லூக்கா ஆசிரியர் பண்டைய எழுத்தாளர்களின் ஒருமித்த நம்பிக்கை என்னவெனில் எழுத்தாளர் லூக்கா, மருத்துவராக இருந்தார். அவரது எழுத்துக்களிலிருந்து பார்க்கும்போது, அவர் இரண்டாவது தலைமுறை கிறிஸ்தவர் என்று தோன்றுகிறது என்பதாகும். பாரம்பரியமாக அவர் ஒரு நல்ல மனிதராக கருதப்படுகிறார், குறிப்பாக ஒரு நற்செய்தியாளராக இருந்தார், சுவிசேஷத்தையும் அப்போஸ்தலர் புத்தகத்தையும் எழுதி, பவுலுடன் இணைந்து மிஷனரி ஊழியத்தையும் நிறைவேற்றினார் (கொலோ 4:14; 2 தீ. 4:11; பிலிப்பியர். 24). எழுதப்பட்ட காலம் மற்றும் இடம் ஏறத்தாழ கிபி 60-80 காலகட்டத்தில் எழுதப்பட்டது. லூக்கா தனது புத்தகத்தை செசரியா பட்டணத்தில் ஆரம்பித்து ரோமில் முடித்தார். எழுத்தின் முக்கிய இடங்கள் பெத்லகேம், கலிலேயா, யூதேயா மற்றும் எருசலேம் ஆகியவை ஆகும். யாருக்காக எழுதப்பட்டது லூக்காவின் புத்தகம் தெயோப்பிலுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, அப்பெயரின் அர்த்தம் தேவனை நேசிப்பவர் என்பதாகும். அவர் ஏற்கனவே ஒரு கிறிஸ்தவராக இருந்தாரா, அல்லது அவர் கிறிஸ்தவராக மாறி வருகிறாரா என்பது தெளிவாக இல்லை. லூக்கா அவரை மிகச் சிறந்தவராக (லூக்கா 1:3) அடையாளப்படுத்துவதன் காரணம் அவர் ஒரு ரோமானிய அதிகாரி என்று குறிப்பிடுகிறார், பல விதமான சான்றுகள் புறஜாதி வாசகர்களைக் குறிக்கின்றன, அவருடைய முக்கிய கவனம் மனிதகுமாரன் மற்றும் தேவனுடைய இராச்சியம் ஆகியவை ஆகும் (லூக்கா 5:24, 19:10, 17:20-21, 13:18). எழுதப்பட்ட நோக்கம் இயேசுவின் வாழ்க்கை பற்றிய ஒரு விளக்கம், லூக்கா இயேசுவை மனிதகுமாரனாக முன்வைக்கிறார், அவர் தெயோப்பிலுவுக்கு எழுதியுள்ளார், அதனால் அவர் கற்பிக்கப்பட்ட விஷயங்களைப் பற்றி பரிபூரணமான புரிந்துணர்வுடன் இருக்கலாம் (லூக் 1:4). இயேசுவைப் பின்பற்றுவோருக்குத் துன்புறுத்துவது அல்லது கெட்டது எதுவுமே இல்லை என்பதைக் காட்டுவதற்கு துன்புறுத்தலின் சமயத்தில் லூக்கா கிறிஸ்தவத்தை பாதுகாப்பதற்காக எழுதுகிறார். மையக் கருத்து இயேசு பூரணமான மனிதர். பொருளடக்கம் 1. இயேசுவின் பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை — 1:5-2:52 2. இயேசுவின் ஊழியத்தின் தொடக்கம் — 3:1-4:13 3. இரட்சிப்பின் காரணரான இயேசு — 4:14-9:50 4. இயேசு சிலுவைக்கு சென்ற பாதை — 9:51-19:27 5. எருசலேமுக்குள் இயேசுவின் வெற்றிகரமான பிரவேசம், சிலுவையில் அறையப்படுதல் மற்றும் உயிர்த்தெழுதல் — 19:28-24:53
அத்தியாயம் 1முன்னுரை 1 மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாக நம்புகிற காரியங்களை, 2 ஆரம்பமுதல் கண்கூடாகப் பார்த்து வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்து சரித்திரம் எழுத அநேகம்பேர் முயற்சித்தனர். 3 ஆகவே, ஆரம்பமுதல் எல்லாவற்றையும் திட்டமாக விசாரித்து அறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட காரியங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டும் என்று, 4 அவைகளை சரியாக ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது எனக்கு நல்லதாகத் தோன்றியது. யோவான்ஸ்நானனின் பிறப்பை முன்னறிவித்தல் 5 யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வம்சத்தைச் சேர்ந்த சகரியா என்னும் பெயர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவி ஆரோனுடைய சந்ததியில் ஒருத்தி, அவளுடைய பெயர் எலிசபெத்து. 6 அவர்கள் இருவரும் கர்த்தர் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும் நியமங்களின்படியும் குற்றமற்றவர்களாக நடந்து, தேவனுக்குமுன்பாக நீதியுள்ளவர்களாக இருந்தார்கள். 7 எலிசபெத்து மலடியாக இருந்தபடியால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் முதிர்வயதானவர்களாகவும் இருந்தார்கள். 