1 சவுல் இறந்தபின்பு, தாவீது அமலேக்கியரை முறியடித்து சிக்லாகிற்கு வந்து அங்கே இரண்டு நாட்கள் தங்கியிருந்தான். 2 மூன்றாவது நாள் சவுலின் முகாமிலிருந்து கிழிந்த உடையோடும், புழுதிபடிந்த தலையோடும் ஒரு மனிதன் வந்தான். அவன் தாவீதிடம் வந்தபோது, மரியாதை செலுத்தும்படி தரையில் விழுந்து வணங்கினான்.
3 அப்பொழுது தாவீது அவனிடம், “நீ எங்கிருந்து வந்தாய்?” என்று கேட்டான்.
அதற்கு அவன், “இஸ்ரயேலின் முகாமிலிருந்து தப்பி வந்தேன்” என்றான்.
4 மேலும் தாவீது அவனிடம், “என்ன நடந்தது என எனக்குச் சொல்” என்றான்.
அதற்கு அந்த மனிதன், “போர்க்களத்திலிருந்து மக்கள் ஓடிவிட்டார்கள். பலர் வெட்டுண்டு இறந்துபோனார்கள். அதோடு சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துபோனார்கள்” என்றான்.
5 அப்பொழுது தாவீது, அச்செய்தியைக் கொண்டுவந்த வாலிபனிடம், “சவுலும் அவன் மகன் யோனத்தானும் இறந்தது உனக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டான்.
6 அதற்கு அவன், “யுத்தத்தில் நான் கில்போவா மலைக்குப் போகநேரிட்டது” எனக் கூறினான். “அங்கே சவுல் தன் ஈட்டியின்மேல் குத்தப்பட்டு கிடந்தார். அவ்வேளையில் தேர்களும், வீரர்கள் ஏறியிருந்த குதிரைகளும் அவனை நெருங்கிக் கொண்டிருந்தன. 7 அப்பொழுது அவர் திரும்பி என்னைப் பார்த்து, என்னைக் கூப்பிட்டார். எனவே நான் அவரிடம், ‘நான் உமக்கு என்ன செய்யவேண்டும்?’ எனக் கேட்டேன்.
8 “அதற்கு அவர், ‘நீ யார்?’ என்று கேட்டார்.
“ ‘நான் ஒரு அமலேக்கியன்’ என்றேன்.
9 “அப்பொழுது அவர், ‘நீ இங்கு வந்து என்னைக் கொன்றுவிடு; நான் மரண வேதனையுடன் இன்னும் உயிரோடிருக்கிறேன்’ என்றார்.
10 “உடனே நான் கிட்டப்போய் அவரைக் கொன்றேன். ஏனெனில் அவர் காயப்பட்டு, விழுந்தபின்பு பிழைக்கமாட்டார் என்பது எனக்குத் தெரிந்தது. அதன்பின் நான் அவர் தலையிலிருந்த அரச கிரீடத்தையும், கையிலிருந்த வளையல்களையும் எடுத்து என் ஆண்டவனாகிய உம்மிடம் கொண்டுவந்தேன்” என்றான்.
11 இச்செய்தியைக் கேட்ட தாவீதும், அவனோடிருந்த மனிதர் எல்லோரும் தங்கள் உடைகளைக் கிழித்தார்கள். 12 சவுலும் அவன் மகன் யோனத்தானும், யெகோவாவின் வீரர்களும், இஸ்ரயேல் குடும்பத்தாரும் வாளால் வெட்டுண்டு இறந்ததினால் அவர்கள் துக்கங்கொண்டாடி, அழுது அன்று மாலைவரை அவர்களுக்காக உபவாசமிருந்தார்கள்.
13 தாவீது அச்செய்தியை கொண்டுவந்த வாலிபனிடம், “நீ எந்த இடத்தைச் சேர்ந்தவன்?” என்று கேட்டான்.
அதற்கு அவன், “நான் அந்நியனான ஒரு அமலேக்கியனின் மகன்” என்றான்.
14 அப்பொழுது தாவீது அவனிடம், “யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவனை கொல்வதற்கு உன் கையை நீட்ட நீ ஏன் பயப்படவில்லை” எனக் கேட்டான்.
15 உடனே தாவீது தன் ஆட்களில் ஒருவனை கூப்பிட்டு, “அவனைக் கொலைசெய்” என்றான். அவ்வாறே பணியாள் அவனைக் கொன்றான். 16 அப்பொழுது தாவீது அவனிடம், “உன் இரத்தப்பழி உன்னுடைய தலைமேல் இருக்கட்டும். ஏனெனில், ‘யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவரை நான் கொன்றேன்’ என உன் வாயே உனக்கெதிராய் சாட்சி சொன்னது” என்றான்.
சவுல் மற்றும் யோனத்தானுக்காக தாவீது புலம்புதல்
17 தாவீது சவுலுக்காகவும் யோனத்தானுக்காகவும் இந்தப் புலம்பலைப் பாடினான்; 18 யூதாவின் மக்களுக்கு இந்த வில்லுப்பாட்டு கற்பிக்கப்பட வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டான். இது யாசேரின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது:[a]
19 “இஸ்ரயேலே, உன் மகிமை உங்கள் மேடுகளில் கொலையுண்டு கிடக்கிறது.
aபண்டைய போர் பாடல்களின் தொகுப்பு யாசேர் புத்தகத்தில் 10:13 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. எபிரெயத்தில் யாசேர் என்பதற்கு நேர்மை அல்லது நியாயம் என்று பொருள்.