Link to home pageLanguagesLink to all Bible versions on this site
சங்கீதம் 145
தாவீதின் நன்றிப்பாடல்.
1 ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி,
உம்முடைய பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் நன்றிசொல்லுவேன்.
2 நாள்தோறும் உமக்கு நன்றிசெலுத்தி,
எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய பெயரைத் துதிப்பேன்.
3 யெகோவா பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாக இருக்கிறார்;
அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது.
4 தலைமுறை தலைமுறையாக உம்முடைய செயல்களின் புகழ்ச்சியைச் சொல்லி,
உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்.
5 உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும்,
உம்முடைய அதிசயமான செயல்களையுங்குறித்துப் பேசுவேன்.
6 மக்கள் உம்முடைய பயங்கரமான செயல்களின் வல்லமையைச் சொல்லுவார்கள்;
உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன்.
7 அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி,
உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்.
8 யெகோவா இரக்கமும் மன உருக்கமும்,
நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.
9 யெகோவா எல்லோர்மேலும் தயவுள்ளவர்;
அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாச் செயல்களின்மேலுமுள்ளது.
10 யெகோவாவே, உம்முடைய செயல்களெல்லாம் உம்மைத் துதிக்கும்;
உம்முடைய பரிசுத்தவான்கள் உமக்கு நன்றி சொல்வார்கள்.
11 மனிதர்களுக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும்,
உமது ராஜ்ஜியத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு;
12 உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து,
உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள்.
13 உம்முடைய ராஜ்ஜியம் எல்லாக் காலங்களிலுமுள்ள ராஜ்ஜியம்,
உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது.
14 யெகோவா விழுகிற அனைவரையும் தாங்கி,
மடங்கடிக்கப்பட்ட அனைவரையும் தூக்கிவிடுகிறார்.
15 எல்லா உயிர்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது;
ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு உணவுகொடுக்கிறீர்.
16 நீர் உமது கையைத் திறந்து,
எல்லா உயிர்களின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.
17 யெகோவா தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும்,
தமது செயல்களிலெல்லாம் கிருபையுள்ளவருமாக இருக்கிறார்.
18 தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும்,
உண்மையாகத் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும்,
யெகோவா அருகில் இருக்கிறார்.
19 அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து,
அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு,
அவர்களைப் பாதுகாக்கிறார்.
20 யெகோவா தம்மில் அன்புகூருகிற அனைவரையும் காப்பாற்றி,
துன்மார்க்கர்கள் அனைவரையும் அழிப்பார்.
21 என்னுடைய வாய் யெகோவாவின் துதியைச் சொல்வதாக;
மாம்ச சரீரமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த பெயரை
எப்பொழுதும் என்றென்றைக்கும் போற்றட்டும்.

<- சங்கீதங்கள் 144சங்கீதங்கள் 146 ->