1 பிரியமானவர்களே, நான் உங்களிடத்தில் வந்து, இறைவனைப்பற்றிய சாட்சியை உங்களுக்குப் பிரசித்தப்படுத்தியபோது, பேச்சுத் திறனுடனோ அல்லது மனித ஞானத்துடனோ வரவில்லை. 2 ஏனெனில் நான் உங்களோடிருந்தபோது, இயேசுகிறிஸ்துவையும் அவர் சிலுவையில் அறையப்பட்டதையும் தவிர, வேறெதையும் அறியாதவனாகவே இருக்கவேண்டுமென உறுதிகொண்டிருந்தேன். 3 நான் உங்களிடத்தில் பலவீனத்தோடும், பயத்தோடும், மிகுந்த நடுக்கத்துடனுமே வந்தேன். 4 என் செய்தியும் என் பிரசங்கமும், ஞானமும் கவர்ச்சியும் உள்ள வார்த்தைகளாக இருக்கவில்லை. ஆனால் அவை ஆவியானவரின் வல்லமையை வெளிப்படுத்துவதாக இருந்தன. 5 உங்கள் விசுவாசம் மனித ஞானத்தில் தங்கியிருக்காமல், இறைவனின் வல்லமையிலே தங்கியிருக்கும்படியாகவே நான் இப்படி நடந்துகொண்டேன்.
ஆவியானவரிடமிருந்து ஞானம்
6 அப்படியிருந்தும், நாம் முதிர்ச்சி பெற்றவர்கள் மத்தியில், ஞானத்தைப் பற்றிய செய்தியை அறிவிக்கிறோம். ஆனால் இது உலகத்தின் ஞானமோ, அல்லது அழிந்துபோகிற இவ்வுலக அதிகாரிகளின் ஞானமோ அல்ல. 7 இரகசியமாயிருந்த இறைவனின் ஞானத்தையே நாம் அறிவிக்கிறோம். இதை இறைவன் உலகம் தோன்றுமுன்பே நமது மகிமைக்கெனத் தீர்மானித்தார். 8 இதை இவ்வுலக அதிகாரிகள் ஒருவரும் அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் அறிந்திருப்பார்களேயானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்களே. 9 ஆனால் எழுதியிருக்கிறபடி:
“இறைவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தமாக்கப்பட்டவைகளை,
எந்த ஒரு கண்ணும் காணவுமில்லை,
எந்த ஒரு காதும் கேட்கவுமில்லை,
எந்த ஒரு மனமும் சிந்திக்கவுமில்லை.”*ஏசா. 64:4
10 இறைவன் தமது பரிசுத்த ஆவியானவரின் மூலமாய் இவைகளை நமக்கு வெளிப்படுத்தினார்.
பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் ஆராய்கிறார்; இறைவனுக்குரிய ஆழ்ந்த இரகசியங்களையுங்கூட ஆராய்கிறார். 11 ஒரு மனிதனுடைய சிந்தனைகள், அவனுக்குள் இருக்கும் ஆவிக்குத்தவிர வேறு யாருக்குத் தெரியும்? அதேபோல் இறைவனின் ஆவியானவரைத் தவிர, வேறு ஒருவரும் இறைவனின் சிந்தனைகளை அறியமாட்டார்கள். 12 நாம் உலகத்தின் ஆவியைப் பெற்றுக்கொள்ளவில்லை, இறைவனிடத்திலிருந்து வந்த ஆவியானவரையே பெற்றுக்கொண்டோம். இதனால் இறைவன் நமக்கு இலவசமாகக் கொடுத்தவற்றை நாம் விளங்கிக்கொள்கிறோம். 13 ஆகவே இவற்றை நாங்கள் பேசுவது, மனித ஞானம் கற்றுத்தந்த வார்த்தைகளினால் அல்ல, ஆவியானவர் கற்றுத்தந்த வார்த்தைகளினாலேயே நாங்கள் அறிவிக்கிறோம். இவ்விதம் ஆவிக்குரிய உண்மைகளை ஆவிக்குரிய வார்த்தைகளால் தெளிவுபடுத்துகிறோம். 14 பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிராத மனிதன், இறைவனின் ஆவியானவரிடமிருந்து வரும் காரியங்களை ஏற்றுக்கொள்வதில்லை. அவை அவனுக்கு மூடத்தனமாகத் தோன்றும். அவற்றை விளங்கிக்கொள்ளவும் முடியாது. ஏனெனில், இவை ஆவிக்குரிய ரீதியாகவே நிதானித்து அறியப்படுகின்றன. 15 ஆனால் ஆவிக்குரிய மனிதன் எல்லாவற்றையும் ஆராய்ந்து விளங்கிக்கொள்கிறான். அவனையோ மற்றவர்களால் விளங்கிக்கொள்ளவே முடியாது:
16 ஏனெனில் வேதவசனம் சொல்கிறபடி,
“கர்த்தருக்கு அறிவுறுத்தும் அளவுக்கு,
அவருடைய மனதை அறிந்தவன் யார்?”†ஏசா. 40:13