Link to home pageLanguagesLink to all Bible versions on this site
அத்தியாயம் 9
1 இயேசு அவர்களைப் பார்த்து: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடு வருவதைப் பார்ப்பதற்குமுன்பு, மரிப்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இயேசு மறுரூபமடைதல்
2 ஆறு நாட்களுக்குப்பின்பு, இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார். 3 அவருடைய உடை உறைந்த மழையைப்போல பூமியிலே எந்தவொரு நபராலும் வெளுக்கக்கூடாத வெண்மையாகப் பிரகாசித்தது. 4 அப்பொழுது மோசேயும் எலியாவும் இயேசுவோடு பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். 5 அப்பொழுது பேதுரு இயேசுவைப் பார்த்து: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். 6 அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால், தான் பேசுகிறது என்ன என்று தெரியாமல் இப்படிச் சொன்னான். 7 அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவர் சொல்வதைக் கேளுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. 8 உடனே அவர்கள் சுற்றிலும் பார்த்தபோது, இயேசுவைத்தவிர வேறுயாரையும் பார்க்கவில்லை. 9 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் பார்த்தவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார். 10 மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பது என்னவென்று அவர்கள் ஒருவரோடொருவர் விசாரித்து, அந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு: 11 எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்களே, அது எப்படி என்று அவரிடம் கேட்டார்கள். 12 அவர் மறுமொழியாக: எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது உண்மைதான்; அல்லாமலும், மனிதகுமாரன் பல பாடுகள்பட்டு, அவமதிக்கப்படுவார் என்று, அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என்றார். 13 ஆனாலும் எலியா வந்துவிட்டான், அவனைக்குறித்து எழுதியிருக்கிறபடி தங்களுக்கு விருப்பமானபடி அவனுக்குச் செய்தார்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இயேசு அசுத்தஆவி பிடித்த வாலிபனை சுகப்படுத்தல்
14 பின்பு அவர் சீடர்களிடம் வந்தபோது, அவர்களைச் சுற்றி மக்கள்கூட்டம் நிற்கிறதையும், அவர்களோடு வேதபண்டிதர்கள் வாக்குவாதம்பண்ணுகிறதையும் பார்த்தார். 15 மக்கள்கூட்டத்தினர் அவரைப் பார்த்தவுடன் அதிக ஆச்சரியப்பட்டு, ஓடிவந்து, அவரை வாழ்த்தினார்கள். 16 அவர் வேதபண்டிதர்களைப் பார்த்து: நீங்கள் இவர்களோடு எதைக்குறித்து வாக்குவாதம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார். 17 அப்பொழுது மக்கள்கூட்டத்தில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். 18 அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களிடம் கேட்டேன்; அவர்களால் முடியவில்லை என்றான். 19 அவர் மறுமொழியாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார். 20 அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைப் பார்த்தவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான். 21 இயேசு அவனுடைய தகப்பனைப் பார்த்து: எவ்வளவு காலங்களாக இப்படி இருக்கிறது? என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயதிலிருந்தே இப்படி இருக்கிறது; 22 இவனைக் கொல்லுவதற்காக அந்த ஆவி அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் தள்ளியது. நீர் ஏதாவது செய்யமுடியுமானால், எங்கள்மேல் மனமிறங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான். 23 இயேசு அவனைப் பார்த்து: நீ விசுவாசித்தால் நடக்கும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் சாத்தியமாகும் என்றார். 24 உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடு சத்தமிட்டுச் சொன்னான். 25 அப்பொழுது மக்கள் கூட்டமாக ஓடிவருகிறதை இயேசு பார்த்து, அந்த அசுத்தஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனைவிட்டு வெளியே போ, இனி இவனுக்குள் மீண்டும் போகக்கூடாது என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார். 26 அப்பொழுது அந்த ஆவி சத்தமிட்டு, அவனை அதிகமாக அலைக்கழித்து வெளியேபோனது. அவன் மரித்துப்போனான் என்று மக்கள் சொல்லத்தக்கதாக மரித்தவன்போல கிடந்தான். 27 இயேசு அவன் கையைப் பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான். 28 அவர் வீட்டிற்கு வந்தபொழுது, அவருடைய சீடர்கள்: அந்த ஆவியைத் துரத்திவிட எங்களால் ஏன் முடியவில்லை என்று அவரிடம் கேட்டார்கள். 29 அதற்கு அவர்: இந்தவகைப் பிசாசை ஜெபத்தினாலும் உபவாசத்தினாலும்தவிர மற்ற எந்தவிதத்திலும் துரத்தமுடியாது என்றார். 30 பின்பு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அது யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பினார். 31 ஏனென்றால், மனிதகுமாரன் மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம்நாளிலே உயிரோடு எழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீடர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார். 32 அவர்களோ அந்த வார்த்தையைப் புரிந்துகொள்ளவில்லை, அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள்.
யார் பெரியவன்?
33 அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களைப் பார்த்து: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள் வாக்குவாதம்பண்ணினீர்கள் என்று கேட்டார். 34 அதற்கு அவர்கள் மவுனமாக இருந்தார்கள்; ஏனென்றால், அவர்கள் தங்களுக்குள் எவன் பெரியவன் என்று வழியில் வாக்குவாதம்பண்ணினார்கள். 35 அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிரண்டுபேரையும் அழைத்து: யாராவது முதல்வனாக இருக்கவிரும்பினால் அவன் எல்லோருக்கும் கீழானவனும், எல்லோருக்கும் ஊழியக்காரனுமாக இருக்கவேண்டும் என்று சொல்லி; 36 ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு: 37 இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்.
நமக்கு விரோதமாக இல்லாதவன் நம்மோடு இருக்கிறான்
38 அப்பொழுது யோவான் அவரைப் பார்த்து: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைப் பார்த்தோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவன், எனவே நாங்கள் அவனைத் தடுத்தோம் என்றான். 39 அதற்கு இயேசு: அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதம் செய்கிறவன் எளிதாக என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான். 40 நமக்கு விரோதமாக இல்லாதவன் நம்மோடு இருக்கிறான். 41 நீங்கள் கிறிஸ்துவை உடையவர்களாக இருக்கிறதினாலே, என் நாமத்தினாலே உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை பெறாமல் போவதில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இடறுதலுக்குக் காரணமாகுதல்
42 என்னிடம் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி, கடலில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாக இருக்கும். 43 உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கைகள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திற்குப் போவதைவிட, ஊனமுள்ளவனாக ஜீவனுக்குள் போவது உனக்கு நலமாக இருக்கும். 44 அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும். 45 உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதை வெட்டிப்போடு; நீ இரண்டு கால்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, கால்கள் நடக்கமுடியாதவனாக ஜீவனுக்குள் செல்வது உனக்கு நலமாக இருக்கும். 46 அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும். 47 உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்கள் உள்ளவனாக அணையாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக தேவனுடைய ராஜ்யத்திற்குச் செல்வது உனக்கு நலமாக இருக்கும். 48 அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும். 49 எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனிதனும் அக்கினியினால் உப்பிடப்படுவான். 50 உப்பு நல்லதுதான், உப்பு சாரமில்லாமல் போனால், அதை எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாக இருங்கள், ஒருவரோடொருவர் சமாதானம் உள்ளவர்களாக இருங்கள் என்றார்.

<- மாற்கு 8மாற்கு 10 ->