Link to home pageLanguagesLink to all Bible versions on this site
அத்தியாயம் 13
அதிகாரத்திற்குக் கீழ்ப்படிதல்
1 எந்த மனிதனும் உயர் அதிகாரம் உள்ளவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும்; ஏனென்றால், தேவனாலேயல்லாமல் ஒரு அதிகாரமும் இல்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. 2 எனவே, அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே தண்டனையை வரவழைத்துக்கொள்கிறார்கள். 3 மேலும் அதிகாரிகள் நல்ல செயல்களுக்கு அல்ல, தீய செயல்களுக்கே பயங்கரமாக இருக்கிறார்கள்; எனவே, நீ அதிகாரத்திற்குப் பயப்படாமல் இருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும். 4 உனக்கு நன்மை உண்டாவதற்காக, அவன் தேவனுடைய ஊழியக்காரனாக இருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் வீணாகப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபத்தின் தண்டனையை வரப்பண்ணுவதற்காக, அவன் நீதியைச் செலுத்துகிற தேவனுடைய ஊழியக்காரனாக இருக்கிறானே. 5 எனவே, நீங்கள் கோபத்தின் தண்டனைக்காக மட்டுமில்லை, மனச்சாட்சிக்காகவும் கீழ்ப்படியவேண்டும். 6 இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவனுடைய ஊழியக்காரர்களாக இருக்கிறார்களே. 7 எனவே எல்லோருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; யாருக்கு வரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு வரியையும், யாருக்கு சொத்துவரியைச் செலுத்தவேண்டுமோ அவனுக்கு சொத்துவரியையும் செலுத்துங்கள்; யாருக்குப் பயப்படவேண்டுமோ அவனுக்குப் பயப்படுங்கள்; யாருக்கு மதிப்புக் கொடுக்கவேண்டுமோ அவனுக்கு மதிப்புக் கொடுங்கள்.
அன்பும் நியாயப்பிரமாணமும்
8 ஒருவரிலொருவர் அன்பு செலுத்துகிற கடனைத்தவிர, வேறு எதிலும் யாருக்கும் கடன்படாமல் இருங்கள்; அயலகத்தாரிடம் அன்புசெலுத்துகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான். 9 எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சிக்காமல் இருப்பாயாக என்கிற இந்தக் கட்டளைகளும், வேறு எந்தக் கட்டளையும், உன்னிடத்தில் நீ அன்பாக செலுத்துவதுபோல மற்றவனிடமும் அன்புசெலுத்துவாயாக என்கிற ஒரே வாக்கியத்தில் அடங்கியிருக்கிறது. 10 அன்பு மற்றவனுக்கு தீமை செய்யாது; எனவே, அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக இருக்கிறது. 11 தூக்கத்தைவிட்டு எழுந்திருக்க வேண்டிய நேரமானது என்று, நாம் நேரத்தை அறிந்தவர்களாக, இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு அருகில் இருந்ததைவிட இப்பொழுது அது நமக்கு மிக அருகில் இருக்கிறது. 12 இரவு கடந்துபோனது, பகல் அருகில் வந்துவிட்டது; எனவே, இருளின் செயல்களை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களை அணிந்துகொள்வோம். 13 களியாட்டும், வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாக நடக்காமல், பகலிலே நடக்கிறவர்கள்போல ஒழுங்காக நடப்போம். 14 தீய இச்சைகளுக்கு இடமாக சரீரத்தைக் கொடுக்காமல், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அணிந்துகொள்ளுங்கள்.

<- ரோமர் 12ரோமர் 14 ->