7 ஒரு ஆண் தன் தலையை மூடிக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில், இறைவனுடைய சாயலையும் மகிமையையும் பிரதிபலிப்பவன் அவனே. ஆனால் பெண்ணோ மனிதனின் மகிமையைப் பிரதிபலிப்பாய் இருக்கிறாள். 8 ஏனெனில் ஆண் பெண்ணிலிருந்து படைக்கப்படவில்லை; பெண்ணே ஆணிலிருந்து படைக்கப்பட்டாள். 9 ஆண் பெண்ணுக்காகப் படைக்கப்படவில்லை. ஆனால் பெண்ணே ஆணுக்காகப் படைக்கப்பட்டாள். 10 இந்த காரணத்திற்காகவும், தூதர்களுக்காகவும், ஒரு பெண் தான் அதிகாரத்தின்கீழ் இருப்பதைக் காட்ட அவளது தலையை மூடிக்கொள்ளவேண்டும். 11 எவ்வாறாயினும், கர்த்தரின் ஒழுங்கின்படி ஒரு பெண், ஆண் இல்லாமல் இல்லை. ஒரு ஆண், பெண் இல்லாமல் இல்லை. 12 ஏனெனில் பெண் ஆணிலிருந்து படைக்கப்பட்டது போலவே, மனிதன் பெண்ணிலிருந்தே பிறக்கிறான். ஆனால், எல்லாம் இறைவனிடத்திலிருந்தே வருகின்றன.
13 ஒரு பெண் வழிபாட்டின்போது தலையை மூடிக்கொள்ளாமல், இறைவனை நோக்கி மன்றாடுவது தகுதியானதோ? நீங்களே தீர்மானியுங்கள். 14 ஒரு மனிதன் தன் தலைமுடியை நீளமாக வைத்துக்கொண்டால், அது அவனுக்குத் தகுந்தது அல்ல என்று இயற்கையும் உங்களுக்குக் போதிக்கிறதே? 15 ஆனால், ஒரு பெண் தனது தலைமுடியை நீளமாக வைத்துக்கொண்டால், அது அவளுக்கு மகிமையாயிருக்கும். நீளமான தலைமுடியே அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 16 இதைக்குறித்து யாரேனும் விவாதிக்க விரும்பினால், எங்களுக்கோ இறைவனின் திருச்சபைகளுக்கோ இவைத் தவிர வேறெந்த வழக்கமும் இல்லையென்று அறியுங்கள்.
23 கர்த்தர் எனக்குக் கற்றுக்கொடுத்ததையே நான் உங்களுக்குக் கொடுத்தேன்: கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவிலே அப்பத்தை எடுத்து, 24 நன்றி செலுத்திய பின்பு, அவர் அதைப் பிட்டு, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரம்; என்னை நினைவில் வைத்துக்கொள்ளும்படி இதைச் செய்யுங்கள்” என்றார். 25 அவ்விதமாகவே உணவை முடித்தபின்பு, அவர் அந்தப் பாத்திரத்தை எடுத்து, அவர்களுக்குச் சொன்னதாவது, “இந்தப் பாத்திரம், ஊற்றப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கை; இதை நீங்கள் பானம் பண்ணும்போதெல்லாம், என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள். 26 ஏனெனில், நீங்கள் இந்த அப்பத்தைச் சாப்பிட்டு, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும் பொழுதெல்லாம், கர்த்தர் திரும்ப வருமளவும், அவருடைய மரணத்தை பிரசித்தம் பண்ணுகிறீர்கள்” என்றார்.
27 ஆனபடியால், யாராவது தகுதியற்ற விதத்தில் அப்பத்தைச் சாப்பிட்டாலோ, கர்த்தருடைய பாத்திரத்தைக் குடித்தாலோ, அவன் கர்த்தருடைய உடலுக்கும், அவருடைய இரத்தத்திற்கும் எதிராகப் பாவஞ்செய்யும் குற்றவாளியாகின்றான். 28 எனவே, ஒவ்வொருவனும் அப்பத்தைச் சாப்பிட்டு, பாத்திரத்திலிருந்து குடிக்குமுன், தன்னை ஆராய்ந்து பார்க்கவேண்டும். 29 ஏனெனில், ஒருவன் கர்த்தருடைய உடல் என்ற உணர்வு இல்லாமல், இதைச் சாப்பிட்டு குடித்தால், அவன் தன்மேல் நியாயத்தீர்ப்பை வருவித்துக்கொள்வதற்காகவே சாப்பிட்டுக் குடிக்கிறான். 30 இதனாலேயே உங்களில் பலர் பலவீனத்திற்கு உள்ளாகி வியாதிப்பட்டும் இருக்கிறனர். உங்களில் சிலர் மரண நித்திரைக்கும் உள்ளானார்கள். 31 ஆகவே, நம்மை நாமே நியாயந்தீர்த்துக்கொண்டால், நாம் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டோம். 32 அப்படியிருந்தும், நாம் கர்த்தரால் நியாயந்தீர்க்கப்படும்போது, நாம் அவரால் தண்டிக்கப்பட்டு சீர்ப்படுத்தப்படுகிறோம். இதனால், நாம் உலகத்தவர்களோடு குற்றவாளிகளாய்த் தீர்க்கப்படமாட்டோம்.
33 ஆகையால் பிரியமானவர்களே, நீங்கள் திருச்சபையாக சாப்பிட ஒன்றுகூடி வரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள். 34 யாராவது பசியாயிருந்தால், அவன் வீட்டிலேயே சாப்பிடவேண்டும். அப்பொழுது நீங்கள் ஒன்றுகூடி வரும்போது, தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள்.