Link to home pageLanguagesLink to all Bible versions on this site
அத்தியாயம் 7
1 நான் என் மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போதும், நான் இஸ்ரவேலை குணமாக்க விரும்பும்போதும், எப்பிராயீமின் அக்கிரமமும் சமாரியாவின் பொல்லாப்புகளும் வெளிப்படுத்தப்படும்; அவர்கள் வஞ்சனை செய்கிறார்கள்; திருடன் உள்ளே வருகிறான்; வெளியே கொள்ளைக்காரர்களின் கூட்டத்தார் கொள்ளையிடுகிறார்கள். 2 அவர்கள் பொல்லாப்பையெல்லாம் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்று அவர்கள் தங்கள் இருதயத்தில் சிந்திக்கிறதில்லை; இப்போதும் அவர்களுடைய செயல்கள் அவர்களைச் சூழ்ந்துகொண்டது; அவைகள் என் முகத்திற்கு முன்பாக இருக்கிறது. 3 ராஜாவைத் தங்கள் பொல்லாப்பினாலும், அதிபதிகளைத் தங்கள் பொய்களினாலும் சந்தோஷப்படுத்துகிறார்கள். 4 அவர்கள் எல்லோரும் விபசாரக்கள்ளர்; அப்பம் சுடுகிறவன் எரிக்கும் அடுப்பைப்போல் இருக்கிறார்கள்; அவன் மாவைப் பிசைந்ததுமுதல் அது புளித்துப்போகும்வரை, நெருப்பை மூட்டாமல் ஓய்ந்திருக்கிறான். 5 நம்முடைய ராஜாவின் நாளென்று சொல்லி, அதிபதிகள் திராட்சைரச தோல்பைகளால் அவனுக்கு வியாதியுண்டாக்குகிறார்கள்; பரிகாசம் செய்கிறவர்களுடன்கூட அவன் தன் கையை நீட்டுகிறான். 6 அவர்கள் பதிவிருக்கும்போது, தங்கள் இருதயத்தை அடுப்பைப்போல் ஆயத்தப்படுத்துகிறார்கள்; அவர்களில் அடுப்புமூட்டுகிறவன் இரவுமுழுவதும் தூங்கினாலும், காலையிலோவென்றால் அது ஜூவாலிக்கிற அக்கினியாக எரியும். 7 அவர்கள் எல்லோரும் அடுப்பைப்போல சூடாகி, தங்கள் நியாயாதிபதிகளை அழித்தார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லோரும் விழுந்தார்கள்; அவர்களில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறவன் ஒருவனும் இல்லை. 8 எப்பிராயீம் அந்நியமக்களோடே கலந்திருக்கிறான்; எப்பிராயீம் திருப்பிப்போடாத அப்பம். 9 அந்நியர்கள் அவனுடைய பலத்தைத் தின்கிறார்கள்; அவனோ அதை அறியான்; நரைமுடியும் அவனில் தெளித்திருக்கிறது, அவனோ அதை அறியாமல் இருக்கிறான். 10 இஸ்ரவேலின் பெருமை அவர்கள் முகத்திற்கு முன்பாகச் சாட்சியிட்டாலும், அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பாமலும், இவை எல்லாவற்றிலும் அவரைத் தேடாமலும் இருக்கிறார்கள். 11 எப்பிராயீம் பேதையான புறாவைப்போல் இருக்கிறான், அவனுக்குப் புத்தியில்லை; எகிப்தியனைக் கூப்பிடுகிறார்கள்; அசீரியனிடத்திற்கும் போகிறார்கள். 12 அவர்கள் போகும்போது, என் வலையை அவர்கள்மேல் வீசுவேன்; அவர்களை ஆகாயத்துப் பறவைகளைப்போல கீழே விழச்செய்வேன்; அவர்களுடைய சபையில் கேள்விப்பட்டபடியே அவர்களைத் தண்டிப்பேன். 13 அவர்கள் என்னைவிட்டு அலைந்து திரிகிறதினால் அவர்களுக்கு ஐயோ, அவர்களுக்குக் அழிவுவரும்; எனக்கு விரோதமாக துரோகம்செய்தார்கள்; நான் அவர்களை மீட்டிருந்தும், அவர்கள் எனக்கு விரோதமாகப் பொய்பேசுகிறார்கள். 14 அவர்கள் தங்கள் படுக்கைகளில் அலறுகிறபோது, தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சைரசத்துக்காகவும் கூடுகிறார்கள்; என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள். 15 நான் அவர்களைத் தண்டித்தேன்; அவர்களுடைய புயங்கள் திரும்பப் பலப்படவும்செய்தேன்; ஆனாலும் எனக்கு விரோதமாகப் பொல்லாப்பு நினைக்கிறார்கள். 16 திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமான தேவனிடத்திற்கு அல்ல; மோசம்போக்குகிற வில்லைப்போல் இருக்கிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தங்கள் நாவினுடைய கோபத்தினிமித்தம் பட்டயத்தால் விழுவார்கள்; இதுவே எகிப்து தேசத்தினிமித்தம் அவர்களுக்கு வரும் அவமானம்.

<- ஓசியா 6ஓசியா 8 ->