Link to home pageLanguagesLink to all Bible versions on this site
அத்தியாயம் 15
விந்து கழிதலைக் குறித்த சட்டமும், இரத்தப்போக்கு உள்ள பெண்களுக்குறிய விதிமுறைகளும்
1 பின்னும் யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 2 “நீங்கள் இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுக்கு விந்து கழிதல் உண்டானால், அதினாலே அவன் தீட்டானவன். 3 அவனுடைய மாம்சத்திலுள்ள விந்து ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் விந்து அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும். 4 விந்து கழிதல் உள்ளவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டாகும்; அவன் எதின்மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும். 5 அவனுடைய படுக்கையைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளிக்கவேண்டும்; மாலைவரைத் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக. 6 விந்து கழிதல் உள்ளவன் உட்கார்ந்த இடத்தில் உட்காருகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக. 7 விந்து கழிதல் உள்ளவனின் உடலைத் தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக. 8 விந்து கழிதல் உள்ளவன் சுத்தமாக இருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக. 9 விந்து கழிதல் உள்ளவன் ஏறும் எந்தச் சேணமும் தீட்டாயிருக்கும். 10 அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக. 11 விந்து கழிதல் உள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக. 12 விந்து கழிதல் உள்ளவன் தொட்ட மண்பானை உடைக்கப்படவும், மரச்சாமான் அனைத்தும் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும். 13 “விந்து கழிதல் உள்ளவன் தன் விந்து கழிதல் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாட்கள் எண்ணிக்கொண்டிருந்து, தன் உடைகளைத் துவைத்து, தன் உடலை ஊற்றுநீரில் கழுவுவானாக; அப்பொழுது சுத்தமாக இருப்பான். 14 எட்டாம்நாளிலே, அவன் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன். 15 ஆசாரியன் அவைகளில் ஒன்றை பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக, அவனுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் அவனுடைய விந்து கழிதலின் காரணமாக பாவநிவிர்த்தி செய்யவேண்டும். 16 “ஒருவனிலிருந்து விந்து கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் குளிக்கவேண்டும்; மாலைவரை அவன் தீட்டுப்பட்டிருப்பானாக. 17 கழிந்த விந்து பட்ட உடையும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, மாலைவரைத் தீட்டாயிருப்பதாக. 18 விந்து கழிந்தவனோடே பெண் படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பார்களாக. 19 “மாதவிடாய் உள்ள பெண் தன் உடலிலுள்ள இரத்தப்போக்கினிமித்தமாக ஏழுநாட்கள் தன் விலக்கத்தில் இருப்பாளாக; அவளைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக. 20 அவள் விலக்கத்தில் இருக்கும்போது, எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும். 21 அவளுடைய படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக. 22 அவள் உட்கார்ந்த இருக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக. 23 அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த இருக்கையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக. 24 ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவளுடைய தீட்டு, அவன்மேல் பட்டிருந்தால், அவன் ஏழுநாட்கள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும். 25 “ஒரு பெண் விலகியிருக்க வேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய இரத்தம் அநேகநாட்கள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்திற்கும் அதிகமாக அது இருக்கும் நாட்களெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக. 26 அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த இருக்கையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும். 27 அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக. 28 அவள் தன் இரத்தப்போக்கு நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாட்கள் எண்ணிக்கொள்வாளாக; அதின்பின்பு சுத்தமாக இருப்பாள். 29 எட்டாம்நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள். 30 ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக, அவளுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் அவளுடைய இரத்தப்போக்கினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன். 31 “இஸ்ரவேல் மக்கள் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் மரணமடையாமலிருக்க, இப்படி நீங்கள் அவர்களுடைய தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைப்பீர்களாக”. 32 விந்து கழிதல் உள்ளவனுக்கும், விந்து கழிந்ததினாலே தீட்டானவனுக்கும், 33 இரத்தப்போக்கு பலவீனமுள்ளவளுக்கும், விந்து கழிதல் உள்ள பெண்களுக்கும், ஆண்களுக்கும், தீட்டாயிருக்கிறவளோடே படுத்துக்கொண்டவனுக்கும் உரிய விதிமுறைகள் இதுவே என்றார்.

<- லேவியராகமம் 14லேவியராகமம் 16 ->