய் பவுலிடம், “நீ எருசலேமுக்கு வந்து, அங்கே எனக்கு முன்பாக இந்தக் குற்றச்சாட்டுகளைக் குறித்து விசாரணை செய்ய உடன்படுகிறாயா?” என்று கேட்டான்.
10 அதற்குப் பவுல் அவனிடம், “நான் இப்பொழுது ரோமப் பேரரசனுடைய நீதிமன்றத்துக்கு முன்பாக நிற்கின்றேன். இங்கேயே நான் விசாரணை செய்யப்படவேண்டும். நீர் நன்றாய் அறிந்திருக்கிறபடி, நான் யூதருக்கு எதிராக எவ்வித குற்றமும் செய்யவில்லை. 11 ஆனால், மரண தண்டனை பெறுவதற்குத் தகுதியான ஏதாவது குற்றத்தை நான் செய்திருந்தால், நான் சாவதற்கு மறுக்கவில்லை. ஆனால், எனக்கு எதிராக இந்த யூதரால் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையற்றவைகளாய் இருக்குமானால், அவர்களிடம் என்னை ஒப்படைக்க யாருக்கும் உரிமை இல்லை. நான் பேரரசன் சீசருக்கு மேல்முறையீடு செய்கிறேன்” என்றான்.
12 பெஸ்து தனது ஆலோசகருடன் கலந்து ஆலோசித்துவிட்டுப் பவுலிடம், “நீ ரோம பேரரசன் சீசருக்கு மேல்முறையீடு செய்திருக்கிறாய், நீ ரோம பேரரசனிடமே போவாய்” என்றான்.
16 “அதற்கு நான் அவர்களிடம், ‘ஒருவன் தன்மேல் குற்றம் சாட்டுகிறவர்களுக்கு முன்நின்று, அவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கு எதிராக, தனது சார்பாகப் பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அதற்குமுன், அவனைக் குற்றவாளியாக ஒப்படைப்பது ரோமரின் வழக்கம் அல்ல’ என்று அவர்களுக்குச் சொன்னேன். 17 அவர்கள் என்னுடன் இங்கே வந்தபோது, நான் வழக்கைத் தாமதப்படுத்தவில்லை. மறுநாளே நான் நீதிமன்றத்தைக் கூட்டி, பவுல் என்கிற அவனைக் கொண்டுவரும்படி உத்தரவிட்டேன். 18 அவன்மேல் குற்றம் சாட்டியவர்கள் பேசுவதற்கு எழுந்து நின்றபோது, நான் எதிர்பார்த்த குற்றங்கள் எதையும் அவர்கள் அவன்மேல் சுமத்தவில்லை. 19 ஆனால் அவர்கள் தங்களுடைய சொந்த பாரம்பரியத்தைக் குறித்தும், உயிரோடு இருப்பதாகப் பவுல் கூறும் இயேசு என்னும் இறந்துபோன ஒருவனைக் குறித்து தகராறு செய்தார்கள். 20 இப்படிப்பட்ட காரியங்களை எப்படி விசாரணை செய்வது என்று தெரியாமல் நான் இருந்தேன்; அதனால் நான் அவனிடம், ‘நீ எருசலேமுக்குப் போய், இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி அங்கே விசாரணை செய்யப்பட உடன்படுகிறாயா?’ என்று கேட்டேன். 21 ஆனால் பவுலோ, ரோமப் பேரரசனுடைய தீர்ப்புக்காக தன்னைக் காவலில் வைத்துக்கொள்ளும்படி மேல்முறையீடு செய்தான். எனவே அவன் ரோமப் பேரரசனிடம் அனுப்பப்படும் வரைக்கும், தடுப்புக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டேன்” என்றான்.
22 அப்பொழுது அகிரிப்பா அரசன் பெஸ்துவிடம், “அவன் சொல்வதை நானும் கேட்க விரும்புகிறேன்” என்றான்.