5 அப்பொழுது சேபாவின் அரசி அரசனிடம், “உமது சாதனைகளையும், உமது ஞானத்தையும் பற்றி நான் எனது நாட்டில் கேள்விப்பட்ட செய்தி உண்மையானது. 6 ஆனால் நான் வந்து என் சொந்தக் கண்களால் பார்க்கும்வரை அவர்கள் சொன்னவற்றை நம்பவேயில்லை. உண்மையிலேயே உமது ஞானத்தின் மேன்மையில் பாதியாகிலும் எனக்குச் சொல்லப்படவில்லை. நான் கேள்விப்பட்டதைப் பார்க்கிலும், நீர் அதிக மேன்மை உடையவராயிருக்கிறீர். 7 உமது மக்கள் எவ்வளவு சந்தோஷமுடையவர்களாய் இருக்கவேண்டும். எப்பொழுதும் உமது முன்நின்று உமது ஞானத்தைக் கேட்கும் உமது அதிகாரிகள் எவ்வளவு மகிழ்ச்சியுடையவர்களாய் இருக்கவேண்டும். 8 உம்மில் பிரியங்கொண்டு, உம்மைத் தமது அரியணையில் அமர்த்தி, தமக்காக உம்மை அரசனாக்கிய உம்முடைய இறைவனாகிய யெகோவா துதிக்கப்படுவாராக. இஸ்ரயேல் மக்களை நிலைநிறுத்த உமது இறைவன் அவர்கள்மேல் கொண்டுள்ள அன்பினால், நீர் அவர்களுக்கு நீதியையும் நியாயத்தையும் காத்து நடத்தும்படி அவர்களின்மேல் உம்மை அரசனாக்கியிருக்கிறார்” என்று சொன்னாள்.
9 பின்பு அவள் அரசனுக்கு நூற்றிருபது தாலந்து தங்கத்தையும், பெருந்தொகையான வாசனைப் பொருட்களையும் விலைமதிப்புள்ள மாணிக்கக் கற்களையும் கொடுத்தாள். சேபாவின் அரசி சாலொமோன் அரசனுக்குக் கொடுத்த வாசனைப் பொருட்களைப்போல, அங்கே ஒருபோதும் அவை இருந்ததில்லை.
10 ஈராமின் மனிதரும், சாலொமோனின் மனிதரும் ஓப்பீரிலிருந்து தங்கத்தைக் கொண்டுவந்தார்கள். அத்துடன் அவர்கள் அல்மக் வாசனை மரங்களையும், விலைமதிப்புள்ள மாணிக்கக் கற்களையும் கொண்டுவந்தார்கள். 11 அரசன் அந்த அல்மக் மரங்களை யெகோவாவின் ஆலயத்துக்கும், அரச அரண்மனைக்கும் படிகளை அமைக்கவும், இசைக் கலைஞர்களுக்கான யாழ்களையும், வீணைகளையும் செய்வதற்கும் பயன்படுத்தினான். அப்படிப்பட்டவைகள் யூதாவில் ஒருபோதும் காணப்படவில்லை.
12 சாலொமோன் அரசன் சேபாவின் அரசி ஆசைப்பட்டுக் கேட்ட எல்லாவற்றையும் கொடுத்தான். அவள் தனக்குக் கொண்டுவந்தவற்றைவிட அதிகமாகவே அவன் அவளுக்குக் கொடுத்தான். அதன்பின் அவள் புறப்பட்டு தன் பரிவாரங்களோடு தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போனாள்.
15 சாலொமோன் அரசன் அடித்த தங்கத்தகட்டால் இருநூறு பெரிய கேடயங்களைச் செய்தான். ஒவ்வொரு கேடயத்திற்கும் அறுநூறு சேக்கல்[b] எடையுள்ள அடிக்கப்பட்ட தங்கம் செலவு செய்யப்பட்டது. 16 அத்துடன் அவன் அடித்த தங்கத்தால் முந்நூறு சிறிய கேடயங்களையும் செய்தான். ஒவ்வொரு கேடயத்திற்கும் முந்நூறு சேக்கல் எடையுள்ள தங்கம் பயன்படுத்தப்பட்டது. அரசன் அவைகளை லெபனோன் வனம் என்ற அரண்மனையில் வைத்தான்.
