Link to home pageLanguagesLink to all Bible versions on this site
அத்தியாயம் 9
ஞானி மற்றும் பேதையர்களுக்கான அழைப்பு
1 ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டி,
தன்னுடைய செதுக்கப்பட்ட ஏழு தூண்களையும் அமைத்து,
2 தன்னுடைய கொழுத்த மிருகங்களை அடித்து,
திராட்சைரசத்தை ஊற்றிவைத்து,
தன்னுடைய உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தி,
3 தன்னுடைய பணிவிடைக்காரிகளை அனுப்பி,
பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,
4 புத்தியீனனை நோக்கி:
எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும்.
5 நீங்கள் வந்து என்னுடைய அப்பத்தைச் சாப்பிட்டு,
நான் ஊற்றிய திராட்சைரசத்தைக் குடியுங்கள்.
6 பேதமையைவிட்டு விலகுங்கள்,
அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்;
புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று சொல்லுகிறது.
7 பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்;
துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.
8 பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே,
அவன் உன்னைப் பகைப்பான்;
ஞானமுள்ளவனைக் கடிந்துகொள்,
அவன் உன்னை நேசிப்பான்.
9 ஞானமுள்ளவனுக்குப் போதி, அவன் ஞானத்தில் தேறுவான்;
நீதிமானுக்கு உபதேசம் செய்,
அவன் அறிவில் விருத்தியடைவான்.
10 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;
பரிசுத்த தேவனின் அறிவே அறிவு.
11 என்னாலே உன்னுடைய ஆயுசு நாட்கள் பெருகும்;
ஆயுளின் வருடங்கள் விருத்தியாகும்.
12 நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்;
நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.
13 மதியற்ற பெண் வாயாடியும் ஒன்றுமறியாத மூடத்தனம் உள்ளவளுமாக இருக்கிறாள்.
14 அவள் தன்னுடைய வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் இருக்கைபோட்டு உட்கார்ந்து,
15 தங்களுடைய வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கர்களைப் பார்த்து:
16 எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும் என்றும்,
17 மதியீனனை நோக்கி:
திருட்டுத்தண்ணீர் தித்திக்கும்,
மறைவான இடத்தில் சாப்பிடும் அப்பம் இன்பமாக இருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.
18 இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும்,
அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான்.

<- நீதிமொழிகள் 8நீதிமொழிகள் 10 ->