2 அகசியா அரசனானபோது இருபத்திரண்டு வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமில் ஒரு வருடம் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் அத்தாலியாள். அவள் உம்ரியின் பேத்தியாவாள்.
3 அகசியாவும் ஆகாபின் வீட்டாரின் வழியிலே நடந்தான்; அவன் தீயவழியில் நடக்க அவனுடைய தாய் அவனுக்கு ஆலோசனை கூறினாள். 4 அவன் ஆகாபின் வீட்டார் செய்ததுபோல் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான். ஏனெனில் அவனுடைய தகப்பன் இறந்துபோன பின்பு ஆகாபின் வீட்டாரே அவனுடைய ஆலோசகர்களாய் இருந்தனர்; அகசியாவின் அழிவுக்கு இவர்களே காரணமாயிருந்தார்கள். 5 அத்துடன் அகசியா அவர்களின் ஆலோசனையைக் கேட்டு இஸ்ரயேலின் அரசன் ஆகாபின் மகன் யோராமுடன், கீலேயாயாத்திலுள்ள ராமோத்திற்கு சீரிய அரசனான ஆசகேலுக்கு விரோதமாக யுத்தத்திற்குப் போனான். சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள். 6 எனவே சீரிய அரசனான ஆசகேலுடன் ராமோத்தில் செய்த யுத்தத்தில் சீரியரினால் தனக்கு ஏற்பட்ட காயங்களைச் சுகப்படுத்துவதற்காக, அவன் யெஸ்ரயேலுக்குத் திரும்பினான்.
7 அகசியா யோராமை பார்க்க வந்ததினால் இறைவன் அகசியாவுக்கு வீழ்ச்சியை உண்டாக்கினார். அகசியா வந்து சேர்ந்தபோது அவன் யோராமுடன் நிம்சியின் மகன் யெகூவைச் சந்திக்கப் போனான். ஆகாபின் குடும்பத்தை அழிப்பதற்கென யெகோவா யெகூவை அபிஷேகம் செய்திருந்தார். 8 யெகூ ஆகாபின் குடும்பத்தாருக்குத் தண்டனைத் தீர்ப்பை வழங்கும்போது, அகசியாவிடம் பணிபுரிந்த யூதாவின் தலைவர்களையும், அவனுடைய உறவினர்களின் மகன்களையும், அவன் அலுவலர்களையும் கண்டுபிடித்துக் கொன்றான். 9 பின்பு அவன் அகசியாவைத் தேடிப் போனான். அப்பொழுது சமாரியாவில் ஒளித்துக்கொண்டிருந்த அகசியாவை யெகூவின் மனிதர் பிடித்தனர். அவன் யெகூவிடம் கொண்டுவரப்பட்டு கொலைசெய்யப்பட்டான். அவர்கள், “யெகோவாவை முழு இருதயத்துடனும் தேடிய யோசபாத்தின் மகன் இவன்” என்று சொல்லி அவனை அடக்கம்பண்ணினார்கள்; எனவே, ஆட்சியைத் திரும்பக் கைப்பற்றக்கூடிய வல்லமையுடைய ஒருவனும் அகசியாவின் குடும்பத்தில் இருக்கவில்லை.