Link to home pageLanguagesLink to all Bible versions on this site
அத்தியாயம் 3
சமாதானபலி
1 “ஒருவன் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் பசுவானாலும் சரி, பழுது இல்லாமலிருப்பதை யெகோவாவுடைய சந்நிதியில் செலுத்தக்கடவன். 2 அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். 3 பின்பு சமாதான பலியிலே குடல்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும், 4 இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்துவானாக. 5 அதை ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின் நெருப்பிலுள்ள கட்டைகளின்மேல் வைக்கப்பட்டிருக்கும் சர்வாங்க தகனபலியின்மேல் போட்டு எரிக்கக்கடவர்கள்; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி. 6 “அவன் யெகோவாவுக்குச் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரி, பழுது இல்லாமலிருப்பதைச் செலுத்துவானாக. 7 அவன் ஆட்டுக்குட்டியைப் பலியாகச் செலுத்தவேண்டுமானால், அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, 8 தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். 9 பின்பு அவன் சமாதானபலியிலே அதின் கொழுப்பையும், நடு எலும்பிலிருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும் அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும், 10 இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன். 11 அதை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்குச் செலுத்தும் தகன ஆகாரம். 12 “அவன் செலுத்துவது வெள்ளாடாக இருக்குமானால், அவன் அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, 13 அதின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். 14 அவன் அதிலே குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள் மேலிருக்கிற கொழுப்பு முழுவதையும், 15 இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன். 16 ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளை எரிக்கக்கடவன்; இது நறுமண வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் யெகோவாவுடையது. 17 கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் சாப்பிடக்கூடாது; இது உங்களுடைய குடியிருப்புகள் எங்கும் உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான கட்டளையாக இருக்கும் என்று சொல் என்றார்.

<- லேவியராகமம் 2லேவியராகமம் 4 ->