1 அடிமைத்தன நுகத்துக்குக் கீழ்ப்பட்ட எல்லோரும் தங்கள் எஜமான்களை முழு மதிப்புக்குரியவர்களாக எண்ணவேண்டும். அப்பொழுதே நமது இறைவனின் பெயருக்கும், எங்கள் போதித்தலுக்கும் அவதூறு ஏற்படாது. 2 விசுவாசிகளான எஜமான்களின்கீழ் இருக்கும் அடிமைகளும் தங்கள் எஜமான்கள் சகோதரர்களானபடியால், அவர்களுக்குக் குறைவான மதிப்பைக் கொடுக்கக்கூடாது. மாறாக தங்கள் பணியினால் இலாபம் பெறுபவர்கள், விசுவாசிகளும் தங்களுக்கு அன்பானவர்களுமாய் இருப்பதனால், அவர்கள் இன்னும் சிறப்பாய் பணிசெய்ய வேண்டும்.
6 ஆனால் மனத்திருப்தியுடன் உள்ள இறை பக்தியே பெரும் இலாபம். 7 ஏனெனில், நாம் இந்த உலகத்திற்கு ஒன்றையும் கொண்டுவரவுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றையும் கொண்டுபோவதுமில்லை. 8 ஆனால் நமக்கு உணவும் உடையும் இருந்தால், நாம் அதில் மனதிருப்தி உள்ளவர்களாக இருப்போம். 9 செல்வந்தர்களாக இருக்க விரும்பும் மக்களோ, சோதனைக்குள்ளும் கண்ணிக்குள்ளும் விழுவதோடு, மூடத்தனமான கேடு விளைவிக்கும் அநேக ஆசைகளுக்குள்ளும் விழுகிறார்கள்; இவை மனிதரைப் பாழாக்கும் அழிவுக்குள் அமிழ்த்துகின்றன. 10 ஏனெனில் பணத்தில் ஆசைகொள்வதே எல்லா வகையான தீமைகளுக்கும் ஆணிவேராய் இருக்கிறது. சிலர் பணத்தில் ஆசைக் கொண்டவர்களாய், விசுவாசத்தைவிட்டு விலகிப்போய், அநேக துன்பங்களினால் தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொண்டார்கள்.
17 இந்த உலகத்தில் செல்வந்தர்களாய் இருக்கிறவர்களிடம், அகந்தை உடையவர்களாய் இருக்கவேண்டாம் என்றும், அவர்களுடைய நம்பிக்கையை நிலையற்ற செல்வத்தின்மேல் வைக்கவேண்டாம் என்றும் கட்டளையிடு. நாம் அனுபவித்து மகிழும்படி எல்லாவற்றையும் நிறைவாக நமக்குக் கொடுக்கும் இறைவனில் அவர்களுடைய நம்பிக்கையை, வைக்கும்படி கட்டளையிடு. 18 அவர்கள் தங்கள் பணத்தைக் கொடுத்து நன்மை செய்யவேண்டும் என்றும், நற்செயல்களைச் செய்வதில் செல்வந்தர்களாய் இருக்கவேண்டும் என்றும், தாராள மனமுள்ளவர்களாயும், மனமுவந்து தங்களுக்குள்ளவற்றை பகிர்ந்து கொடுக்க விருப்பமுடையவர்களாயும் இருக்கவேண்டும் என்றும் கட்டளையிடு. 19 இவ்விதமாகவே, அவர்கள் வருங்காலத்திற்கான உறுதியான அஸ்திபாரமாக தங்களுக்குத் திரவியத்தைச் சேர்த்து வைத்துக்கொள்வார்கள். இதனால், அவர்கள் உண்மையான வாழ்வை அடைய முடியும்.
20 தீமோத்தேயுவே, இறைவன் உன்னிடத்தில் ஒப்படைத்தவற்றைக் கவனமாகக் காத்துக்கொள். பக்தியில்லாத பேச்சுக்களையும், பொய்யாகவே அறிவு எனக்கூறும் முரண்பாடான நோக்கங்களையும் விட்டு விலகியிரு. 21 சிலர் இவற்றை அறிக்கைசெய்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போனார்கள்.