17 அதன்பின் அரசன் ஒரு பெரிய அரியணையைச் செய்து யானைத் தந்தத்தினால் அலங்கரித்தான். பின்பு அதை சுத்தமான தங்கத்தகட்டால் மூடினான். 18 அரியணைக்கு ஆறு படிகளும் அதனுடன் இணைக்கப்பட்ட தங்கத்தினால் செய்த ஒரு பாதபடியும் இருந்தது. அரியணையின் இரு பக்கங்களிலும் கைத்தாங்கிகள் இருந்தன. அவற்றின் இருபுறங்களிலும் ஒவ்வொரு சிங்கத்தின் உருவம் இருந்தது. 19 ஒவ்வொரு படியின் முனையிலும் இரு சிங்கங்களாக ஆறுபடிகளிலும் பன்னிரண்டு சிங்க உருவங்கள் நின்றன. வேறு எந்த அரசாட்சியிலும் இப்படியான ஒரு அரியணை எக்காலத்திலும் செய்யப்பட்டிருக்கவில்லை. 20 சாலொமோன் அரசனின் பானபாத்திரங்கள் யாவும் தங்கத்தினாலேயே செய்யப்பட்டிருந்தன. லெபனோன் வனமாளிகை மண்டபத்திலிருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் எல்லாம் சுத்தத் தங்கத்தினால் செய்யப்பட்டிருந்தன. வெள்ளியினால் ஒன்றும் செய்யப்படவில்லை. ஏனெனில் சாலொமோனின் நாட்களில் வெள்ளி குறைந்த மதிப்புடையதாகவே கருதப்பட்டது. 21 அரசனின் வியாபாரக் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரர்களுடன் தர்ஷீசுக்குப் போய்வரும். மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கப்பல்கள் போய்த் திரும்பி வரும்போது தங்கம், வெள்ளி, யானைத்தந்தம், குரங்குகள், மயில்கள் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு வந்தன.
22 பூமியிலுள்ள மற்ற அரசர்களைவிட அரசன் சாலொமோன் செல்வத்திலும் ஞானத்திலும் மேம்பட்டவனாய் இருந்தான். 23 பூமியிலுள்ள அரசர்கள் எல்லோரும் சாலொமோனின் இருதயத்தில் இறைவன் கொடுத்த ஞானத்தைக் கேட்பதற்கு அவனை நாடி வந்தார்கள். 24 வருடந்தோறும் அவனிடம் வந்த ஒவ்வொருவரும் அன்பளிப்பைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் வெள்ளிப் பாத்திரங்கள், தங்கப் பாத்திரங்கள், அங்கிகள், ஆயுதங்கள், வாசனைப் பொருட்கள், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள்.
25 சாலொமோனிடம் குதிரைகளுக்கும், தேர்களுக்கும் 4,000 தொழுவங்கள் இருந்தன. 12,000 குதிரைகளை தேர்ப் பட்டணங்களிலும் அரசன் தன்னுடன் எருசலேமிலும் வைத்திருந்தான். 26 அவன் ஐபிராத்து நதிதொடங்கி எகிப்தின் எல்லை மட்டுமுள்ள பெலிஸ்திய நாடுவரையுள்ள எல்லா அரசர்களுக்கும் மேலாக ஆளுகை செய்தான். 27 அரசன் எருசலேமில் வெள்ளியைக் கற்களைப்போல் சாதாரணமாகவும், கேதுரு மரங்களை மலையடிவாரத்திலுள்ள காட்டத்தி மரங்களைப்போல ஏராளமாகவும் கிடைக்கும்படி செய்தான். 28 சாலொமோனுக்கு குதிரைகள் எகிப்திலிருந்தும் மற்ற எல்லா நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன.