இராஜாக்களின் முதலாம் புத்தகம்
3 அதன்படியே அவர்கள் இஸ்ரயேல் நாடு முழுவதிலும் அழகான ஒரு பெண்ணைத் தேடி, சூனேம் நாட்டைச் சேர்ந்த அபிஷாக் என்னும் அழகிய பெண்ணைக் கண்டு அரசனிடம் கொண்டுவந்தார்கள். 4 அவள் அதிக அழகுள்ள பெண்ணாக இருந்தாள். அவள் அரசனைக் கவனித்து அவனுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்துவந்தாள். ஆனால் அரசன் அவளுடன் உடலுறவு கொள்ளவில்லை.
5 அந்த வேளையில் அரசன் தாவீதின் மகன் அதோனியா முன்வந்து, “நான் அரசனாவேன்” என்றான். அவனுடைய தாயின் பெயர் ஆகீத். எனவே அவன் தேர்களையும், குதிரைகளையும், ஐம்பது மனிதரையும் தனக்கு முன் செல்வதற்கு ஆயத்தப்படுத்தினான். 6 அவனுடைய தகப்பனான அரசன் தாவீது, “நீ ஏன் இவ்விதம் நடக்கவேண்டும்” என்று கேட்டு அவன் செயல்களில் ஒருபோதும் தலையிட்டதில்லை. அப்சலோமுக்குப் பின் பிறந்த இவன் மிகவும் அழகிய தோற்றமுள்ளவனாய் இருந்தான்.
7 அதோனியா செருயாவின் மகன் யோவாபுடனும், ஆசாரியனான அபியத்தாருடனும் ஆலோசித்தான். அவர்கள் அவனுக்குத் தங்கள் ஆதரவைக் கொடுத்தார்கள். 8 ஆனால் ஆசாரியனான சாதோக்கும், யோய்தாவின் மகன் பெனாயாவும், இறைவாக்கினனான நாத்தானும், சீமேயியும், ரேயியும் தாவீதின் விசேஷ காவலனும் அதோனியாவுடன் சேரவில்லை.
9 அதன்பின் அதோனியா என்ரொகேலுக்கு அருகேயிருந்த சோகெலேத் என்னும் கல்லின்மேல் செம்மறியாடுகளையும், மாடுகளையும் கொழுத்த கன்றுகளையும் பலியிட்டான். மேலும் அவன் தன்னுடைய சகோதரரையும், அரசனின் மகன்களையும், யூதாவிலிருந்த அரச அதிகாரிகளான எல்லா மனிதர்களையும் அழைத்தான். 10 ஆனால் இறைவாக்கினனான நாத்தானையோ, பெனாயாவையோ, விசேஷ காவலனையோ, தனது சகோதரன் சாலொமோனையோ அவன் அழைக்கவில்லை.
11 அப்பொழுது நாத்தான், சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடம் போய், “ஆகீத்தின் மகனாகிய அதோனியா எங்கள் தலைவனாகிய தாவீதுக்குத் தெரியாமலேயே அரசனாகியதை நீ கேள்விப்படவில்லையா? 12 இப்போது உனது உயிரையும், உனது மகன் சாலொமோனின் உயிரையும் காப்பாற்ற நீ விரும்பினால், நான் உனக்கு ஆலோசனை சொல்வேன். 13 நீ தாவீது அரசனிடம் போய், ‘என் தலைவனாகிய அரசே, அடியாளாகிய எனக்கு: “உமது மகன் சாலொமோனே உமக்குப்பின் உமது அரியணையிலிருந்து அரசாளுவான் என்று ஆணையிட்டு வாக்களித்தீரல்லவா”? அப்படியிருக்க ஏன் அதோனியா அரசனாகிறான்?’ என்று கேள். 14 அவ்வாறு நீ அரசனுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே நான் வந்து நீ கூறியவற்றை உறுதிப்படுத்துவேன்” என்றான்.
