Link to home pageLanguagesLink to all Bible versions on this site
சங்கீதம் 95
1 யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடி,
நம்முடைய இரட்சணியக் கன்மலையைப் புகழ்ந்து பாடக்கடவோம் வாருங்கள்.
2 துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து,
பாடல்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடுவோம்.
3 யெகோவாவே மகா தேவனும், எல்லா தெய்வங்களுக்கும் மகாராஜனுமாக இருக்கிறார்.
4 பூமியின் ஆழங்கள் அவருடைய கையில் இருக்கிறது;
மலைகளின் உயரங்களும் அவருடையவைகள்.
5 கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்;
காய்ந்த தரையையும் அவருடைய கரம் உருவாக்கினது.
6 நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக
நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடுவோம் வாருங்கள்.
7 அவர் நம்முடைய தேவன்;
நாம் அவர் மேய்ச்சலின் மக்களும்,
அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.
8 இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களென்றால்,
வனாந்திரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல,
உங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தாமலிருங்கள்.
9 அங்கே உங்களுடைய முற்பிதாக்கள் என்னைச் சோதித்து,
என்னைப் பரீட்சை பார்த்து, என்னுடைய செயல்களையும் கண்டார்கள்.
10 நாற்பது வருடங்களாக நான் அந்தச் சந்ததியின்மேல் கோபமாக இருந்து,
அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள மக்களென்றும்,
என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,
11 என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் நுழைவதில்லையென்று,
என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.

<- சங்கீதங்கள் 94சங்கீதங்கள் 96 ->