Link to home pageLanguagesLink to all Bible versions on this site

புலம்பல்
ஆசிரியர்
இந்த புத்தகத்தில் ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படவில்லை. யூத பாரம்பரியமும் கிறிஸ்துவ பாரம்பரியமும் எரேமியா தான் இதன் ஆசிரியர் என்று ஒப்புக்கொள்ளுகிறார்கள். ஆசிரியர் எருசலேமுக்கு விரோதமான படையெடுப்பையும் அதின் அழிவையும் தன் கண்களால் கண்டு துன்பங்களை அனுபவித்தவன். யூதஜனங்கள் தேவனுக்கு விரோதமாக கிரியை செய்து, உடன்படிக்கையை மீறினார்கள். பாபிலோனியர்களை, யூதாவை தண்டிக்க தேவன் உபயோகித்துக் கொண்டார். பாடுகள் மத்தியிலும் மூன்றாம் அதிகாரம் நம்பிக்கையை வாக்களிக்கிறது. எரேமியா தேவனுடைய நன்மைகளை நினைக்கிறான். இந்த புத்தகத்தை வாசிக்கிறவர்களுக்கு தேவனுடைய நன்மைகளையும் அவருடைய மாறாத அன்பையும் சொல்லி ஆறுதல்படுத்துகிறான்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கிமு 586 க்கும் 584 கிமு க்கும். இடையில் எழுதப்பட்டது.
பாபிலோனியர்கள் எருசலேமை பட்டணத்தை சூழ்ந்து படையெடுத்து தாக்கி அழித்ததை தன் கண்களால் கண்ட காட்சியை, எரேமியா எழுதுகிறான்.
யாருக்காக எழுதப்பட்டது
சிறையிருப்பில் மீந்தவர்களுக்கும் இஸ்ரவேல் தேசத்திற்கு திரும்பிவந்தவர்களுக்கும் வேதத்தை வாசிக்கிற எல்லோருக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
தனிப்பட்ட நபர் பாவம் செய்தாலும் தேசம் செய்தாலும் அதின் விளைவு உண்டு. தேவன், ஜனங்களையும் சூழ்நிலைகளையும் தம்மை பின்பற்றினவர்களை தம்மிடம் கொண்டுவர உபயோகப்படுத்துகிறார். நம்முடைய நம்பிக்கை தேவனில் இருக்கிறது. தேவன் தமக்காக மீதியானவர்களை யூதர்களின் சிறையிருப்பில் பாதுகாத்து வந்தார். அதேபோல் அவருடைய குமாரினில் ஒரு இரட்சகரைக் கொடுத்திருக்கிறார். பாவம் நித்திய மரணத்தை கொண்டுவருகிறது ஆனால் தேவன் தன் இரட்சிப்பின் திட்டத்தின் மூலமாக நித்திய ஜீவனைக் கொடுக்கிறார். பாவமும் முரட்டாட்டுமும் தேவனிடத்திலிருந்து கோபாக்கினியை கொண்டுவருகிறது என்று இந்த புத்தகம் தெளிவாக காட்டுகிறது. 1:8-9; 4:13; 5:16.
மையக் கருத்து
புலம்பல்
பொருளடக்கம்
1 எரேமியா எருசலேமுக்காக வேதனை அனுபவிக்கிறார் — 1:1-22
2 பாவம் தேவனுடைய கோபத்தை கொண்டுவருகிறது. — 2:1-22
3 தேவன் தம்முடைய ஜனத்தை எப்போதும் கைவிடுவதில்லை. — 3:1-66
4 எருசலேம் தன்னுடைய மகிமையை இழந்துவிட்டது. — 4:1-22
5 எரேமியா தன் ஜனங்களுக்காக விண்ணப்பம் செய்கிறார். — 5:1-22

