Link to home pageLanguagesLink to all Bible versions on this site
அத்தியாயம் 11
இயேசுவும் யோவான்ஸ்நானனும்
1 இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களுக்கும் கட்டளைக் கொடுத்துமுடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அந்த இடத்தைவிட்டுப் போனார். 2 அந்தநேரத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் செயல்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து: 3 வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வருவதற்காக நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான். 4 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடம்போய் அறிவியுங்கள்; 5 குருடர்கள் பார்வையடைகிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது. 6 என்னிடத்தில் இடறலடையாமலிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். 7 அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? 8 இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய உடை அணிந்திருந்த மனிதனையோ? மெல்லிய உடை அணிந்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள். 9 இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 10 அதெப்படியெனில்:
இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்;
அவன் உமக்குமுன்னேபோய்,
உமது வழியை ஆயத்தம் செய்வான்’ என்று வேதத்தில் எழுதப்பட்டவன் இவன்தான்.

11 பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆனாலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறானென்று உங்களுக்கு உண்மையாகவே சொல்லுகிறேன். 12 யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் செய்யப்படுகிறது; பலவந்தம் செய்கிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள். 13 நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் அனைவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் சொன்னதுண்டு. 14 நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான். 15 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும். 16 இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்களுடைய தோழரைப் பார்த்து: 17 உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாக இருக்கிறது. 18 எப்படியென்றால், யோவான் உபவாசிக்கிறவனாகவும் திராட்சைரசம் குடிக்காதவனாகவும் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன்என்றார்கள். 19 உண்கிறவராகவும் குடிக்கிறவராகவும் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, உணவுப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் என்கிறார்கள். ஆனாலும், ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.

மனந்திரும்பாத பட்டணங்கள்
20 அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற்போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்: 21 கோராசீனே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள். 22 நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்குச் சம்பவிப்பதைவிட, தீருவிற்கும் சீதோனுக்கும் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 23 வானம்வரை உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்தநாள்வரை நிலைத்திருக்கும். 24 நியாயத்தீர்ப்புநாளிலே உனக்குச் சம்பவிப்பதைவிட, சோதோம் நாட்டிற்குச் சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
பாரம் சுமக்கிறவர்களுக்கு இளைப்பாறுதல்
25 அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். 26 ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது. 27 எல்லாம் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதாவைத்தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்குப் பிதாவை வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதாவை அறியமாட்டான். 28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். 29 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்களுடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். 30 என் நுகம் எளிதாகவும், என் சுமை இலகுவாகவும் இருக்கிறது என்றார்.

<- மத்தேயு 10மத்தேயு 12 ->