1 இதை நன்றாய் அறிந்துகொள்: கடைசி நாட்களில் மிகப் பயங்கரமான காலங்கள் உண்டாகும். 2 மக்கள் தங்களில் மாத்திரம் அன்பு செலுத்துகிறவர்களாகவும், பண ஆசையுள்ளவர்களாகவும், கர்வம் உடையவர்களாகவும், பெருமையுள்ளவர்களாகவும், தூற்றித்திரிகிறவர்களாகவும், தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும், நன்றி கெட்டவர்களாகவும், பரிசுத்தம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். 3 அவர்கள் அன்பில்லாதவர்களாகவும், மன்னிக்கும் தன்மையற்றவர்களாகவும், அவதூறு பேசுகிறவர்களாகவும், சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாகவும், மிருகத்தனமுள்ளவர்களாகவும், நன்மையை விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள். 4 மேலும், துரோகம் செய்கிறவர்களாகவும், முன்யோசனை அற்றவர்களாகவும், இறுமாப்புடையவர்களாகவும், இறைவனை நேசிக்காமல், சிற்றின்பங்களை விரும்புகிறவர்களாகவும் இருப்பார்கள். 5 வெளித்தோற்றத்தில் இறை பக்தி உள்ளவர்களாகக் காணப்படுவார்கள். ஆனால் இறை பக்தியின் வல்லமை இல்லாதவர்களாயிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களோடு எவ்விதத் தொடர்பும் வைக்காதே.
6 இப்படிப்பட்டவர்கள்தான் வீடுகளுக்குள் நுழைந்து, மனவுறுதியற்ற பெண்களைத் தம்வசப்படுத்துகிறார்கள். இந்தப் பெண்களோ பாவங்கள் நிறைந்தவர்களாகவும், பலவித தகாத ஆசைகளினால் இழுபடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். 7 இவர்கள் எப்போதும் கற்றுக்கொள்கிறார்கள், ஆனால் ஒருபோதும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள இயலாதவர்களாய் இருக்கிறார்கள். 8 யந்நேயும் யம்பிரேயும் மோசேயை எதிர்த்து நின்றதுபோல, இந்த மனிதரும் சத்தியத்திற்கு எதிர்த்து நிற்கிறார்கள். இவர்கள் சீர்கெட்ட மனமுடையவர்கள். விசுவாசத்தைப் பொறுத்தமட்டிலோ, இவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்களே! 9 ஆனாலும் இவர்கள் இப்படியே அதிக தூரம் போகமாட்டார்கள். ஏனெனில் யந்நேயுவிற்கும் யம்பிரேயுவிற்கும் நடந்ததுபோல, இவர்களுடைய மூடத்தனமும் எல்லோருக்கும் வெளிப்படும்.