Link to home pageLanguagesLink to all Bible versions on this site
5
இஸ்ரயேலுக்குத் தாவீது அரசனாகுதல்
1 இஸ்ரயேலின் கோத்திரங்கள் அனைத்தும் எப்ரோனிலிருந்த தாவீதிடம் வந்து, “நாங்கள் உமது எலும்பும் உமது சதையுமாயிருக்கிறோம். 2 கடந்த நாட்களில் சவுல் எங்களுக்கு அரசனாயிருந்தபோது, இஸ்ரயேலின் இராணுவ நடவடிக்கைக்கு தலைமை வகித்து வழிநடத்தியவர் நீரே; அன்றியும் யெகோவா உம்மிடம், ‘நீ இஸ்ரயேல் மக்களுக்கு மேய்ப்பனாகி அவர்களுக்கு ஆளுநனாவாய்’ என்றும் சொல்லியிருக்கிறாரே” என்றனர்.

3 இஸ்ரயேலின் முதியவர்கள் அனைவரும் எப்ரோனிலிருந்த தாவீது அரசனிடம் வந்தார்கள்; தாவீது அரசன் எப்ரோனில் யெகோவா முன்னிலையில் அவர்களுடன் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டபின், அவர்கள் தாவீதை இஸ்ரயேலுக்கு அரசனாக அபிஷேகம் செய்தார்கள்.

4 தாவீது அரசனானபோது முப்பது வயதுடையவனாயிருந்தான். அவன் நாற்பது வருடங்கள் அரசாண்டான். 5 அவன் எப்ரோனில் யூதாவை ஏழு வருடம் ஆறு மாதமும், எருசலேமில் இஸ்ரயேலர் அனைவரையும், யூதாவையும் முப்பத்துமூன்று வருடங்களும் அரசாண்டான்.

தாவீது எருசலேமை கைப்பற்றுதல்
6 அரசர் தன் மனிதருடன் படையெடுத்து எருசலேமுக்குப் போய் அங்கே குடியிருந்த எபூசியரை தாக்குவதற்குச் சென்றான். எபூசியர் தாவீதிடம், “உன்னால் இங்கு உள்ளே வரமுடியாது. இங்குள்ள குருடரும், முடவரும் உன்னைத் துரத்திவிடுவார்கள்” என்றார்கள். தாவீதினால் உள்ளே வரமுடியாது என அவர்கள் நினைத்தார்கள். 7 ஆனாலும் தாவீதின் நகரமான சீயோன் கோட்டையை தாவீது கைப்பற்றினான்.

8 அன்றையதினம் தாவீது, “எபூசியரை முறியடிப்பவன் எவனும் தாவீதின் பகைவர்களான குருடரையும், முடவரையும் எதிர்ப்பதற்கு நீர்க்குழாய் வழியாக ஏறிப்போகவேண்டும்” எனச் சொல்லியிருந்தான். இதனால்தான் குருடரும், முடவரும் அரண்மனைக்குள்ளே[a] போகக்கூடாது என்பார்கள்.

9 பின்பு தாவீது அந்த கோட்டையில் வாழ்ந்து, அதைத் தாவீதின் நகரம் என அழைத்தான். அவன் அதைச் சுற்றிலும் மில்லோவிலிருந்து உட்புறமாக மதிலைக் கட்டினான். 10 சேனைகளின் இறைவனாகிய யெகோவா தாவீதோடு இருந்தபடியால் அவன் மென்மேலும் வலிமையடைந்தான்.

11 தீருவின் அரசனான ஈராம் தன் தூதுவர்களோடு கேதுரு மரத்தடிகளையும், தச்சர்களையும், கல்வேலை செய்வோரையும் தாவீதிடம் அனுப்பினான். அவர்கள் தாவீதிற்கு ஒரு அரண்மனையைக் கட்டினார்கள். 12 யெகோவா தன்னை இஸ்ரயேலுக்கு அரசனாக உறுதிப்படுத்தினார் என்றும், தன் மக்களாகிய இஸ்ரயேலருக்காக தனது ஆட்சியை மேன்மைப்படுத்தினார் என்றும் தாவீது அப்பொழுது அறிந்துகொண்டான்.

