அத்தியாயம் 13
கானானை விவரித்தல்
1 யெகோவா மோசேயை நோக்கி: 2 “நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதர்களை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய மனிதனை அனுப்பவேண்டும் என்றார். 3 மோசே யெகோவாவுடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்திரத்திலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர்கள் யாவரும் இஸ்ரவேல் மக்களின் தலைவர்கள். 4 அவர்களுடைய பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் மகன் சம்முவா. 5 சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் மகன் சாப்பாத். 6 யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் மகன் காலேப். 7 இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் மகன் ஈகால். 8 எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் மகன் ஓசேயா. 9 பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் மகன் பல்த்தி. 10 செபுலோன் கோத்திரத்தில் சோதியின் மகன் காதியேல். 11 யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் மகன் காதி. 12 தாண் கோத்திரத்தில் கெமல்லியின் மகன் அம்மியேல். 13 ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் மகன் சேத்தூர். 14 நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் மகன் நாகபி. 15 காத் கோத்திரத்தில் மாகியின் மகன் கூவேல். 16 தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதர்களின் பெயர்கள் இவைகளே: நூனின் மகனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பெயரிட்டிருந்தான். 17 அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்பும்போது, அவர்களை நோக்கி: “நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி, 18 தேசம் எப்படிப்பட்டது என்றும், அங்கே குடியிருக்கிற மக்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும், 19 அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டது என்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும், 20 நிலம் எப்படிப்பட்டது அது வளமானதோ வளமில்லாததோ என்றும்; அதில் மரங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியம்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சைச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாக இருந்தது. 21 அவர்கள் போய், சீன் வனாந்திரம்துவங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியாகிய ரேகொப்வரை, தேசத்தைச் சுற்றிப்பார்த்து, 22 தெற்கேயும் சென்று, எபிரோன்வரை போனார்கள்; அங்கே ஏனாக்கின் மகன்களாகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருடங்களுக்குமுன்னே கட்டப்பட்டது. 23 பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குவரை போய், அங்கே ஒரே குலையுள்ள ஒரு திராட்சைக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டு பேர் கட்டித் தூக்கிக்கொண்டு வந்தார்கள்; மாதுளம் பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள். 24 இஸ்ரவேல் மக்கள் அங்கே அறுத்த திராட்சைக்குலையினால், அந்த இடம் எஸ்கோல்*திராட்சை குலை பள்ளத்தாக்கு எனப்பட்டது. 25 அவர்கள் தேசத்தைச் சுற்றிப் பார்த்து, நாற்பதுநாட்கள் சென்றபின்பு திரும்பினார்கள். 26 அவர்கள் பாரான் வனாந்திரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் மக்களாகிய சபையார் எல்லோரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையார் அனைவருக்கும் செய்தியை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள். 27 அவர்கள் மோசேயை நோக்கி: “நீர் எங்களை அனுப்பின தேசத்திற்கு நாங்கள் போய் வந்தோம்; அது பாலும் தேனும்†மிகவும் செழிப்பான ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி. 28 ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற மக்கள் பலவான்கள்; பட்டணங்கள் பாதுகாப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாக இருக்கிறது; அங்கே ஏனாக்கின் மகன்களையும் கண்டோம். 29 அமலேக்கியர்கள் தென்புறமான தேசத்தில் குடியிருக்கிறார்கள்; ஏத்தியர்களும், எபூசியர்களும், எமோரியர்களும் மலைநாட்டில் குடியிருக்கிறார்கள்; கானானியர்கள் மத்திய தரைக் கடல் அருகிலும் யோர்தானுக்கு அருகில் குடியிருக்கிறார்கள்” என்றார்கள். 30 அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக மக்களை அமர்த்தி: “நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவோம்; நாம் அதை எளிதாக ஜெயித்துக்கொள்ளலாம்” என்றான். 31 அவனோடுகூடப் போய்வந்த மனிதர்களோ: “நாம் போய் அந்த மக்களோடு எதிர்க்க நம்மாலே முடியாது; அவர்கள் நம்மைவிட பலவான்கள் என்றார்கள். 32 “நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்து வந்த அந்த தேசம் தன்னுடைய குடிகளை தாங்களே உண்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட மக்கள் எல்லோரும் மிகவும் பெரிய ஆட்கள். 33 அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் மகன்களாகிய இராட்சதர்களையும் கண்டோம்; நாங்கள் எங்களுடைய பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்களுடைய பார்வைக்கும் அப்படியே இருந்தோம்” என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் மக்களுக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.
<- எண்ணாகமம் 12எண்ணாகமம் 14 ->
*அத்தியாயம் 13:24 திராட்சை குலை
†அத்தியாயம் 13:27 மிகவும் செழிப்பான