3 இஸ்ரயேலின் முதியவர்கள் எல்லோரும் தாவீது அரசனிடம் எப்ரோனுக்கு வந்தபோது, தாவீது யெகோவா முன்னிலையில் எப்ரோனில் அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்தான். சாமுயேலுக்கு யெகோவா கொடுத்திருந்த வாக்குப்படியே அவர்கள் தாவீதை இஸ்ரயேலுக்கு அரசனாக அபிஷேகம் பண்ணினார்கள்.
6 எபூசியரை முதலில் தாக்குகிறவன் எவனோ அவனே பிரதம படைத்தளபதியாய் இருப்பான் என தாவீது சொல்லியிருந்தான். செருயாவின் மகன் யோவாப் முதலில் போனதால் அவனே படைத்தளபதி ஆனான்.
7 பின்பு தாவீது அந்த கோட்டையில் குடியமர்ந்தான். ஆகையால் அது தாவீதின் நகரம் என அழைக்கப்பட்டது. 8 அவன் அந்த கோட்டையைச் சுற்றி மில்லோவிலிருந்து சுற்றியிருக்கும் மதில்வரை நகரத்தைக் கட்டினான். யோவாப் மிகுதியான நகரத்தைப் புதுப்பித்துக் கட்டினான். 9 சேனைகளின் யெகோவா தாவீதுடன் இருந்ததால் அவன் மென்மேலும் வலிமையடைந்தான்.
12 அவனுக்கு அடுத்ததாக அகோகியனான தோதோவின் மகன் எலெயாசார் வலிமைமிக்க மூவரில் ஒருவனாயிருந்தான். 13 இவன் பெலிஸ்தியர் பாஸ்தம்மீம் என்னும் இடத்தில் போருக்குக் கூடியிருந்தபோது, தாவீதுடன் இருந்தான். அந்த இடத்திலிருந்த வயல், வாற்கோதுமையினால் நிறைந்திருந்தது; இராணுவவீரரோ பெலிஸ்தியருக்குமுன் தப்பி ஓடினார்கள். 14 ஆனாலும் அவர்கள் வயலின் நடுவில் நின்று அந்த வயலைப் பாதுகாத்து பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தினார்கள். யெகோவா இவ்வாறு அவர்களுக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தார்.
15 ஒருமுறை பெலிஸ்தியர் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் வந்து முகாமிட்டிருந்தார்கள். அவ்வேளை வலிமைமிக்க முப்பதுபேரில் மூன்றுபேர் அதுல்லாமிலுள்ள கற்குகையில் இருந்த தாவீதினிடத்திற்கு வந்தார்கள். 16 அந்த நேரத்தில் தாவீது அரணான இடத்தில் இருந்தான்; பெலிஸ்தியரின் படையோ பெத்லெகேமில் இருந்தது. 17 தாவீது, “பெத்லெகேமின் வாசலில் இருக்கும் கிணற்றிலிருந்து எனக்கு யாராவது குடிக்க தண்ணீர் கொண்டுவந்தால் எவ்வளவு நல்லது!” என ஆவலுடன் கூறினான். 18 எனவே அந்த மூவரும் பெலிஸ்தியரின் முகாமின் உள்ளே சென்று பெத்லெகேமின் வாசலின் அருகில் உள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளி, கொண்டுவந்து தாவீதுக்குக் கொடுத்தார்கள். ஆனால் தாவீது அதைக் குடிக்க மறுத்து அதை யெகோவாவுக்கு முன்பாக வெளியே ஊற்றினான். 19 அவன், “இறைவனே, நான் இதைச் செய்வதற்கு எண்ணியும் பார்க்கமாட்டேன். தங்கள் உயிரையும் ஒரு பொருட்டாக எண்ணாமல் தண்ணீர் கொண்டுவந்த இந்த மனிதர்களின் இரத்தத்தை நான் குடிப்பேனோ?” என்றான்.
20 யோவாபின் சகோதரன் அபிசாய் இந்த மூன்றுபேருக்கு தலைவனாயிருந்தான். இவன் தன் ஈட்டியை உயர்த்தி முந்நூறுபேரைக் கொன்றதினால், அந்த மூன்றுபேரைப் போல புகழ் பெற்றவனாயிருந்தான். 21 அவன் அந்த மூன்று பேருக்கும் மேலாக இரண்டு மடங்கு கனப்படுத்தப்பட்டு, அவர்களோடு சேர்க்கப்படாதபோதும், அவர்களுக்குத் தளபதியானான்.
22 கப்சேயேல் ஊரைச்சேர்ந்த யோய்தாவின் மகன் பெனாயா, மிகவும் பலமுள்ள போர்வீரனாயிருந்தான்; அவன் பல துணிச்சலான செயல்களைச் செய்திருந்தான். இவன் மோவாபியரில் இரண்டு சிறந்த வீரர்களை கொலைசெய்திருந்தான். அதோடு உறைபனி காலத்தில் ஒரு குழிக்குள் இறங்கி ஒரு சிங்கத்தையும் கொன்றான். 23 அதோடு ஏழரை அடி உயரமான ஒரு எகிப்தியனையும் வெட்டிக்கொன்றான். அந்த எகிப்தியன் நெசவாளனின் கோலைப்போலுள்ள ஈட்டியைக் கையில் பிடித்திருந்தான். ஆனால் பெனாயாவோ கையில் ஒரு கம்புடன் அவனுக்கெதிராகச் சென்று, அவனுடைய கையில் இருந்த ஈட்டியைப் பறித்து, அதனாலேயே எகிப்தியனைக் கொன்றான். 24 இவ்விதமான வீரச்செயலை யோய்தாவின் மகன் பெனாயா செய்ததினால் அவன் அந்த மூன்று மாவீரர்களைப் போல புகழ் பெற்றவனாயிருந்தான். 25 இவன் அந்த முப்பது பேரிலும் மேன்மையுள்ளவனாக எண்ணப்பட்டான். ஆயினும் முன்கூறிய அந்த மூவருள் ஒருவனாகவில்லை. தாவீது அவனைத் தனது மெய்க்காவலருக்குப் பொறுப்பாக நியமித்தான்.