Link to home pageLanguagesLink to all Bible versions on this site

உன்னதப்பாட்டு
ஆசிரியர்
இந்த புத்தகத்தின் முதல் அதிகாரத்தின் முதல் வசனத்திலிருந்து தலைப்பு எடுக்கப்பட்டுள்ளது. சாலொமோன் பாடின உன்னதப் பாட்டு. (1:1). இவனுடைய பெயர் இந்த புத்தக முழுவதும் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறது (1:5; 3:7, 9, 11; 8:11-12).
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு. 971 க்கும் 965 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது.
சாலொமோன் இஸ்ரவேலின் இராஜாவாக இருந்த காலத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டது. ஆட்சியின் தொடக்கத்தில் எழுதப்பட்டதாக வேத அறிஞர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்கள். அவருடைய காதல் வார்த்தைகளை பார்த்து மாத்திரம் அல்ல, ஆசிரியர் இஸ்ரவேலின் வட தேசத்தையும் தென்தேசத்தையும் லெபனான் எகிப்துவையும் குறிப்பிடுகிறார்.
யாருக்காக எழுதப்பட்டது
திருமணமானவர்களுக்கும் திருமணத்திற்கு ஆயுத்தமாகி கொண்டிருப்பவர்களுக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
இந்த புத்தகம், திருமணம் தேவனால் உண்டாக்கப்பட்டது காட்டுகிறது. திருமணத்தில் உள்ள காதலை கவிதை நடையில் உயர்த்தி காட்டுகிறான் ஒரு கணவனும் மனைவியும், திருமண உறவில் ஒருவரை ஒருவர் சரீரப்பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும், ஆத்மீக பூர்வமாகவும் காதல் செய்யவேண்டும் என்று கற்பிக்கிறது.
மையக் கருத்து
காதலும் திருமணமும்
பொருளடக்கம்
1. மணவாட்டி சாலொமோனை குறித்து நினைத்து கொண்டிருக்கிறாள் — 1:1-3:5
2. மணவாட்டி காதல் சம்மதத்தை ஏற்றுக்கொண்டு திருமணத்திற்கு எதிர்ப்பார்த்துக்கொண்டு இருக்கிறாள் — 3:6-5:1
3. மணவாட்டி தன் மணவாளனை இழுந்துவிட்டது போல் கனவு காண்கிறாள். — 5:2-6:3
4. மணவாட்டியும் தன் மணவாளனும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்ளுகிறார்கள். — 6:4-8:14

அத்தியாயம் 1
விருந்து
1 சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.
மணவாளி
2 நீர் உமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவீராக[a]:
உமது நேசம் திராட்சைரசத்தைவிட இன்பமானது.
3 உமது நறுமணமுள்ள தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்;
உமது நாமம் ஊற்றப்பட்ட நறுமணமுள்ள தைலமாக இருக்கிறது;
ஆகையால் இளம்பெண்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
4 என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்;
ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டு வந்தார்;
நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்;
திராட்சைரசத்தைவிட உமது நேசத்தை நினைப்போம்;
உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
5 எருசலேமின் பெண்களே! கேதாரின்[b] கூடாரங்களைப்போலவும்,
சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாக இருந்தாலும்,
அழகாக இருக்கிறேன்.
6 நான் கறுப்பாக இருக்கிறேன் என்று பார்க்காதீர்கள்;
வெயில் என்மேல் பட்டது;
என் சகோதரர்கள் என்மேல் கோபமாயிருந்து,
என்னைத் திராட்சைத் தோட்டங்களுக்குக்[c] காவற்காரியாக வைத்தார்கள்;
என் சொந்தத் திராட்சைத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.
7 என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து,
அதை மத்தியானத்தில் எங்கே சேர்க்கிறீர்?
எனக்குச் சொல்லும்;
உமது தோழர்களின் மந்தைகளின் அருகே அலைந்து திரிகிறவளைப்போல[d] நான் இருக்கவேண்டியதென்ன?
மணவாளன்
8 பெண்களில் அழகு மிகுந்தவளே!
அதை நீ அறியவில்லையென்றால், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய்,
மேய்ப்பர்களுடைய கூடாரங்களுக்கு அருகில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.
9 என் பிரியமே!
பார்வோனுடைய இரதங்களில் பூட்டப்பட்டிருக்கிற பெண்குதிரைக் கூட்டத்திற்கு உன்னை ஒப்பிடுகிறேன்.
10 அணிகலன்கள் அணிந்த உன் கன்னங்களும்,
ஆரங்கள் அணிந்த உன் கழுத்தும் அழகாக இருக்கிறது.
மணவாளி
11 வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குச் செய்விப்போம்.
12 ராஜா தமது பந்தியிலிருக்கும்[e]வரை
என்னுடைய நறுமணமுள்ள தைலம் தன் வாசனையை வீசும்.
13 என் நேசர் எனக்கு என் மார்பகங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.
14 என் நேசர் எனக்கு எங்கேதி[f] ஊர் திராட்சைத்தோட்டங்களில்
முளைக்கும் மருதாணிப் பூங்கொத்து.
மணவாளன்
15 என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்;
நீ மிக அழகுள்ளவள்;
உன் கண்கள் புறாக்கண்கள்.
மணவாளி 16 நீர் ரூபமுள்ளவர்;
என் நேசரே! நீர் இன்பமானவர்;
நம்முடைய படுக்கை பசுமையானது.
17 நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுரு மரம்,
நம்முடைய வீட்டின் மேல்தளம் தேவதாரு மரம்.

உன்னதப்பாட்டு 2 ->