Link to home pageLanguagesLink to all Bible versions on this site
அத்தியாயம் 19
விவாகரத்தைப்பற்றிய இயேசுவின் போதனை
1 இயேசு இந்த வசனங்களைச் சொல்லிமுடித்தபின்பு, அவர் கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவிற்கு வந்தார். 2 திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்; அந்த இடத்தில் அவர்களை குணமாக்கினார். 3 அப்பொழுது, பரிசேயர்கள் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: கணவனானவன் தன் மனைவியை எந்தக்காரணத்தினாலாவது விவாகரத்து செய்வது நியாயமா என்று கேட்டார்கள். 4 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: ஆரம்பத்திலே மனிதர்களை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், 5 இதினிமித்தம் கணவனானவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? 6 இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவர்களாக இல்லாமல், ஒரே சரீரமாக இருக்கிறார்கள்; ஆகவே, தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவேண்டும் என்றார். 7 அதற்கு அவர்கள்: அப்படியானால், விடுதலைப்பத்திரம் கொடுத்து, அவளை விவாகரத்து செய்யலாம் என்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள். 8 அதற்கு அவர்: உங்களுடைய மனைவிகளை விவாகரத்து செய்யலாம் என்று உங்களுடைய இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆரம்பமுதலாய் அப்படியிருக்கவில்லை. 9 ஆதலால், எவனாவது தன் மனைவி வேசித்தனம் செய்ததினிமித்தமேயன்றி, அவளை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம்செய்தால், அவன் விபசாரம் செய்கிறவனாக இருப்பான்; விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 10 அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: மனைவியைப்பற்றி கணவனுடைய காரியம் இப்படியிருந்தால், திருமணம்செய்கிறது நல்லதல்ல என்றார்கள். 11 அதற்கு அவர்: வரம்பெற்றவர்களேதவிர மற்றவர்கள் இந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 12 தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தவர்களும் உண்டு; மனிதர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.
இயேசுவும் சிறுபிள்ளைகளும்
13 அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் அவர் கரங்களை வைத்து ஜெபம்செய்யும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீடர்கள் அதட்டினார்கள். 14 இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைசெய்யாமலிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி, 15 அவர்கள்மேல் கரங்களை வைத்து, பின்பு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.
செல்வந்தனான இளைஞன்
16 அப்பொழுது ஒருவன் வந்து, அவரைப் பார்த்து: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். 17 அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கட்டளைகளைக் கைக்கொள் என்றார். 18 அவன் அவரைப் பார்த்து: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக; 19 உன் தகப்பனையும் உன் தாயையும் மதிப்பாயாக; உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பவைகளையே என்றார். 20 அந்த வாலிபன் அவரைப் பார்த்து: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான். 21 அதற்கு இயேசு: நீ தேவனுக்கு பூரண சற்குணனாக இருக்கவிரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குச் செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். 22 அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாக இருந்தபடியால், இயேசு சொன்னவைகளைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாகப் போய்விட்டான். 23 அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தன் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது சுலபமல்லவென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 24 மேலும் செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 25 அவருடைய சீடர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் இரட்சிக்கப்படமுடியும் என்றார்கள். 26 இயேசு, அவர்களைப் பார்த்து: மனிதர்களால் இது முடியாததுதான்; தேவனாலே எல்லாம் முடியும் என்றார். 27 அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான். 28 அதற்கு இயேசு: மறுபிறப்பின் காலத்திலே மனிதகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருப்பீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 29 என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரர்களையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது இழந்தவன் எவனோ, அவன் நூறுமடங்காகப் பெற்று, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; 30 ஆனாலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராகவும், பிந்தினோர் அநேகர் முந்தினோராகவும் இருப்பார்கள் என்றார்.

<- மத்தேயு 18மத்தேயு 20 ->