என்று ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி,
6 அவன் யோர்தான் நதிக்கு அருகில் உள்ள தேசத்திற்குப்போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான். 7 அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்த மக்கள் கூட்டத்தை நோக்கி: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்?
8 மனந்திரும்புதலுக்கு தகுந்த கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுடைய தகப்பன் என்று உங்களுக்குள்ளேசொல்லாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினால் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 9 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும் என்றான். 10 அப்பொழுது மக்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். 11 அவர்களுக்கு அவன் மறுமொழியாக: இரண்டு மேலாடையை வைத்திருக்கிறவன், ஒன்றும் இல்லாதவனுக்கு அதில் ஒன்றைக் கொடுக்கவேண்டும்; உணவு வைத்திருப்பவனும் அப்படியே செய்யவேண்டும்” என்றான். 12 வரி வசூலிப்பவர்களும் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்து, அவனை நோக்கி: “போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள். 13 அதற்கு அவன்: “உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதற்குமேல் அதிகமாக ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான். 14 போர்வீரர்களும் அவனை நோக்கி: “நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு அவன்: “நீங்கள் யாரிடமும் கட்டாயப்படுத்தி பணம் வாங்காமலும், ஒருவன் மேலும் பொய்யாக குற்றஞ்சாட்டாமலும், உங்களுடைய சம்பளமே போதும் என்று இருங்கள்” என்றான். 15 யோவானைப்பற்றி: இவன்தான் கிறிஸ்துவோ என்று மக்களெல்லோரும் நினைத்துக்கொண்டு, தங்களுடைய இருதயங்களில் யோசித்துக்கொண்டிருக்கும்போது, 16 யோவான் எல்லோருக்கும் மறுமொழியாக: “நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன், என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய காலணிகளின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை, அவர் பரிசுத்த ஆவியானவராலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். 17 தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான். 18 வேறு அநேக புத்திமதிகளையும் அவன் மக்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான். 19 தேசத்தின் அதிபதியாகிய ஏரோது, அவன் சகோதரன் பிலிப்புவின் மனைவியாகிய ஏரோதியாளைத் திருமணம் செய்ததாலும், அவன் செய்த மற்றப் பொல்லாங்குகளுக்காகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது, 20 ஏரோது தான் செய்த மற்ற எல்லாப் பொல்லாங்குகளும் போதாதென்று, யோவானைப் பிடித்து சிறையில் அடைத்துவைத்தான்.