Link to home pageLanguagesLink to all Bible versions on this site
4
மண்பாண்டங்களில் செல்வம்
1 ஆகவே நாங்கள் இறைவனுடைய இரக்கத்தினால் இந்த ஊழியத்தைப் பெற்றிருக்கிறபடியால், நாங்கள் மனந்தளர்ந்து போவதில்லை. 2 வெட்கத்துக்குரிய இரகசியமான செயல்களை நாங்கள் கைக்கொள்வதில்லை. நாங்கள் ஏமாற்றுகிறவர்களாய் இருக்கவில்லை. இறைவனுடைய வார்த்தையை நாங்கள் திரித்துக் கூறவதில்லை. மாறாக, சத்தியத்தை வெளிப்படையாய் எடுத்துக்கூறுகிறோம். இப்படி, இறைவனுக்கு முன்பாக ஒவ்வொரு மனிதனின் மனசாட்சிக்கும் எங்களைப்பற்றி நற்சான்று அளிக்கிறோம். 3 எங்களுடைய நற்செய்தி மறைக்கப்பட்டிருந்தால், அது அழிந்து போகிறவர்களுக்கே மறைக்கப்பட்டிருக்கிறது. 4 இவ்வுலகின் தேவன் அவிசுவாசிகளாகிய அவர்களின் மனங்களைக் குருடாக்கியிருக்கிறான். அதனாலேயே இறைவனின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மகிமை பொருந்திய நற்செய்தியின் ஒளியை, அவர்களால் காண முடியாதிருக்கிறது. 5 ஏனெனில் நாங்கள் எங்களைக் குறித்து பிரசங்கிப்பதில்லை. இயேசுகிறிஸ்துவைக் கர்த்தர் என்றும், எங்களையோ இயேசுவுக்காக உங்கள் ஊழியர்கள் என்றும் பிரசங்கிக்கிறோம். 6 “இருளின்மேல் வெளிச்சம் பிரகாசிக்கட்டும்”*ஆதி. 1:3 எனக்கூறிய இறைவன், தமது ஒளியை எங்கள் இருதயங்களில் பிரகாசிக்கச் செய்திருக்கிறார். கிறிஸ்துவின் முகத்திலே உள்ள இறைவனது மகிமையின் அறிவின் ஒளியை எங்களுக்குக் கொடுப்பதற்கே அவர் இதைச் செய்தார்.

7 ஆனால் இந்தச் செல்வத்தை மண்பாண்டங்களில் நாங்கள் பெற்றிருக்கிறோம். இதனால், எல்லாவற்றிற்கும் மேலான இந்த வல்லமை எங்களிடமிருந்து அல்ல, இறைவனிடமிருந்தே கிடைக்கின்றது என்பதை எல்லோரும் அறிவார்கள். 8 ஒவ்வொரு பக்கத்திலும் எங்களுக்கு நெருக்கடியே ஏற்படுகிறது, ஆனாலும் நாங்கள் நசுங்குண்டு போவதில்லை; குழப்பமடைந்திருக்கிறோம், ஆனாலும் மனந்தளர்ந்து போவதில்லை; 9 துன்புறுத்தப்பட்டோம், ஆனாலும் கைவிடப்படுவதில்லை; அடித்து வீழ்த்தப்பட்டோம், ஆனாலும் அழிந்து போவதில்லை. 10 எங்கள் உடலில் இயேசுவின் வாழ்வு வெளிப்படுபடி, நாங்கள் எப்பொழுதும் இயேசுவின் மரண வேதனையை எங்கள் உடலில் அனுபவிக்கிறோம். 11 இதனால் உயிரோடிருக்கும் நாங்கள் இயேசுவினிமித்தம் எப்பொழுதும் மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். இதனால் அவருடைய வாழ்வு சாகும் தன்மையுள்ள எங்கள் உடலில் வெளிப்படுகிறது. 12 இப்படியாகவே, மரணம் எங்களில் செயலாற்றுகிறது. அதனால் வாழ்வு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.

13 “நான் விசுவாசித்தேன்; ஆகையால்தான் நான் பேசினேன்”சங். 116:10 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்) என்று வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி. அந்த விசுவாசத்தின் ஆவியினாலேயே, நாங்களும் விசுவாசிக்கிறோம். ஆதலால் பேசுகிறோம். 14 ஏனெனில், கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பிய இறைவன், இயேசுவுடன்கூட எங்களையும் உயிரோடு எழுப்புவார். இவ்விதம் அவர் எங்களையும் உங்களோடுகூட தமது சமுகத்தில் நிறுத்துவார். இதை நாங்கள் அறிந்திருக்கிறோம். 15 இவையெல்லாம் உங்கள் நன்மைக்காகவே உண்டாகியிருக்கிறது. இதனால், மென்மேலும் அதிகதிகமான மக்களிடம் அவரின் கிருபை சென்றடையும்போது, நன்றி செலுத்துதல் நிரம்பிவழியும். அப்போது இறைவனின் மகிமை அதிகதிகமாய்ப் போற்றிப் புகழப்படும்.

16 ஆதலால் நாங்கள் மனந்தளர்ந்து போவதில்லை. வெளிப்படையாக வலுவிழந்து போனாலும், நாங்கள் உள்ளாக நாளுக்குநாள் புதுப்பிக்கப்படுகிறோம். 17 ஏனெனில் கணப்பொழுது எங்களுக்கு ஏற்படும் சிறுசிறு துன்பங்கள், அவற்றிலும் மிகப்பெரிதான நித்திய மகிமையை விளைவிக்கின்றன. 18 எனவே நாங்கள் காணப்படுபவைகளிலல்ல, காணப்படாதவைகளிலேயே கண்நோக்கமாயிருக்கிறோம். ஏனெனில் காணப்படுபவை தற்காலிகமானவை, காணப்படாதவைகளோ நித்தியமானவை.

<- 2 கொரிந்தியர் 32 கொரிந்தியர் 5 ->