8 அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய முறைமைகளின்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில், 9 ஆசாரிய ஊழிய முறைகளின்படி அவன் தேவாலயத்திற்குச் சென்று தூபம் காட்டுகிறதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். 10 தூபம் காட்டுகிற நேரத்திலே மக்களெல்லோரும் கூட்டமாக வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். 11 அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூப பீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான். 12 சகரியா அவனைப் பார்த்து கலங்கி, பயமடைந்தான். 13 கர்த்தருடைய தூதன் அவனைப் பார்த்து: சகரியாவே, பயப்படாதே, உன் விண்ணப்பம் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள், அவனுக்கு யோவான் என்று பெயர் இடுவாயாக. 14 உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பதினாலே அநேகர் சந்தோஷப்படுவார்கள். 15 அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாக இருப்பான், திராட்சைரசமும் மதுபானமும் குடிக்கமாட்டான், அவன் எலிசபெத்தின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்பான். 16 அவன் இஸ்ரவேல் வம்சத்தாரில் அநேகரைப் பாவங்களைவிட்டு, அவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். 17 பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான மக்களை கர்த்தருக்கு ஆயத்தப்படுத்த, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உள்ளவனாக கர்த்தருக்கு முன்னே நடப்பான் என்றான். 18 அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எப்படி அறிவேன்; நான் முதிர்வயதானவனாக இருக்கிறேன், என் மனைவியும் வயதானவளாக இருக்கிறாளே என்றான். 19 தேவதூதன் அவனுக்கு மறுமொழியாக: நான் தேவ சந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்; 20 இதோ, குறித்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசிக்காதபடியால் இவைகள் நிறைவேறும் நாள்வரை நீ பேசமுடியாமல் ஊமையாக இருப்பாய் என்றான். 21 மக்கள் சகரியாவுக்காக நீண்டநேரம் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் இருந்து வெளியே வர தாமதம் செய்ததினால் ஆச்சரியப்பட்டார்கள். 22 அவன் வெளியே வந்தபோது மக்களிடத்தில் பேச முடியாமலிருந்தான்; எனவே தேவாலயத்தில் அவன் ஒரு தரிசனத்தைப் பார்த்தான் என்று அறிந்துகொண்டார்கள். அவன் ஊமையாக இருந்தபடியால் அவர்களுக்கு சைகைகாட்டினான். 23 அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டிற்குப்போனான். 24 அதற்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பந்தரித்து: மக்கள் மத்தியில் எனக்கு உண்டாயிருந்த அவமானத்தை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் இரக்கம் வைத்து, 25 எனக்கு இப்படிச் செய்தார் என்று சொல்லி, ஐந்து மாதங்கள் வீட்டைவிட்டு வெளியே போகாமல் இருந்தாள். இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தல் 26 எலிசபெத்தின் ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில், 27 தாவீதின் வம்சத்தை சேர்ந்த யோசேப்பு என்கிற பெயருள்ள மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிப் பெண்ணிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிப் பெண்ணின் பெயர் மரியாள். 28 அவள் இருந்த வீட்டில் தேவதூதன் தோன்றி: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். 29 அவளோ அவனைப் பார்த்து, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துக்கள் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள். 