Link to home pageLanguagesLink to all Bible versions on this site
21
நோபில் தாவீது
1 அதன்பின் தாவீது நோபுக்கு ஆசாரியனான அகிமெலேக்கிடம் போனான். அகிமெலேக் அவனைச் சந்தித்தபோது நடுக்கத்துடன் அவனிடம், “ஏன் தனிமையில் வருகிறீர்? ஏன் ஒருவரும் உம்மோடு வரவில்லை?” என்று கேட்டான்.

2 அதற்குத் தாவீது ஆசாரியன் அகிமெலேக்கிடம், “அரசன் எனக்கு ஒரு பணியைக் கட்டளையிட்டு, ‘நான் அனுப்பிய நோக்கத்தையும், எனது அறிவுறுத்தலையும் ஒருவரும் அறியக்கூடாது’ என்று சொன்னார். நான் என் மனிதருக்கோ குறிப்பிட்ட ஒரு இடத்தில் நான் அவர்களைச் சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறேன். 3 இப்பொழுது உம்மிடத்தில் என்ன இருக்கிறது? ஐந்து அப்பங்களை எனக்குக் கொடும். இல்லாவிட்டால் உம்மிடம் இருப்பது எதையாவது எனக்குக் கொடும்” என்றான்.

4 அதற்கு அந்த ஆசாரியன் தாவீதிடம், “எனது கையில் எந்தவித சாதாரண அப்பமும் இல்லை. ஆயினும் படைக்கப்பட்ட அப்பங்கள் சில இருக்கின்றன. ஆனால் உம்முடைய மனிதர் பெண்களுடன் உறவுகொள்ளாதிருந்தால் அவற்றைக் கொடுப்பேன்” என்றான்.

5 அப்பொழுது தாவீது, “நாங்கள் புறப்பட்டபோது வழக்கம்போல் பெண்களை விட்டு விலகியே இருக்கிறோம். எப்பொழுதும் எங்கள் பயணம் பரிசுத்தமில்லாததாய் இருந்தாலும்கூட, எங்களின் உடல்கள் பரிசுத்தமாயிருக்கும். இன்றைய பயணமும் சாதாரணமானதல்ல” என்றான். 6 எனவே ஆசாரியன் படைக்கப்பட்ட அப்பத்தை தாவீதுக்குக் கொடுத்தான். ஏனெனில் யெகோவாவுக்கு முன்பாக வைக்கப்பட்டு, எடுக்கப்பட்ட இறைசமுகத்து அப்பங்களைத் தவிர வேறு அப்பங்கள் அவனிடம் இருக்கவில்லை. சூடான அப்பங்கள் யெகோவாவுக்குமுன் வைக்கப்பட்டே இந்த அப்பங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

7 அன்று சவுலின் வேலைக்காரர்களில் ஒருவன் யெகோவாவுக்குமுன் தடுத்து வைக்கப்பட்டிருந்தான். அவன் தோவேக் என்னும் ஏதோமியன். அவன் சவுலின் மேய்ப்பர்களுக்குத் தலைவன்.

8 அப்பொழுது தாவீது அகிமெலேக்கிடம், “ஈட்டியோ, வாளோ இங்கே உம்மிடம் இல்லையா? அரசனுடைய பணி அவசரமானதால் எனது வாளையோ, வேறெந்த யுத்த ஆயுதங்களையோ கொண்டுவரவில்லை” என்று கேட்டான்.

9 அதற்கு ஆசாரியன், “நீர் ஏலா பள்ளத்தாக்கிலே கொன்ற பெலிஸ்தியனான கோலியாத்தின் வாள் இங்கே இருக்கிறது. அது துணியில் சுற்றி ஏபோத்துக்குப் பின்னால் வைக்கப்பட்டிருக்கிறது. அதைத் தவிர வேறு வாள் இங்கே இல்லை. நீர் விரும்பினால் அதை எடும்” என்றான்.

அதற்குத் தாவீது, “அதற்கு நிகரானது வேறொன்றுமில்லை. அதை எனக்குக் கொடும்” என்றான்.
காத்தில் தாவீது
10 அன்றே தாவீது சவுலின் பிடியிலிருந்து தப்பி காத்தின் அரசனான ஆகீஸிடம் ஓடினான். 11 அப்பொழுது ஆகீஸின் பணியாட்கள், “இவன் நாட்டின் அரசனான தாவீது அல்லவா? மக்கள் இவனைக் குறித்தல்லவா இப்படியாக ஆடிப்பாடினார்கள்:
“சவுல் கொன்றது ஆயிரங்கள்,
தாவீது கொன்றது பத்தாயிரங்கள்.”

12 இந்த வார்த்தைகளைத் தாவீது மனதில் வைத்துக்கொண்டு காத்தின் அரசன் ஆகீஸிற்கு மிகவும் பயமடைந்தான். 13 இதனால் தாவீது அவர்கள் முன்பாக ஒரு மனநோயாளிபோல் பாசாங்கு செய்தான். அவர்கள் அவனைப் பிடித்துக் கொண்டிருக்கையில் அவன் வாயிற்கதவுகளில் கீறிக்கொண்டு, வாயிலிருந்து உமிழ்நீரைத் தாடியில் வடியவிட்டு பைத்தியக்காரன் போல் நடித்தான்.

14 அப்பொழுது ஆகீஸ் தன் பணியாட்களிடம், “இந்த மனிதனைப் பாருங்கள். இவன் ஒரு மனநோயாளி. இவனை என்னிடம் ஏன் கொண்டுவர வேண்டும்? 15 இவ்விதமாய் இவன் என்முன் செயல்படுவதற்கு இங்கு பைத்தியக்காரர் போதாதென்றா இவனைக் கொண்டுவந்தீர்கள்? இவன் என் வீட்டுக்குள் வரத்தான் வேண்டுமா?” என்று கேட்டான்.

<- 1 சாமுயேல் 201 சாமுயேல் 22 ->