6 பிரியமானவர்களே, இப்பொழுது நான் உங்களிடம் வந்து, வேற்று மொழிகளில் பேசினால், என்னால் நீங்கள் அடையும் நன்மையென்ன. இறைவனிடமிருந்து ஒரு வெளிப்பாட்டையோ, அறிவையோ, இறைவாக்கையோ அல்லது ஒரு அறிவுறுத்தும் வார்த்தையையோ உங்களுக்கு வழங்கினால் மட்டுமே, அது நன்மையளிக்கும். 7 ஒலிகளை எழுப்பும் புல்லாங்குழல், வீணை போன்ற உயிரற்ற வாத்தியக் கருவிகளைப் பாருங்கள். அவற்றிலிருந்து வரும் இசை, வித்தியாசமான சுரங்களைக் காண்பிக்காவிட்டால், அவற்றில் எழுப்பும் இராகத்தை யார் அறிந்துகொள்வான்? 8 எக்காளம் யுத்த அழைப்பிற்கான தெளிவான ஒலியை எழுப்பாவிடில், யுத்தத்திற்கு யார் ஆயத்தமாவான்? 9 அதேபோலவே நீங்களும், மற்றவர்களால் விளங்கிக்கொள்ளக்கூடிய வார்த்தைகளை உங்கள் நாவினால் பேசாவிட்டால், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது யாருக்காவது விளங்குமா? உங்கள் பேச்சு காற்றோடு காற்றாய்ப் போய்விடுமே. 10 நிச்சயமாக உலகத்தில் பலவித மொழிகள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் எதுவும் அர்த்தமற்ற மொழியல்ல. 11 எனவே, ஒருவன் பேசுகின்ற மொழியின் அர்த்தத்தை நான் அறிந்துகொள்ளாவிட்டால், அதைப் பேசுகிறவனுக்கு நான் ஒரு அந்நியனாயிருப்பேன். அவனும் எனக்கு அந்நியனாயிருப்பான். 12 உங்களுக்கும் அப்படியே. நீங்கள் ஆவிக்குரிய வரங்களின்மேல் வாஞ்சையுள்ளவர்களாய் இருப்பதனால், திருச்சபையைக் கட்டியெழுப்பும் வரங்களில் வளர்ச்சியடைய முயலுங்கள்.
13 இதன் காரணமாகவே, ஆவியானவர் கொடுக்கும் வேற்று மொழியைப் பேசுகிறவன், அதை விளங்கும்மொழியில் மற்றவர்களுக்குச் சொல்லும் ஆற்றலையும் பெற்றுக்கொள்ளும்படி மன்றாட வேண்டும். 14 ஏனெனில், நான் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் வேற்று மொழியின் மூலமாய் மன்றாடும்போது, எனது ஆவியே மன்றாடுகிறது. எனது மனமோ பயனற்றதாயிருக்கிறது. 15 ஆகவே நான் என்ன செய்யவேண்டும்? நான் எனது ஆவியினாலும் மன்றாடுவேன், எனது மனதினாலும் மன்றாடுவேன்; நான் எனது ஆவியினாலும் பாடுவேன், மனதினாலும் பாடுவேன். 16 நீங்கள் உங்களுடைய ஆவியினாலே இறைவனுக்குத் துதியைச் செலுத்தும்போது, பரிசுத்த ஆவியானவரின் வரங்களைப் பற்றிய கற்றுக்கொள்ளாதவன் உங்கள் மத்தியில் இருந்தால், அவன் எப்படி உங்களது நன்றி செலுத்துதலுக்கு, “ஆமென்” என்று சொல்வான். ஏனெனில், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று அவனுக்குத் தெரியாதே. 17 நீங்கள் நல்லவிதமாகவே நன்றி செலுத்தலாம். அது மற்றவனுடைய வளர்ச்சிக்கு உதவவில்லையே.
18 உங்கள் எல்லோரையும்விட அதிகமாய் நான் ஆவியானவர் கொடுக்கும் வேற்று மொழிகளைப் பேசுகிறேன். இதற்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். 19 ஆனால், திருச்சபையோர் மத்தியில் வேற்று மொழியில் பத்தாயிரம் வார்த்தைகளைப் பேசுவதைவிட, மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கும்படியாக ஐந்து வார்த்தைகளை பேசுவதையே நான் அதிகம் விரும்புகிறேன்.
20 பிரியமானவர்களே, நீங்கள் சிறுபிள்ளைகளைப்போல் சிந்திப்பதை நிறுத்துங்கள். தீய செயல்களைப் பொறுத்தமட்டில் குழந்தைகளைப்போல களங்கமற்று இருங்கள். ஆனால் உங்கள் சிந்திக்கும் ஆற்றலிலே வளர்ச்சியடைந்தவர்களாய் இருங்கள்.
