1 ஆகையால் என் அன்பு நண்பர்களே, இவ்விதமான வாக்குத்தத்தங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய உடலையும், ஆவியையும் அசுத்தப்படுத்துகிற எல்லாவற்றிலுமிருந்தும், நம்மைத் தூய்மையாக்கிக் கொள்வோம்; இறைவன் மேலுள்ள பயபக்தியின் நிமித்தம், நமது பரிசுத்தத்தை முழுமையாக்கிக் கொள்வோம்.
5 நாங்கள் மக்கெதோனியாவை வந்துசேர்ந்த போதும், எங்கள் உடலுக்கு எவ்வித ஆறுதலும் இல்லாதிருந்தது. எல்லாப் பக்கங்களிலும் கஷ்டங்களே எங்களைச் சூழ்ந்திருந்தன; வெளியே முரண்பாடுகளும், உள்ளே பயங்களும் ஆட்கொண்டிருந்தன. 6 ஆனால் மனசோர்வு அடைகிறவர்களை ஆறுதல்படுத்துகிற இறைவன், தீத்துவின் வரவால் எங்களை ஆறுதல்படுத்தினார். 7 அவன் வருகையால் மட்டுமல்ல, நீங்கள் எவ்விதம் அவனை உற்சாகப்படுத்தினீர்கள் என்று கேள்விப்பட்டதினாலும், நாங்கள் ஆறுதலடைந்தோம். நீங்கள் என்னைப் பார்க்க எவ்வளவாக விரும்புகிறீர்கள் என்பதையும், நீங்கள் எவ்வளவாய் கவலைப்படுகிறீர்கள் என்பதையும், என்னை ஆதரிக்க நீங்கள் எவ்வளவு ஆவலுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதையும் குறித்தும் அவன் எங்களுக்குச் சொன்னான். இதனால் நான் மிகவும் சந்தோஷமடைந்தேன்.
8 நான் உங்களுக்கு எழுதிய கடிதம் உங்களைத் துக்கப்படுத்தியிருந்தாலும், அதை எழுதியதற்காக நான் கவலைப்படவில்லை. எனது கடிதம் உங்களைக் கவலைப்படுத்தியதை அறிந்தபோது நான் கவலைப்பட்டது உண்மைதான். நீங்கள் சிறிது காலத்திற்கு மட்டுமே கவலைப்பட்டிருந்தீர்கள். 9 ஆனால், இப்பொழுது நான் மகிழ்ச்சியடைகிறேன்; நீங்கள் கவலைப்பட்டதற்காக அல்ல, உங்களுடைய துக்கம் உங்களில் மனமாறுதலை ஏற்படுத்தியதற்காகவே மகிழ்ச்சியடைகிறேன். இறைவனுடைய எண்ணத்தின்படி நீங்கள் துக்கமடைந்தீர்கள். இதனால், எங்கள் மூலமாய் உங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. 10 ஏனெனில், இறைவன் ஏற்படுத்தும் துக்கம் மனமாறுதலைக் கொண்டுவந்து, நம்மை இரட்சிப்புக்குள் வழிநடத்துகிறது. அது தொடர்ந்து மனவருத்தத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால், உலகப்பிரகாரமான துக்கம் மரணத்தையே கொண்டுவரும். 11 இறைவன் ஏற்படுத்திய இந்தத் துக்கம், உங்களில் எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தியிருக்கிறது என்று பாருங்கள்: நீங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க உங்களுக்கு எவ்வளவு ஆர்வம்! எவ்வளவு வாஞ்சை! அதைப்பற்றி எவ்வளவு கோபம்! எவ்வளவு அச்சம்! நியாயப்படுத்துதலைக் காண எவ்வளவு ஆவல்! எவ்வளவு அக்கறை! எவ்வளவு ஆயத்தம்! இவ்வாறு இவ்விஷயத்தில் எல்லாவிதத்திலும் நீங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். 12 எனவே நான் உங்களுக்கு அந்தக் கடிதத்தை எழுதியபோதும்கூட, அந்தத் தீமை செய்தவனுக்காகவோ, அந்தத் தீமையினால் பாதிக்கப்பட்டவனுக்காகவோ எழுதவில்லை. இறைவனுடைய பார்வையில், நீங்கள் எங்களுக்காக உங்களை எவ்வளவாய் அர்ப்பணித்திருக்கிறீர்கள் என்பதை நீங்களே அறியும்படியாகவே நான் அதை எழுதினேன். 13 இவை எல்லாவற்றினாலும் நாங்கள் உற்சாகமடைந்திருக்கிறோம்.