15 அப்பொழுது பத்சேபாள் மிகவும் வயதுசென்றவனாயிருந்த அரசனின் அறைக்குள் அவனைப் பார்க்கச் சென்றாள். அங்கு சூனேம் ஊராளான அபிஷாக், அரசனுக்கு உதவி வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள். 16 பத்சேபாள் அரசனின் முன் தலைகுனிந்து முழங்காற்படியிட்டாள்.
17 அதற்கு அவள், “என் தலைவனே, உமக்குப்பின் எனது மகனாகிய சாலொமோனே உமது அரியணையில் இருக்கும் அடுத்த அரசனாவான் என்று, உமது இறைவனாகிய யெகோவாவின் பேரில் உமது அடியவளாகிய எனக்கு நீர் வாக்குப்பண்ணினீரே. 18 ஆனால் இப்போது அதோனியா அரசனாகிவிட்டான். என் தலைவனாகிய அரசனுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. 19 அவன் பெருந்தொகையான மாடுகளையும், கொழுத்த கன்றுகளையும், செம்மறியாடுகளையும் பலிசெலுத்தினான். அது மட்டுமல்லாமல் அரசனின் எல்லா மகன்களையும் ஆசாரியனான அபியத்தாரையும், இராணுவத் தளபதியான யோவாப்பையும் அழைத்திருந்தான். உமது அடியவனாகிய சாலொமோனையோ அழைக்கவில்லை. 20 என் தலைவனாகிய அரசே, இப்பொழுது என் தலைவனாகிய அரசனின் அரியணையில் அவருக்குப் பின் யார் அரசனாய் இருப்பான் என்று அறிவதற்காக எல்லா இஸ்ரயேலருடைய கண்களும் உம் மேலேயே இருக்கின்றன. 21 இல்லாவிட்டால் என் தலைவனாகிய அரசன் உமது முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்பட்டபின்பு, நானும் என் மகன் சாலொமோனும் குற்றவாளிகளாக நடத்தப்படுவோம்” என்றாள்.
22 அவள் இவ்வாறு அரசனுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே இறைவாக்கினன் நாத்தான் அங்கு வந்தான். 23 அவர்கள் அரசனிடம், “இறைவாக்கினன் நாத்தான் இங்கு வந்திருக்கிறான்” என்றார்கள். அப்பொழுது நாத்தான் அரசனிடம் வந்தபோது, அவனுக்கு முன்பாக விழுந்து வணங்கினான்.
24 நாத்தான் அரசனிடம், “தலைவனாகிய அரசனே! உமக்குப்பின் அதோனியாவே அரசனாக உமது அரியணையில் இருப்பான் என்று எப்போதாகிலும் நீர் அறிவித்திருக்கிறீரோ? 25 இன்று அவன் பெருந்தொகையான மாடுகளையும் கொழுத்த கன்றுகளையும் அநேகம் செம்மறியாடுகளையும் பலி செலுத்தியிருக்கிறான். அவன் அரசனின் எல்லா மகன்களையும் இராணுவ தளபதிகளையும் ஆசாரியன் அபியத்தாரையும் அழைத்திருக்கிறான். அவர்கள் இப்பொழுது அவனுடன் சாப்பிட்டுக் குடித்து, ‘அரசனாகிய அதோனியா நீடூழி வாழவேண்டும்’ என்று ஆர்ப்பரிக்கிறார்கள். 26 ஆனால் உமது அடியானாகிய என்னையும், ஆசாரியன் சாதோக்கையும், யோய்தாவின் மகனான பெனாயாவையும் உமது அடியானாகிய சாலொமோனையும் அவன் அழைக்கவில்லை. 27 இது, எங்கள் அரசனாகிய தலைவன் தமக்குப்பின்பு யார் அரியணையில் இருக்கவேண்டும் என தமது பணியாட்களுக்கு அறிவிக்காமல் செய்த ஒரு காரியமோ?” என்றான்.
