Link to home pageLanguagesLink to all Bible versions on this site

ஆபகூக்
ஆசிரியர்
அதிகாரம் 1:1 ல் ஆபகூக் தான் ஆசிரியர் என்று அடையாளம் காட்டுகிறது. அவனுடைய பெயரைத் தவிர வேறே எந்தக் காரியமும் அவனைக்குறித்து சொல்லப்படவில்லை. ஆபகூக் என்னும் தீர்க்கதரிசி என்று அழைக்கபடுவதால், இஸ்ரவேலர்கள் மத்தியில் நன்றாக அறியப்பட்டவன் என்று தெரிகிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கி. மு. 612 க்கும் 605 க்கும். இடையில் எழுதப்பட்டது.
தென்தேசமான யூதா ராஜ்ஜியம் சிறைப்படுமுன் எழுதப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது
தென்தேசமான யூதா ராஜ்ஜிய மக்களுக்கும், உலகத்திலுள்ள எல்லா தேவமக்களுக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
சத்துருக்கள் வசம் ஏன் தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்ட ஜனம் பாடுப்பட வேண்டுமென்று ஆபகூக் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தான். தேவன் அந்த கேள்விக்கு பதில் கொடுத்தார், ஆபகூக்கின் விசுவாசம் பலப்படுத்தப்பட்டது. யெகோவா தான் தம்முடைய மக்களை பாதுகாக்கிறவர், அவரை விசுவாசிக்கிறவர்கள் பிழைப்பார்கள், யெகோவா வல்லமையுள்ள யுத்தவீரர், அநியாயம் செய்கிற பாபிலோனியர்களை ஒரு நாளில் நியாயம் தீர்ப்பார் என்று பறைசாற்றுவதற்காக இந்த புத்தகம் எழுதப்பட்டது. பெருமையுள்ளவர்கள் தாழ்த்தபடுவார்கள், விசுவாசத்தினால் நீதிமான்கள் பிழைப்பார்கள் என்று இந்த புத்தகம் சித்தரிக்கிறது. 2:4.
மையக் கருத்து
சர்வ வல்லமையுள்ள தேவனை விசுவாசிக்கவேண்டும்.
பொருளடக்கம்
1. ஆபகூக் குறைகூருகிறான் — 1:1-2:20
2. ஆபகூக்கின் ஜெபம். — 3:1-19

அத்தியாயம் 1
1 ஆபகூக் என்னும் தீர்க்கதரிசி தரிசனமாகப் பெற்றுக்கொண்ட செய்தி.
தீர்க்கதரிசியின் கேள்வி
2 யெகோவாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேட்காமலிருக்கிறீரே! கொடுமையின் காரணமாக நான் எதுவரைக்கும் உம்மை நோக்கி உதவிக்காக் கூப்பிடுவேன், நீர் காப்பாற்றாமல் இருக்கிறீரே! 3 நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கச்செய்கிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு முன்னே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு. 4 ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை சூழ்ந்துகொள்ளுகிறான்; ஆகவே நியாயம் புரட்டப்படுகிறது.
தேவனுடைய பதில்
5 நீங்கள் அந்நியமக்களை நோக்கிப்பார்த்து, ஆச்சரியப்பட்டுப் பிரமியுங்கள்; விவரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒரு செயலை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன். 6 இதோ, நான் கல்தேயரென்னும்[a] கொடியதும் வேகமுமான மக்களை எழுப்புவேன்; அவர்கள் தங்களுடையதல்லாத குடியிருப்புக்களைக் கட்டிக்கொள்ள தேசத்தின் விசாலங்களில் நடந்துவருவார்கள். 7 அவர்கள் கொடியவர்களும் பயங்கரமுமானவர்கள்; அவர்களுடைய நியாயமும் அவர்களுடைய மேன்மையும் அவர்களாலேயே உண்டாகும். 8 அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளைவிட வேகமும், சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமுமாக இருக்கும்; அவர்களுடைய குதிரைவீரர்கள் பரவுவார்கள்; அவர்களுடைய குதிரைவீரர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்து வருவார்கள். 9 அவர்களெல்லோரும் கொடுமைசெய்ய வருவார்கள்; அவர்களுடைய முகங்கள் வற்றச் செய்யும் கீழ்க்காற்றைப்போலிருக்கும்; அவர்கள் மணல் அளவு மக்களைச் சிறைபிடித்துச் சேர்ப்பார்கள். 10 அவர்கள் ராஜாக்களைக் கொடுமை செய்வார்கள்; அதிபதிகள் அவர்களுக்குக் கேலிக்குரியவர்களாக இருப்பார்கள்; அவர்கள் மதில்களையெல்லாம் பார்த்து நகைத்து, மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பார்கள். 11 அப்பொழுது அவனுடைய மனம்மாற, அவன் தன் பெலன் தன் தேவனாலே உண்டானதென்று சொல்லி மிஞ்சிப்போய்க் குற்றவாளியாவான்.
தீர்க்கதரிசியின் இரண்டாவது கேள்வி
12 யெகோவாவே, நீர் ஆரம்பகாலமுதல் என் தேவனும், என் பரிசுத்தருமானவர் அல்லவா? நாங்கள் சாவதில்லை; யெகோவாவே, நியாயத்தீர்ப்புச் செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர். 13 தீமையைப் பார்க்காமலிருக்கிற சுத்தக்கண்ணனே, அநியாயத்தை பார்த்துக்கொண்டிருக்கமாட்டீரே; அப்படியிருக்க துரோகிகளை நீர் பார்த்துக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைக்காட்டிலும் நீதிமானாக இருக்கிறவனை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன? 14 மனிதர்களைச் சமுத்திரத்து மீன்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமமாக்குகிறதென்ன? 15 அவர்களெல்லோரையும் தூண்டிலைக்கொண்டு இழுத்துக்கொள்கிறான்; அவர்களைத் தன் வலையினால் பிடித்து, தன் கூடையிலே சேர்த்துக்கொள்ளுகிறான்; அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான். 16 ஆகையால் அவைகளினால் தன் பங்கு கொழுப்புள்ளதும், தன் உணவு சுவையுள்ளதாயிற்று என்று சொல்லி அவன் தன் வலைக்குப் பலியிட்டுத் தன் கூடைக்குத் தூபங்காட்டுகிறான். 17 இதற்காக அவன் தன் வலையை இழுத்து அதிலுள்ளவைகளைக் கொட்டிக்கொண்டிருந்து, இரக்கமில்லாமல் மக்களை எப்போதும் கொன்றுபோடவேண்டுமோ?

ஆபகூக் 2 ->