Link to home pageLanguagesLink to all Bible versions on this site
அத்தியாயம் 61
யெகோவாவுடைய அநுக்கிரக வருடம்
1 கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கக் யெகோவா என்னை அபிஷேகம்செய்தார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டப்பட்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், 2 யெகோவாவுடைய அநுக்கிரக வருடத்தையும், நம்முடைய தேவன் நீதியைநிலைப்படுத்தும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல்செய்யவும், 3 சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாக அலங்காரத்தையும், துயரத்திற்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும் அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் யெகோவா தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் மரங்கள் எனப்படுவார்கள். 4 அவர்கள் நீண்டநாட்களாக பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, முற்காலத்தில் அழிக்கப்பட்டவைகளை எடுப்பித்து, தலைமுறை தலைமுறையாக இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள். 5 அந்நியமக்கள் நின்றுகொண்டு உங்கள் மந்தைகளை மேய்த்து, அன்னியமக்கள் உங்கள் பண்ணையாட்களும், உங்கள் திராட்சைத்தோட்டக்காரருமாக இருப்பார்கள். 6 நீங்களோ யெகோவாவின் ஆசாரியரென்று சொல்லப்படுவீர்கள்; உங்களை நமது தேவனுடைய ஊழியக்காரர் என்பார்கள்; நீங்கள் தேசங்களின் செல்வத்தை அநுபவித்து, அவர்கள் மகிமையைக் கொண்டு மேன்மைபாராட்டுவீர்கள். 7 உங்களுடைய வெட்கத்திற்குப் பதிலாக இரண்டு மடங்கு பலன் வரும்; அவமானத்திற்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான பங்கை அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும். 8 யெகோவாவாகிய நான் நியாயத்தை விரும்பி, அநியாயத்தினாலும், கொள்ளைப்பொருளினால் செலுத்தப்பட்ட தகனபலியை வெறுக்கிறேன்; நான் அவர்கள் செயலை உண்மையாக்கி, அவர்களுடன் நிரந்தர உடன்படிக்கை செய்வேன். 9 அவர்களுடைய சந்ததியானது தேசங்களின் நடுவிலும், அவர்கள் பிள்ளைகள் மக்களின் நடுவிலும் அறியப்பட்டிருக்கும்; அவர்களைப் பார்க்கிற அனைவரும் அவர்கள் யெகோவாவால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததியென்று அறிந்துகொள்வார்கள். 10 யெகோவாவுக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணமகன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணமகள் நகைகளினால் தன்னைச் அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் பாதுகாப்பின் ஆடைகளை எனக்குப்போட்டு, நீதியின் சால்வையை எனக்கு அணிவித்தார். 11 பூமி தன் தாவரங்களை முளைக்கச்செய்வது போலவும், தோட்டம் தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைக்கச்செய்வது போலவும், யெகோவாவாகிய ஆண்டவர் எல்லா தேசங்களுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கச்செய்வார்.

<- ஏசாயா 60ஏசாயா 62 ->