Link to home pageLanguagesLink to all Bible versions on this site
சங்கீதம் 52
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல், “தாவீது அகிமெலேக்கின் வீட்டில் இருக்கிறான்” என்று ஏதோமியனாகிய தோவேக் சவுலிடம் போய் கூறியபோது பாடப்பட்ட பாடல்.
1 பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்?
தேவனுடைய கிருபை எந்நாளும் உள்ளது.
2 நீ கேடுகளைச் செய்ய திட்டமிடுகிறாய்,
கபடுசெய்யும் உன்னுடைய நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.
3 நன்மையைவிட தீமையையும்,
யாதார்த்தம் பேசுகிறதைவிட பொய்யையும் விரும்புகிறாய். (சேலா)
4 கபடமுள்ள நாவே, அழிக்கும் எல்லா வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்;
5 தேவன் உன்னை என்றென்றைக்கும் இல்லாதபடி அழித்துப்போடுவார்;
அவர் உன்னைப் பிடித்து, உன் குடியிருப்பிலிருந்து பிடுங்கி,
நீ உயிருள்ளோர் தேசத்தில் இல்லாதபடி உன்னை அழித்துப்போடுவார். (சேலா)
6 நீதிமான்கள் அதைக்கண்டு பயந்து, அவனைப் பார்த்து சிரித்து:
7 இதோ, தேவனைத் தன்னுடைய பெலனாக கருதாமல்,
தன்னுடைய செல்வப்பெருக்கத்தை நம்பி,
தன்னுடைய தீமையில் பலத்துக்கொண்ட மனிதன் இவன்தான் என்பார்கள்.
8 நானோ தேவனுடைய ஆலயத்தில்
பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்,
தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.
9 நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து,
உமது பெயருக்குக் காத்திருப்பேன்;
உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாக இருக்கிறது.

<- சங்கீதங்கள் 51சங்கீதங்கள் 53 ->