Link to home pageLanguagesLink to all Bible versions on this site
சங்கீதம் 96
1 யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
பூமியின் குடிகளே, எல்லோரும் யெகோவாவைப் பாடுங்கள்.
2 யெகோவாவைப் பாடி, அவருடைய பெயருக்கு நன்றி சொல்லி,
நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாக அறிவியுங்கள்.
3 தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும்,
எல்லா மக்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.
4 யெகோவா பெரியவரும், மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்;
எல்லா தெய்வங்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
5 எல்லா மக்களுடைய தெய்வங்களும் விக்கிரகங்கள்தானே;
யெகோவாவோவானங்களை உண்டாக்கினவர்.
6 மகிமையும், மேன்மையும் அவர் சமுகத்தில் இருக்கிறது,
வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.
7 மக்களின் வம்சங்களே,
யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்,
கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
8 யெகோவாவுக்கு அவருடைய பெயருக்குரிய மகிமையைச் செலுத்தி,
காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய முற்றங்களில் நுழையுங்கள்.
9 பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்;
பூமியில் உள்ளவர்களே,
நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்.
10 யெகோவா ராஜரிகம்செய்கிறார்,
ஆகையால் உலகம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்.
அவர் மக்களை நிதானமாக நியாயந்தீர்ப்பார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லுங்கள்.
11 வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி,
கடலும் அதின் நிறைவும் முழங்குவதாக.
12 நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக;
அப்பொழுது யெகோவாவுக்கு முன்பாக காட்டுமரங்களெல்லாம் கெம்பீரிக்கும்.
13 அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்;
அவர் உலகத்தை நீதியோடும்,
மக்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.

<- சங்கீதங்கள் 95சங்கீதங்கள் 97 ->