அத்தியாயம் 1
எருசலேமின் துன்பம்
1 2 ஐயோ, மக்கள் மிகுந்த நகரம் *எருசலேம் தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே!
விதவைக்கு ஒப்பானாளே! தேசங்களில் பெரியவளும்,
அந்த தேசங்களில் இளவரசியுமாயிருந்தவள் வரிகட்டுகிறவளானாளே!
2 இரவுநேரத்திலே அழுதுகொண்டிருக்கிறாள்;
அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது;
அவளுக்குப் பிரியமானவர்களில் அவளைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை;
அவளுடைய நண்பர்கள் அனைவரும் அவளுக்குத் துரோகிகளும் விரோதிகளுமானார்கள்.
3 யூதா மக்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமை வேலைசெய்யவும்
சிறைப்பட்டுப்போனார்கள். அவள் அந்நிய மக்களுக்குள்ளே தங்குகிறாள்,
இளைப்பாறுதல் அடையமாட்டாள்;
அவளைத் துன்பப்படுத்துகிற அனைவரும்
அவளை அவளுடைய இக்கட்டான நேரங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள்.
4 பண்டிகைக்கு வருபவர்கள் இல்லாததினால்,
சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது;
அவளுடைய வாசல்கள் எல்லாம் பயனற்றுக்கிடக்கிறது;
அவளுடைய ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்;
அவளுடைய இளம்பெண்கள் சஞ்சலப்படுகிறார்கள்;
அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.
5 அவளுடைய விரோதிகள் அவளுக்குத் தலைவர்களானார்கள்,
அவளுடைய பகைவர்கள் செழித்திருக்கிறார்கள்;
அவளுடைய மிகுதியான பாவங்களுக்காக யெகோவா அவளைச் சஞ்சலப்படுத்தினார்;
அவளுடைய பிள்ளைகள் எதிரிக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள்.
6 சீயோனாகிய மகளுடைய அழகெல்லாம் அவளை விட்டுப்போனது;
அவளுடைய தலைவர்கள் மேய்ச்சலைக் காணாத மான்களுக்கு ஒப்பாகி,
பின்தொடருகிறவனுக்கு முன்பாக பலமில்லாமல் நடந்துபோனார்கள்.
7 தனக்குச் சிறுமையும் தவிப்பும் ஏற்பட்ட நாட்களிலே
எருசலேம் ஆரம்பநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்;
அவளுக்கு உதவிசெய்பவர்கள் இல்லாமல் அவளுடைய மக்கள் விரோதிகளின் கையிலே விழும்போது,
பகைவர்கள் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வு நாட்களைக் குறித்து ஏளனம் செய்தார்கள்.
8 எருசலேம் மிகுதியாகப் பாவம்செய்தாள்;
ஆதலால் தீட்டான பெண்ணைப்போலானாள்;
அவளைக் கனப்படுத்தியவர்கள் எல்லோரும் அவளை அசட்டை செய்கிறார்கள்;
அவளுடைய நிர்வாணத்தைக் கண்டார்கள்;
அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னிட்டுத் திரும்பினாள்.
9 அவளுடைய தீட்டு அவளுடைய ஆடைகளின் ஓரங்களில் இருந்தது;
தனக்கு வரப்போகிற முடிவை நினைக்காமல் இருந்தாள்;
ஆகையால் அதிசயமாகத் தாழ்த்தப்பட்டுப்போனாள்;
தேற்றுபவர்கள் இல்லை;
யெகோவாவே, என் சிறுமையைப் பாரும்;
பகைவன் பெருமைபாராட்டினானே.
10 அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் விரோதி தன் கையை நீட்டினான்;
உம்முடைய சபையிலே வரக்கூடாதென்று தேவரீர் விலக்கிய அன்னியர்கள்
உமது பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதைக் கண்டாள்.
11 அவளுடைய மக்களெல்லோரும் ஆகாரத்தைத்தேடித் தவிக்கிறார்கள்;
தங்களுடைய உயிரைக் காப்பாற்றத்
தங்களுக்குப் பிரியமானவைகளை ஆகாரத்துக்கென்று கொடுத்துவிட்டார்கள்;
யெகோவாவே, நோக்கிப்பாரும்;
நினைக்கப்படாதவளானேன்.
12 வழியில் நடந்துபோகிற அனைத்து மக்களே,
இதைக்குறித்து உங்களுக்குக் கவலையில்லையா?
யெகோவா தாம் மிகவும் கோபப்பட்ட நாளிலே என்னை வருத்தப்படுத்தியதால்
எனக்கு ஏற்பட்ட என் துக்கத்திற்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.
13 உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார்,
அது அவைகளில் பற்றியெரிகிறது;
என் கால்களுக்கு வலையை வீசினார்;
என்னைப் பின்னிட்டு விழச்செய்தார்; என்னைப் பாழாக்கினார்;
தினமும் நான் பெலவீனப்பட்டுப்போகிறேன்.
14 என் மீறுதல்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது;
அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது;
என் பெலனை இழக்கச்செய்தார்;
நான் எழுந்திருக்க முடியாதபடி ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
15 என்னிடத்திலுள்ள பலசாலிகளாகிய எனக்குரிய அனைவரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்;
என் வாலிபர்களை நொறுக்குவதற்காக எனக்கு விரோதமாக ஒரு கூட்டத்தை வரவழைத்தார்;
திராட்சைப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல,
ஆண்டவர், மகளாகிய யூதா என்னும் இளம்பெண்ணை மிதித்தார்.
16 இவைகளுக்காக நான் அழுகிறேன்; என் கண்,
என் கண்ணே கண்ணீரை சிந்துகிறது;
என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர்கள் என்னைவிட்டு விலகினார்கள்;
பகைவன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள்.
17 சீயோன் தன் கைகளை உதவிக்கா விரிக்கிறாள்;
அவளைத் தேற்றுபவர்கள் ஒருவருமில்லை;
யெகோவா யாக்கோபைச் சுற்றிலும் உள்ளவர்களை அவனுக்கு விரோதிகளாகக் கட்டளையிட்டார்;
அவர்களுக்குள்ளே எருசலேம் தீட்டான பெண்ணுக்கு ஒப்பானாள்.
18 யெகோவா நீதிபரர்;
அவருடைய கட்டளைகளுக்கு விரோதமாக நான் எழும்பினேன்;
மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்;
என்னுடைய இளம்பெண்களும், வாலிபர்களும் சிறைப்பட்டுப்போனார்கள்.
19 என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன்,
அவர்களோ எனக்கு துரோகம் செய்தார்கள்;
என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத்
தங்களுக்கு ஆகாரம் தேடும்போது நகரத்தில் மூச்சு அடங்கி இறந்துபோனார்கள்.
20 யெகோவாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்;
என் குடல் கொதிக்கிறது; நான் மிகவும் துரோகம் செய்ததினால் என் இருதயம் வேதனைப்படுகிறது;
வெளியிலே பட்டயம் என்னைப் பிள்ளையற்றவளாக்கியது, வீட்டுக்குள்ளே மரணம் வந்திருக்கிறது.
21 நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை;
என் பகைவர்கள் எல்லோரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு,
தேவரீர் அதைச் செய்ததினால் சந்தோஷமாயிருக்கிறார்கள்;
நீர் சொன்ன நாளை வரச்செய்வீர். அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள்.
22 அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்திற்கு முன்பாக வரட்டும்.
என்னுடைய சகல பாவங்களுக்காக நீர் எனக்குச் செய்ததுபோல அவர்களுக்கும் செய்யும்;
என் பெருமூச்சுகள் மிகுதியாயின,
என் இருதயம் பலவீனமாயிருக்கிறது.

புலம்பல்கள் 2 ->