30 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடமிருந்து கிருபைபெற்றாய். 31 இதோ, நீ கர்ப்பம் தரித்து ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. 32 அவர் பெரியவராக இருப்பார், உன்னதமான தேவனுடைய குமாரன் எனப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். 33 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய இராஜ்யத்திற்கு முடிவு இல்லை என்றான். 34 அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: நான் கன்னிப்பெண்ணாய் இருக்கிறேனே, இது எப்படி நடக்கும்? என்றாள். 35 தேவதூதன் அவளுக்கு மறுமொழியாக; பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார்; உன்னதமான தேவனுடைய பலம் உன்னை மூடும்; எனவே உன் கர்ப்பத்தில் பிறக்கும் இந்தப் பரிசுத்தக் குழந்தை, தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படும். 36 இதோ, உன் இனத்தைச் சேர்ந்த எலிசபெத்தும் தன்னுடைய முதிர்வயதிலே ஒரு குமாரனைக் கர்ப்பம் தரித்திருக்கிறாள்; குழந்தை இல்லாதவள் என்று சொல்லப்பட்ட அவளுக்கு இது ஆறாவது மாதம். 37 தேவனாலே செய்யமுடியாத காரியம் ஒன்றும் இல்லை என்றான். 38 அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு நடக்கட்டும் என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளைவிட்டுப் போய்விட்டான். மரியாள் எலிசபெத்தை சந்தித்தல் 39 அந்த நாளில் மரியாள் எழுந்து, மலைநாடாகிய யூதேயாவில் உள்ள ஒரு பட்டணத்திற்கு சீக்கிரமாகப்போய், 40 சகரியாவின் வீட்டிற்குச் சென்று, எலிசபெத்தை வாழ்த்தினாள். 41 எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துக்களைக் கேட்டபொழுது, அவளுடைய கர்ப்பத்தில் இருந்த குழந்தை துள்ளியது; எலிசபெத்து பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, 42 அதிக சத்தமாக: பெண்களுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. 43 என் ஆண்டவருடைய தாயார் என்னிடம் வர நான் என்ன பாக்கியம் செய்தேன்! 44 இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் கர்ப்பத்திலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது. 45 விசுவாசித்தவளே, நீ பாக்கியவதி, கர்த்தராலே உனக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள். மரியாளின் பாடல் 46 அப்பொழுது மரியாள்: “என் ஆத்துமா கர்த்த்தரை மகிமைப்படுத்துகிறது. 47 என் ஆவி என் இரட்சகராகிய தேவனிடம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 48 தேவன் அடிமையாகிய என்னுடைய தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இனி எல்லா வம்சங்களும் என்னை பாக்கியம் பெற்றவள் என்பார்கள். 49 வல்லமையுடைய தேவன் மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமானது. 50 அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும். 51 அவர் தம்முடைய கரங்களினாலே வல்லமையுள்ள காரியங்களைச் செய்தார்; இருதய சிந்தைகளில் பெருமையுள்ளவர்களைச் சிதறிப்போகப்பண்ணினார். 52 ராஜாக்களை பதவிகளிலிருந்து நீக்கி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். 53 பசியுள்ளவர்களுக்கு நன்மையானதைக் கொடுத்து, செல்வந்தர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் வெறுமையாக அனுப்பிவிட்டார். 54 நம்முடைய முற்பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் வம்சத்திற்கும் எப்பொழுதும் இரக்கம் செய்ய நினைத்து, 55 அவருடைய மக்களாகிய இஸ்ரவேல் தேசத்தினர்களுக்கு உதவி செய்தார்” என்றாள்.56 மரியாள் ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசெபெத்துடன் தங்கியிருந்து, பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப்போனாள்.
