Link to home pageLanguagesLink to all Bible versions on this site

தீத்து
ஆசிரியர்
தீத்துவுக்கு எழுதப்பட்ட நிருபத்தின் ஆசிரியர் என பவுல் தன்னை அடையாளப்படுத்துகிறார், மேலும் அவர் தன்னை தேவனுக்கு ஒரு கட்டப்பட்ட அடிமை ஊழியனாகவும், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகவும் தன்னை அழைத்தார் (1: 1). தீத்துவுடனான பவுலின் உறவின் ஆரம்பம் இரகசியமாக மூடி மறைக்கப்பட்டிருக்கிறது, என்றாலும் பவுல் ஊழியத்தினால் அவர் மனமாற்றமடைந்திருக்கலாம் என்று கருதலாம், அவர் தீத்துவை ஒரு பொதுவான விசுவாசத்தில் என் உண்மையான மகன் என்று (1: 4) அழைத்தார். பவுல் தெளிவாக தீத்துவை ஒரு நண்பனாகவும் சுவிசேஷத்தில் சக ஊழியனாகவும் புகழ்பெற்றவராகவும், தீத்துவை அவனுடைய பாசத்திற்காகவும், ஆர்வத்துக்காகவும், மற்றவர்களிடம் ஆறுதல்படுத்துவதற்காகவும் பாராட்டினார்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிபி. 63-65 க்கு இடையில் எழுதப்பட்டது.
அப்போஸ்தலனுடைய முதல் ரோம சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு பவுல் தன்னுடைய கடிதத்தை தீத்துவிற்கு நிக்கோபொலிஸிலிருந்து எழுதினார். எபேசுவில் தீமோத்தேயுவை ஊழியம் செய்வதற்காக விட்டுவந்த பிறகு பவுல் தீத்துவுடன் சேர்ந்து கிரேத்தா தீவுக்குச் சென்றார்.
யாருக்காக எழுதப்பட்டது
கிரேத்தாவிலிருந்த விசுவாசத்தில் மகனும் இன்னொரு சக ஊழியக்காரனுமான, தீத்துவுக்கு எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
கிரேத்தாவிலுள்ள இளம் சபைகளில் சில குறைபாடுகளை சரிசெய்ய தீத்துவை அறிவுறுத்துதல், ஒழுங்கமைத்தல் மற்றும் ஒழுங்கற்ற நடத்தையுடைய உறுப்பினர்கள் ஆகியோருக்கு உதவுவதற்காக, (1) புதிய மூப்பர்களை நியமித்தல், (2) கிரேத்தாவிலுள்ள அவிசுவாசிகளுக்கு முன்பாக விசுவாசத்தின் சிறந்த சாட்சிகளை கொடுப்பதற்கு அவர்களை தயார்படுத்துதல் (1: 5).
மையக் கருத்து
நடத்தைக்கான ஒரு கையேடு
பொருளடக்கம்
1. வாழ்த்துக்கள் — 1:1-4
2. மூப்பர்களின் நியமனம் — 1:5-16
3. பல்வேறு வயதினரைப் பற்றிய அறிவுரை — 2:1-3:11
4. முடிவுரை குறிப்புகள் — 3:12-15

அத்தியாயம் 1
1 தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம மகனாகிய தீத்துவிற்கு எழுதுகிறதாவது: 2 பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. 3 பொய்யுரையாத தேவன் ஆரம்பகாலமுதல் நித்தியஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் செய்து அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, 4 ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்.
கிரேத்தா தீவில் தீத்துவின் பணி
5 நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பர்களை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தா தீவிலே விட்டுவந்தேன். 6 குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கர்களென்றும் அடங்காதவர்களென்றும் பெயரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவன் இருந்தால் அவனையே மூப்பராக ஏற்படுத்தலாம். 7 ஏனென்றால், கண்காணியானவன் தேவனுடைய மேற்பார்வைக்காரனுக்குரியவிதமாக, குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடிக்காதவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்காதவனும், 8 அந்நியர்களை உபசரிக்கிறவனும், நல்லவைகள்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும், 9 ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்த்து பேசுகிறவர்களைக் கடிந்துகொள்ளவும் வல்லவனுமாக இருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாகப் பற்றிக்கொள்ளுகிறவனுமாக இருக்கவேண்டும். 10 அநேகர், விசேஷமாக விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண் பேச்சுக்காரர்களும், மனதை மயக்குகிறவர்களுமாக இருக்கிறார்கள். 11 அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்திற்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள். 12 கிரேத்தா தீவைச்சேர்ந்தவர்கள் ஓயாத பொய்யர்கள், காட்டுமிராண்டிகள், பெருந்தீனிச் சோம்பேறிகள் என்று அவர்களில் ஒருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான். 13 இந்தச் சாட்சி உண்மையாக இருக்கிறது; எனவே, அவர்கள் யூதர்களுடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தைவிட்டு விலகுகிற மனிதர்களுடைய கட்டளைகளுக்கும் செவிகொடுக்காமல், 14 விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள். 15 சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாக இருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாக இருக்காது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாக இருக்கும். 16 அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், செயல்களினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நல்ல செயல்களையும் செய்ய தகுதியற்றவர்களுமாக இருக்கிறார்கள்.

தீத்து 2 ->