13 தாவீது எப்ரோனில் இருந்து புறப்பட்ட பின்பு, எருசலேமிலே இன்னும் பல மனைவிகளையும் வைப்பாட்டிகளையும் எடுத்துக்கொண்டான். அவர்கள்மூலம் அவனுக்கு மேலும் பல மகன்களும் மகள்களும் பிறந்தார்கள். 14 எருசலேமில் அவனுக்குப் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள்: சம்மூவா, ஷோபாப், நாத்தான், சாலொமோன், 15 இப்கார், எலிசூவா, நெப்பேக், யப்பியா, 16 எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்பனவாகும்.

தாவீது பெலிஸ்தியரை முறியடித்தல்
17 தாவீது இஸ்ரயேலரின் அரசனாக அபிஷேகம் செய்யப்பட்டதை பெலிஸ்தியர் கேள்விப்பட்டபோது, அவர்கள் அனைவரும் தங்கள் எல்லா படைப்பலத்தோடும் அவனைத் தேடிச்சென்றார்கள். அதைக் கேள்விப்பட்ட தாவீதோ அரணான இடத்திற்குப் போனான். 18 பெலிஸ்தியரோ ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே வந்து, அங்கே பரவி இருந்தார்கள். 19 அப்பொழுது தாவீது யெகோவாவிடம், “நான் பெலிஸ்தியரை எதிர்க்கப் போகலாமா? அவர்களை எனது கையில் ஒப்புக்கொடுப்பீரா?” என்று கேட்டான்.
அதற்கு யெகோவா, “நீ போ, நிச்சயமாக நான் பெலிஸ்தியரை உன் கையில் ஒப்படைப்பேன்” என்றார்.

20 எனவே தாவீது பாகால் பிராசீமுக்குப்போய் பெலிஸ்தியரை அங்கே தோற்கடித்தான். அப்பொழுது அவன், “தண்ணீர் மடை திறந்தோடுவதுபோல, யெகோவா என் பகைவரை எனக்கு முன்பாக முறிந்தோடப்பண்ணினார்” என்றான். எனவே அந்த இடம் பாகால் பிராசீம் என அழைக்கப்பட்டது. 21 அப்பொழுது பெலிஸ்தியர் தங்கள் விக்கிரகங்களைக் கைவிட்டார்கள். அவற்றைத் தாவீதும் அவன் மனிதர்களும் எடுத்துச் சென்றார்கள்.

22 பெலிஸ்தியர் மீண்டும் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரந்து காத்திருந்தார்கள். 23 எனவே தாவீது யெகோவாவிடம் விசாரித்தபோது, அதற்கு அவர், “நீ அவர்களை நேருக்குநேராக தாக்காமல், அவர்களுக்குப் பின்னாகச் சுற்றிப்போய் குங்கிலிய மரங்களுக்கு முன்னிருந்து தாக்கு; 24 குங்கிலிய மரங்களின் உச்சியில் சலசலக்கும் இரைச்சலைக் கேட்கும்போது விரைவாகச் செல்வாயாக. ஏனெனில், இதுவே பெலிஸ்தியரின் படையைத் தாக்குவதற்கு யெகோவா உனக்குமுன் போயிருக்கிறார் என்பதற்கு அடையாளம்” என்றார். 25 எனவே யெகோவா கட்டளையிட்டபடியே தாவீது செய்தான், பெலிஸ்தியரை கிபியோன் தொடங்கி கேசேர் எல்லைவரை துரத்தி முறியடித்தான்.

<- 2 சாமுயேல் 42 சாமுயேல் 6 ->