22 எனவே, வேற்று மொழிகளைப் பேசுவது, அவிசுவாசிகளுக்கு ஒரு அடையாளமாய் இருக்கிறதேயன்றி, விசுவாசிகளுக்கு அல்ல. இறைவாக்குரைப்பதோ விசுவாசிகளுக்கே அன்றி, அது அவிசுவாசிகளுக்கு அல்ல. 23 எனவே திருச்சபையோர் எல்லோரும் கூடிவரும்போது, எல்லோரும் வேற்று மொழிகளைப் பேசினால், அங்கு வருகின்ற ஆவிக்குரிய வரங்களைப் பற்றி விளக்கமில்லாதவர்களும், அவிசுவாசிகளும் உங்களைப் பார்த்து, நீங்கள் பைத்தியக்காரர் என்று சொல்லமாட்டார்களா? 24 ஆனால் எல்லோரும் இறைவாக்கு உரைத்தால், அப்பொழுது அங்கு வருகின்ற அவிசுவாசியோ, அல்லது அந்த விளக்கமில்லாதவனோ, நீங்கள் எல்லோரும் சொல்லும் இறைவாக்கின் வார்த்தைகளைக் கேட்டு, தான் பாவி என்று எடுத்துக்காட்டும். அவன் கேட்கும் வார்த்தைகளெல்லாம், அவனை நியாயந்தீர்க்கும். 25 அப்பொழுது அவனுடைய இருதயத்தின் இரகசியம் எல்லாம் வெளியாகும். எனவே அவன், முகங்குப்புற விழுந்து இறைவனை வழிபட்டு, “உண்மையாகவே இறைவன் உங்கள் மத்தியில் இருக்கிறார்!” என்று அறிக்கையிடுவான்.
29 இறைவாக்குரைப்போரும், இரண்டு பேரோ அல்லது மூன்று பேரோ பேசலாம். மற்றவர்களோ, சொல்லப்பட்ட செய்தியைக் கவனமாக ஆராய்ந்து பார்க்கவேண்டும். 30 பேசிக்கொண்டிருக்கிறவனுக்கு அருகே உட்கார்ந்திருக்கிறவன், இறைவனிடமிருந்து ஒரு வெளிப்பாட்டைப் பெற்றுக்கொண்டால், பேசிக்கொண்டிருக்கிறவன் தான் பேசுவதை நிறுத்தவேண்டும். 31 இப்படி நீங்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக இறைவாக்கு உரைக்கலாம். இதனால், நீங்கள் எல்லோரும் அறிவுறுத்தப்பட்டு ஊக்கம் பெறலாம். 32 இறைவாக்குரைப்போரின் ஆவிகள் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கியவையாக இருக்கின்றன. 33 ஏனெனில், இறைவன் ஒழுங்கின்மையை ஏற்படுத்தும் இறைவன் அல்ல. பரிசுத்தவான்களின் எல்லாத் திருச்சபைகளிலும் இருப்பதுபோலவே, அவர் அமைதியையே ஏற்படுத்துகிறவர்.
34 திருச்சபைக் கூட்டங்களில் பெண்கள் மவுனமாக இருக்கவேண்டும். பேசுவதற்கு அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறதில்லை. யூதச்சட்டத்தில் சொல்லியிருக்கிறபடி, அவர்கள் தலைமைத்துவத்தில் இருக்கக்கூடாது. 35 பெண்கள் எதைப்பற்றியாவது அறிந்துகொள்ள விரும்பினால், அதை வீட்டில் தங்கள் சொந்த கணவர்களிடம் இருந்து கேட்டு அறிந்துகொள்ளவேண்டும்; ஏனெனில் திருச்சபையிலே பெண்கள் பேசுவது அவர்களுக்கு அவமானமாயிருக்கும்.
36 இறைவனுடைய வார்த்தை உங்களுடன்தான் ஆரம்பமாயிற்றோ? அல்லது உங்களிடம் மட்டும்தான் அது வந்து சேர்ந்ததோ? 37 உங்களில் யாராவது தன்னை ஒரு இறைவாக்கினன் என்றோ, அல்லது ஆவிக்குரிய வரம் பெற்றவன் என்றோ எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுவது கர்த்தருடைய கட்டளைகள் என்பதை அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும். 38 இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவனையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்.
39 ஆகவே பிரியமானவர்களே, இறைவாக்கு உரைப்பதில் ஆர்வமுள்ளவர்களாக இருங்கள். ஆனால், வேற்று மொழிகளைப் பேசுவதையோ தடுக்கவேண்டாம். 40 எல்லாக் காரியங்களும் ஏற்றவிதத்திலும், ஒழுங்காகவும் செய்யப்படவேண்டும்.
<- 1 கொரிந்தியர் 131 கொரிந்தியர் 15 ->- a ஏசா. 28:11,12