Link to home pageLanguagesLink to all Bible versions on this site
அத்தியாயம் 4
சீயோனின் சீரழிவு
1 ஐயோ, தங்கம் மங்கி, சுத்தத் தங்கம் மாறி,
பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டப்பட்டதே.
2 ஐயோ, தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற மகன்களாகிய சீயோன்,
குயவனுடைய கைவேலையான மண்பாத்திரங்களைப்போல நினைக்கப்படுகிறார்களே.
3 திமிங்கிலங்கள் முதற்கொண்டு மார்பகங்களை நீட்டி,
தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்;
என் மகளாகிய மக்களோ வனாந்தரத்திலுள்ள நெருப்புக்கோழியைப்போல் கடின மனமுள்ளவளாக இருக்கிறாளே.
4 குழந்தைகளின் நாக்கு தாகத்தால் மேல்வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது;
பிள்ளைகள் உணவுகேட்கிறார்கள், அவர்களுக்கு கொடுப்பவர்கள் இல்லை.
5 சுவையான உணவுகளைச் சாப்பிட்டவர்கள் வீதிகளில் பயனற்றுக்கிடக்கிறார்கள்;
இரத்தாம்பரம் உடுத்தி வளர்ந்தவர்கள் குப்பைமேடுகளை அணைத்துக்கொள்கிறார்கள்.
6 உதவி செய்பவர்கள் இல்லாமல், ஒரு நிமிடத்திலே அழிக்கப்பட்ட
சோதோமின் பாவத்திற்கு வந்த தண்டனையைவிட
என் மகளாகிய மக்களின் அக்கிரமத்திற்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது.
7 அவளுடைய தலைவர்கள் உறைந்த மழையைவிட சுத்தமும்,
பாலைவிட வெண்மையும், பவளத்தைவிட சிவப்பும்,
இந்திரநீலத்தைவிட பலமுள்ள தோற்றமுமாக இருந்தார்கள்.
8 இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியைக்காட்டிலும் கறுத்துப்போனது;
வீதிகளில் அவர்களை அடையாளம் காணமுடியாது;
அவர்களுடைய தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு,
காய்ந்த மரத்திற்கு ஒப்பானது.
9 பசியினால் கொல்லப்பட்டவர்களைவிட
பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள் பாக்கியவான்களாக இருக்கிறார்கள்;
அவர்கள், வயலில் விளைச்சல் இல்லாததால் பசியினால் கரைந்து போகிறார்கள்.
10 இரக்கமுள்ள பெண்களின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன,
என் மகளாகிய மக்களின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின.
11 யெகோவா தமது கோபத்தை நிறைவேற்றி, தமது கடுங்கோபத்தை ஊற்றி,
சீயோனில் அக்கினியைக் கொளுத்தினார்;
அது அதின் அஸ்திபாரங்களை உடைத்துப்போட்டது.
12 எதிரியும் பகைவனும் எருசலேமின் வாசல்களுக்குள் நுழைவான் என்கிறதைப்
பூமியின் ராஜாக்களும் உலகத்தின் சகல குடிமக்களும் நம்பாமல் இருந்தார்கள்.
13 அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும்,
அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இப்படி வந்தது.
14 குருடர்களைப்போல வீதிகளில் அலைந்து,
ஒருவரும் அவர்களுடைய உடைகளைத் தொடமுடியாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள்.
15 தீட்டுப்பட்டவர்களே விலகுங்கள், தொடாமல் விலகுங்கள், விலகுங்கள்,
என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள்;
உண்மையாகவே பறந்தோடி அலைந்து போனார்கள்;
இனி தங்கியிருக்கமாட்டார்கள் என்று அந்நிய மக்களுக்குள்ளே சொல்லப்பட்டது.
16 யெகோவாவுடைய கோபம் அவர்களைச் சிதறடித்தது,
அவர்களை இனி அவர் பார்க்கமாட்டார்;
ஆசாரியர்களுடைய முகத்தைப் பார்க்காமலும் முதியோரை மதிக்காமலும்போனார்கள்.
17 இன்னும் எங்களுக்கு உதவி வருமென்று நாங்கள் வீணாக எதிர்பார்த்திருந்ததினாலே எங்களுடைய கண்கள் பூத்துப்போயின;
காப்பாற்றமுடியாத மக்களுக்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
18 நாங்கள் எங்கள் வீதிகளில் நடந்து செல்லாதபடி எங்கள் பாதசுவடுகளை வேட்டையாடினார்கள்;
எங்கள் முடிவு நெருங்கியது; எங்கள் நாட்கள் நிறைவேறிவிட்டது;
எங்கள் முடிவு வந்துவிட்டது.
19 எங்களைப் பின்தொடர்ந்தவர்கள் ஆகாயத்துக் கழுகுகளைவிட வேகமாயிருந்தார்கள்;
மலைகள்மேல் எங்களைப் பின்தொடர்ந்தார்கள்;
வனாந்திரத்தில் எங்களுக்காகப் பதுங்கியிருந்தார்கள்.
20 யெகோவாவால் அபிஷேகம்செய்யப்பட்டவனும், எங்கள் உயிர்மூச்சுமாக இருந்தவனும், அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்;
அவனுடைய நிழலிலே தேசங்களுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே.
21 ஊத்ஸ் தேசத்தைச் சேர்ந்த மகளாகிய ஏதோமே, சந்தோஷப்பட்டு மகிழ்ந்திரு;
பாத்திரம் உன்னிடத்திற்கும் வரும், அப்பொழுது நீ வெறித்து, ஆடையில்லாமல் கிடப்பாய்.
22 மகளாகிய சீயோனே, உன் அக்கிரமத்திற்கு வரும் தண்டனை முடிந்தது;
அவர் இனி உன்னை சிறைப்பட்டுப்போக விடமாட்டார்;
மகளாகிய ஏதோமே, உன் அக்கிரமத்தை அவர் விசாரிப்பார்;
உன் பாவங்களை வெளிப்படுத்துவார்.

<- புலம்பல்கள் 3புலம்பல்கள் 5 ->