29 அப்பொழுது அரசன் தாவீது அவளிடம் ஆணையிட்டுச் சொன்னதாவது: “என்னை எல்லா ஆபத்திலிருந்தும் விடுவித்த யெகோவா இருப்பது நிச்சயமெனில், 30 இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயரால் எனக்குப்பின் உன் மகன் சாலொமோனே அரசனாவான் என்றும், அவனே என் அரியணையில் எனக்குப்பின் எனது இடத்தில் இருப்பான் என்றும் முன்பு உனக்கு ஆணையிட்டுச் சொன்னதை நிறைவேற்றுவேன் என்பதும் நிச்சயம்” என்று ஆணையிட்டான்.
31 பின்பு பத்சேபாள் மறுபடியும் தரைமட்டும் குனிந்து அரசனை வணங்கிய பின், அரசனுக்கு முன் முழங்காற்படியிட்டு, “என் தலைவனாகிய அரசன் தாவீது நீடூழி வாழ்வாராக” என்றாள்.
32 அப்பொழுது தாவீது, “ஆசாரியனான சாதோக்கையும், இறைவாக்கினனான நாத்தானையும், யோய்தாவின் மகன் பெனாயாவையும் அழையுங்கள்” என்றான். அவர்கள் உள்ளே வந்தபோது அவர்களிடம், 33 “என் மகன் சாலொமோனை என் சொந்தக் கோவேறு கழுதையில் ஏற்றி, என் ஊழியக்காரருடன் அவனை கீகோனுக்கு அழைத்துப் போங்கள். 34 அங்கே ஆசாரியனான சாதோக்கும், இறைவாக்கினன் நாத்தானும் அவனை இஸ்ரயேலின் அரசனாக அபிஷேகம் பண்ணட்டும். அதன்பின்பு எக்காளங்களை ஊதி, ‘சாலொமோன் அரசன் நீடூழி வாழ்க’ என்று ஆர்ப்பரியுங்கள். 35 பின்பு அவனோடு நீங்கள் வந்து அவனை அரசனாக எனது அரியணையில் அமர்த்துங்கள். அவன் எனது இடத்தில் அரசனாக வேண்டும். இஸ்ரயேலுக்கும், யூதாவுக்கும் நான் அவனை ஆளுநனாக நியமித்திருக்கிறேன்” என்றான்.
36 யோய்தாவின் மகனான பெனாயா அரசனிடம், “ஆமென், என் தலைவனாகிய அரசனின் இறைவனாகிய யெகோவாவும் அவ்வாறே அறிவிப்பாராக. 37 யெகோவா என் தலைவனாகிய அரசனோடு இருந்ததுபோல, சாலொமோனோடுங்கூட இருந்து, அவனுடைய அரியணையை என் தலைவனாகிய தாவீது அரசனின் அரியணையைப் பார்க்கிலும் இன்னும் பெரிதாக்குவாராக” என்றான்.
38 அப்படியே ஆசாரியன் சாதோக்கும், இறைவாக்கினன் நாத்தானும், யோய்தாவின் மகனான பெனாயாவும், கிரேத்தியரும், பிலேத்தியரும் போய், சாலொமோனை அரசன் தாவீதின் கோவேறு கழுதையில் ஏற்றி கீகோனுக்கு அழைத்துப் போனார்கள். 39 ஆசாரியன் சாதோக் பரிசுத்த கூடாரத்திலிருந்த தைலக் கொம்பை எடுத்து சாலொமோனை அபிஷேகம் பண்ணினான். பின்பு அவர்கள் எக்காளங்களை ஊதினார்கள். எல்லா மக்களும், “சாலொமோன் அரசன் நீடூழி வாழ்க” என்று ஆர்ப்பரித்தார்கள். 40 அதன்பின் சாலொமோனுடன் எல்லா மக்களும் புல்லாங்குழலை ஊதிக்கொண்டு நிலம் அதிரத்தக்க பெரும் குதூகலத்துடன் அவனுக்குப்பின் சென்றார்கள்.
41 அதோனியாவும், அவனுடைய விருந்தாளிகள் யாவரும் தங்கள் விருந்தை முடிக்கும் வேளையில் இதைக் கேட்டார்கள். எக்காள சத்தத்தைக் கேட்டதும் யோவாப், “பட்டணத்தில் கேட்கும் இந்தச் சத்தம் என்ன?” என்று கேட்டான்.
