Link to home pageLanguagesLink to all Bible versions on this site
அத்தியாயம் 2
உணவுபலி
1 “ஒருவன் உணவுபலியாகிய காணிக்கையைக் யெகோவாவுக்குச் செலுத்தவேண்டுமானால், அவனுடைய காணிக்கை மெல்லிய மாவாக இருப்பதாக; அவன் அதின்மேல் எண்ணெய் ஊற்றி, அதின்மேல் தூபவர்க்கம் போட்டு, 2 அதை ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் பலிபீடத்தின்மேல் நன்றியின் அடையாளமாக எரிக்கக்கடவன்; அது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி. 3 அந்த உணவுபலியில் மீதியாக இருப்பது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; யெகோவாவுக்குச் செலுத்தும் தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது. 4 “நீ படைப்பது அடுப்பில் சமைக்கப்பட்ட உணவுபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்பட்ட புளிப்பில்லாத அதிரசங்களாகவோ, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லாத அடைகளாகவோ இருப்பதாக. 5 நீ படைப்பது அடுப்பில் தட்டையான பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவுபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினால் செய்யப்பட்டதாக இருப்பதாக. 6 அதைத் துண்டுதுண்டாகப் பிட்டு, அதின்மேல் எண்ணெய் ஊற்றுவாயாக; இது ஒரு உணவுபலி. 7 நீ படைப்பது அடுப்பில் பொரிக்கும் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவு பலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்படுவதாக. 8 இப்படிச் செய்யப்பட்ட உணவுபலியைக் யெகோவாவுக்குச் செலுத்துவாயாக; அது ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படும்போது, அவன் அதைப் பலிபீடத்தின் அருகில் கொண்டுவந்து, 9 அந்த சமைக்கப்பட்ட உணவுபலியிலிருந்து ஆசாரியன் நன்றியின் அடையாளமாக ஒரு பங்கை எடுத்துப் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி. 10 இந்த உணவுபலியில் மீதியானது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; யெகோவாவுக்குச் செலுத்தும் தகனங்களில் இது மகா பரிசுத்தமானது. 11 “நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தும் எந்த உணவுபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவு உள்ளவைகளையும் தேன் உள்ளவைகளையும் யெகோவாவுக்குத் தகனபலியாக எரிக்கவேண்டாம். 12 முதற்கனிகளைக் காணிக்கையாகக் கொண்டுவந்து, அவைகளைக் யெகோவாவுக்குச் செலுத்தலாம்; ஆனாலும், பலிபீடத்தின்மேல் அவைகளை நறுமண வாசனையாக எரிக்கக்கூடாது. 13 நீ படைக்கிற எந்த உணவுபலியிலும் உப்பு சேர்க்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை[a] உன் உணவுபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக. 14 “முதற்பலன்களை உணவுபலியாக நீ யெகோவாவுக்குச் செலுத்தவந்தால், புதிய பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் உணவுபலியாகக் கொண்டுவரக்கடவாய். 15 அதின்மேல் எண்ணெய் ஊற்றி அதின்மேல் தூபவர்க்கத்தைப் போடுவாயாக; இது ஒரு உணவுபலி. 16 பின்பு ஆசாரியன், உதிர்த்த தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து, நன்றியின் அடையாளமான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றுடன் எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்கு செலுத்தும் தகனபலி.

<- லேவியராகமம் 1லேவியராகமம் 3 ->