1 அவர்கள் இறைவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்து, தாவீது அதற்கென அமைத்த கூடாரத்திற்குள் வைத்தார்கள். பின்பு அவர்கள் இறைவனுக்குமுன் தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தினார்கள். 2 தாவீது தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தி முடித்தபின்பு, அவன் மக்களை யெகோவாவினுடைய பெயரில் ஆசீர்வதித்தான். 3 பின்பு அவன் ஒவ்வொரு இஸ்ரயேலின் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியே ஒரு அப்பத்தையும், ஒரு பேரீச்சம்பழ அடையையும், ஒரு திராட்சைப்பழ அடையையும் கொடுத்தான்.
4 தாவீது சில லேவியர்களை யெகோவாவின் பெட்டிக்குமுன் பணிசெய்யவும், வேண்டுதல் செய்யவும், நன்றி செலுத்தவும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவைத் துதிப்பதற்குமென நியமித்தான். 5 அவர்களுக்கு தலைவனாக ஆசாப்பும், இரண்டாவதாக சகரியாவும், அவனுக்கு அடுத்ததாக ஏயேல், செமிராமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத் ஏதோம், ஏயேல் ஆகியோரும் இருந்தார்கள். இவர்கள் யாழ், வீணை வாசிக்க நியமிக்கப்பட்டார்கள். கைத்தாளம் போடுவதற்காக ஆசாப் நியமிக்கப்பட்டான். 6 அத்துடன் இறைவனின் உடன்படிக்கைப் பெட்டிக்குமுன் ஒழுங்காக எக்காளம் ஊதுவதற்காக ஆசாரியர்களான பெனாயாவும், யாகாசியேலும் நியமிக்கப்பட்டார்கள்.
7 அன்றையதினம் தாவீது யெகோவாவுக்கு நன்றி செலுத்தும்படி ஆசாப்பிடமும், அவனுடைய உதவியாளர்களிடமும் முதன்முதலாக கொடுத்த பாடல் இதுவே:
8 யெகோவாவுக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரை பறைசாற்றுங்கள்;
அவர் செய்தவற்றை நாடுகளுக்குள் தெரியப்படுத்துங்கள்.
9 அவரைப் பாடுங்கள். அவருக்குத் துதி பாடுங்கள்;
அவருடைய அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள்.
10 அவருடைய பரிசுத்த பெயரில் பெருமிதம் கொள்ளுங்கள்;
யெகோவாவைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
11 யெகோவாவையும் அவர் வல்லமையையும் நோக்கிப்பாருங்கள்;
எப்பொழுதும் அவர் முகத்தையே தேடுங்கள்.
12 அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும்,
அவர் கொடுத்த நியாயத்தீர்ப்புகளையும் நினைவிற்கொள்ளுங்கள்.
13 அவருடைய ஊழியராம் இஸ்ரயேலின் சந்ததிகளே,
அவர் தெரிந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே,
14 அவரே நமது இறைவனாகிய யெகோவா;
அவரது நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் உள்ளன.
15 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருகிறார்;
ஆயிரம் தலைமுறைகளுக்கு அவர் செய்த வாக்குறுதியையும்,