42 இப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஆசாரியனான அபியத்தாரின் மகன் யோனத்தான் விரைவாக உள்ளே வந்துசேர்ந்தான். அதோனியா அவனிடம், “உள்ளே வா, உத்தமனான நீ ஒரு நல்ல செய்தியைத்தான் கொண்டுவருவாய்” என்றான்.
43 அதற்கு யோனத்தான், “அப்படியல்ல” என்றான். “எங்கள் தலைவனான அரசன் தாவீது சாலொமோனை அரசனாக்கியிருக்கிறார். 44 அரசன் அவனை ஆசாரியனான சாதோக், இறைவாக்கினனான நாத்தான், யோய்தாவின் மகன் பெனாயா, கிரேத்தியர், பிலேத்தியர் ஆகியோருடன் அரசனின் கோவேறு கழுதையில் ஏற்றி அனுப்பியிருக்கிறார். 45 ஆசாரியன் சாதோக்கும் இறைவாக்கினனான நாத்தானும் அவனை கீகோனில் அரசனாக அபிஷேகம் செய்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் மகிழ்ச்சி ஆர்ப்பரிப்புடன் போகிறார்கள். பட்டணத்தில் அச்சத்தம் கேட்கிறது. அந்த ஆர்ப்பரிப்புதான் நீர் கேட்கும் சத்தம் என்றான். 46 மேலும், சாலொமோன் அரியணையில் அமர்ந்திருக்கிறான். 47 அத்துடன் அரசனின் அதிகாரிகள் அரசன் தாவீதிடம், ‘உமது இறைவன் சாலொமோனின் பெயரை உமது பெயரிலும் புகழுடையதாகவும், அவனுடைய அரியணையை உமது அரியணையிலும் பார்க்க பெரிதாகவும் மேன்மைப்படுத்துவாராக’ என்று சொல்லி தாவீது அரசனை வாழ்த்துகிறார்கள். அப்பொழுது அரசன் தன் படுக்கையிலிருந்து தலைகுனிந்து வழிபட்டார். 48 மேலும் அரசன், ‘இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக. எனக்குப்பின் ஒருவனை எனது அரியணையில் அமர்த்தி, இன்று என் கண்கள் காணும்படியாகச் செய்தாரே’ என்று கூறினார்” என்றான்.
49 இதைக் கேட்டதும் அதோனியாவும், அவனுடைய விருந்தாளிகளும் திடுக்கிட்டு எழுந்து சிதறி ஓடினார்கள். 50 அதோனியா சாலொமோனுக்கு பயந்து ஓடி பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு நின்றான். 51 பின்பு அதோனியா, அரசன் சாலொமோனுக்குப் பயந்து பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு நிற்கிறான் என்றும், சாலொமோன் அரசன் வாளினால் தன்னைக் கொல்வதில்லை என இன்றைக்குத் தனக்குச் சத்தியம் பண்ணிக் கூறவேண்டும் என்றும் அதோனியா கேட்கிறான் என்று சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது.
52 அதற்கு சாலொமோன் மறுமொழியாக, “அவன் உத்தமனாக நடந்துகொண்டால், அவனுடைய தலைமயிரில் ஒன்றுகூட நிலத்தில் விழமாட்டாது. ஆனால் அவனிடம் தீமை காணப்பட்டால் அவன் சாவான்” என்று கூறினான். 53 மேலும் அரசனாகிய சாலொமோன் அவனை பலிபீடத்திலிருந்து கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான். அதன்படி அவர்கள் அவனைக் கூட்டிக்கொண்டு வந்தனர். அவன் சாலொமோனின் முன்வந்து தலைகுனிந்து வணங்கினான். அப்பொழுது சாலொமோன் அவனைப் பார்த்து, “நீ உன் வீட்டிற்குப் போ” என்றான்.
1 இராஜாக்கள் 2 ->