Link to home pageLanguagesLink to all Bible versions on this site
சங்கீதம் 80
எடூத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் பாடல்.
1 இஸ்ரவேலின் மேய்ப்பரே,
யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே,
செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் தங்குகிறவரே, பிரகாசியும்.
2 எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி,
எங்களைக் காப்பாற்ற வந்தருளும்.
3 தேவனே, எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும்,
உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும்,
அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
4 சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,
உமது மக்களின் விண்ணப்பத்திற்கு விரோதமாக நீர்
எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.
5 கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு உணவாகவும்,
மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர்.
6 எங்களுடைய அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்;
எங்களுடைய எதிரிகள் எங்களைக் கேலிசெய்கிறார்கள்.
7 சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும்,
உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும்,
அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.
8 நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக்கொடியைக் கொண்டுவந்து,
தேசங்களைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர்.
9 அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்;
அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது.
10 அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் உயர்ந்து வளர்ந்த கேதுருக்களும் மூடப்பட்டது.
11 அது தன்னுடைய கொடிகளைக் மத்திய தரைக் கடல்வரைக்கும்,
தன்னுடைய கிளைகளை ஆறுவரைக்கும் படரவிட்டது.
12 இப்பொழுதோ வழிநடக்கிற அனைவரும் அதைப் பறிக்கும்படியாக,
அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?
13 காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது,
வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது.
14 சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து,
இந்தத் திராட்சைச்செடியை விசாரித்தருளும்;
15 உம்முடைய வலதுகரம் ஊன்றிய கொடியையும்,
உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் பாதுகாத்தருளும்.
16 அது நெருப்பால் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் போனது;
உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்துபோகிறார்கள்.
17 உமது கரம் உமது வலதுபக்கத்து மனிதன்மீதிலும்,
உமக்கு நீர் திடப்படுத்தின மனிதகுமாரன் மீதிலும் இருப்பதாக.
18 அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்;
எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது பெயரைத் தொழுதுகொள்ளுவோம்.
19 சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,
எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்;
உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும்,
அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

<- சங்கீதங்கள் 79சங்கீதங்கள் 81 ->