யோவான்ஸ்நானனின் பிறப்பு 57 எலிசபெத்திற்குப் பிரசவநேரம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். 58 கர்த்தர் அவள்மேல் எவ்வளவு இரக்கமாக இருந்தார் என்று அவள் அருகில் வசிப்பவர்களும் சொந்தங்களும் கேள்விப்பட்டு, அவளோடு சேர்ந்து சந்தோஷப்பட்டார்கள். 59 எட்டாவது நாளிலே குழந்தைக்கு விருத்தசேதனம்பண்ண அவர்கள் எல்லோரும் கூடிவந்து, குழந்தையின் தகப்பனுடைய பெயராகிய சகரியா என்ற பெயரையே குழந்தைக்கும் வைக்க விரும்பினார்கள். 60 அப்பொழுது எலிசெபெத்து: “அப்படி வேண்டாம், குழந்தைக்கு யோவான் என்று பெயர் வைக்கவேண்டும் என்றாள். 61 அதற்கு அவர்கள்: உன் உறவினர்களில் இந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்று சொல்லி, 62 சகரியாவைப் பார்த்து: குழந்தைக்கு என்ன பெயர் வைக்க விரும்புகிறீர் என்று சைகையினால் கேட்டார்கள். 63 அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி,” இவன் பெயர் யோவான்,” என்று எழுதினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். 64 உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டது, அவன் பேசி, தேவனை ஸ்தோத்திரித்துப் புகழ்ந்தான். 65 அதினால் அவர்களைச் சுற்றி வாழ்ந்த அனைவருக்கும் பயம் உண்டானது. மேலும் யூதேயா மலைநாடு முழுவதும் இந்தச் செய்தி பரவி, இதைக்குறித்து அதிகமாகப் பேசப்பட்டது. 66 இதைக் கேள்விப்பட்டவர்கள் எல்லோரும் தங்களுடைய மனதிலே நடந்தவைகளை நினைத்து, இந்தக் குழந்தை வளர்ந்து எப்படிப்பட்ட காரியங்களைச் செய்யுமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தக் குழந்தையோடு இருந்தது. சகரியாவின் தீர்க்கதரிசனம் 67 அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக: 68 “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. 69 அவர் நம்முடைய முற்பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்; 70 தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: 71 உங்களுடைய சத்துருக்களின் கைகளில் இருந்து நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியம் செய்யவும் கட்டளையிடுவேன் என்று, 72 அவர் நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாமுக்கு கொடுத்த ஆணையை நிறைவேற்றுவதற்கும்; 73 ஆதிமுதல் கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தேவன் சொன்னபடியே, 74 தமது மக்களைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களிடம் இருந்தும், நம்மைப் பகைக்கிற எல்லோருடைய கைகளில் இருந்தும், நம்மை இரட்சிப்பதற்காக, 75 தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு ஒரு வல்லமையுள்ள இரட்சகரை அனுப்பினார். 76 என் மகனே, நீ உன்னதமான தேவனுடைய தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும், 77 நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய மக்களுக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னே நடந்துபோவாய். 78 இருளிலும், மரண பயத்திலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கவும், 79 நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அந்த இரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய சூரியன் நம்மிடம் வந்திருக்கிறது” என்றான்.80 அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலனடைந்து, இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படையாக உபதேசிக்கும் நாள் வரும்வரைக்கும் வனாந்திரங்களிலே வாழ்ந்து வந்தான்.
லூக்கா 2 ->
56 மரியாள் ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசெபெத்துடன் தங்கியிருந்து, பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப்போனாள்.
80 அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலனடைந்து, இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படையாக உபதேசிக்கும் நாள் வரும்வரைக்கும் வனாந்திரங்களிலே வாழ்ந்து வந்தான்.
லூக்கா 2 ->