Link to home pageLanguagesLink to all Bible versions on this site
சங்கீதம் 118
1 யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
2 அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வார்களாக.
3 அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.
4 அவர் கிருபை என்றுமுள்ளதென்று,
யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக.
5 நெருக்கத்திலிருந்து யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்,
யெகோவா என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
6 யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்;
மனிதன் எனக்கு என்ன செய்வான்?
7 எனக்கு உதவி செய்கிறவர்கள் நடுவில் யெகோவா என்னோடு இருக்கிறார்;
என்னுடைய எதிரிகளில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.
8 மனிதனை நம்புவதைவிட,
யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.
9 பிரபுக்களை நம்புவதைவிட யெகோவா மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.
10 எல்லா தேசத்தாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்;
யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.
11 என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்;
யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.
12 தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்;
முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்;
யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.
13 நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்;
யெகோவாவோ எனக்கு உதவி செய்தார்.
14 யெகோவா என்னுடைய பெலனும், என்னுடைய பாடலுமானவர்;
அவர் எனக்கு இரட்சிப்புமானார்.
15 நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு;
யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
16 யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது;
யெகோவாவின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
17 நான் சாகாமல், பிழைத்திருந்து,
யெகோவாவுடைய செய்கைகளை விவரிப்பேன்.
18 யெகோவா என்னைக் கடினமாகத் தண்டித்தும்,
என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.
19 நீதியின் வாசல்களைத் திறவுங்கள்;
நான் அவைகளுக்குள் நுழைந்து யெகோவாவை துதிப்பேன்.
20 யெகோவாவின் வாசல் இதுவே;
நீதிமான்கள் இதற்குள் நுழைவார்கள்.
21 நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாக இருந்தபடியால்,
நான் உம்மைத் துதிப்பேன்.
22 வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே,
மூலைக்குத் தலைக்கல்லானது.
23 அது யெகோவாவாலே ஆனது,
அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
24 இது யெகோவா உண்டாக்கின நாள்;
இதிலே சந்தோஷப்பட்டு மகிழ்வோம்.
25 யெகோவாவே, இரட்சியும்;
யெகோவாவே, காரியத்தை வாய்க்கச்செய்யும்.
26 யெகோவாவுடைய பெயராலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;
யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து
உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
27 யெகோவா நம்மைப் பிரகாசிக்கச்செய்கிற தேவனாக இருக்கிறார்;
பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.
28 நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்;
நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.
29 யெகோவாவை துதியுங்கள், அவர் நல்லவர்;
அவர் கிருபை என்றுமுள்ளது.

<- சங்கீதங்கள் 117சங்கீதங்கள் 119 ->