Link to home pageLanguagesLink to all Bible versions on this site
அத்தியாயம் 28
1 ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, “நீ கானானியர்களுடைய பெண்களைத் திருமணம் செய்யாமல், 2 எழுந்து புறப்பட்டு, பதான் அராமிலிருக்கும் உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டிற்குப் போய், அந்த இடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் மகள்களுக்குள் ஒருவளை மனைவியாக்கிக்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான். 3 சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல மக்கள்கூட்டமாக உன்னைப் பலுகவும் பெருகவும்செய்து; 4 தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாகத் தங்குகிறதுமான தேசத்தை நீ சொந்தமாக்கிக்கொள்ள ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்லி; 5 ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய மகனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்திற்குப் போகப் புறப்பட்டான். 6 ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து, ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய அவனைப் பதான் அராமுக்கு அனுப்பினதையும், அவனை ஆசீர்வதிக்கும்போது: “நீ கானானியர்களுடைய பெண்களைத் திருமணம் செய்யவேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும், 7 யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப் புறப்பட்டுப்போனதையும் ஏசா கண்டதாலும், ஏசா இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் திருமணம் செய்தான். 8 கானானியர்களுடைய பெண்கள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததாலும், 9 ஏசா இஸ்மவேலிடத்திற்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய மகனாகிய இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் திருமணம் செய்தான்.
பெத்தேலில் யாக்கோபின் கனவு
10 யாக்கோபு பெயெர்செபாவை விட்டு ஆரானுக்குப் போகப் பயணம்செய்து, 11 ஒரு இடத்திலே வந்து, சூரியன் மறைந்ததினால், அங்கே இரவில் தங்கி, அங்கேயிருந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தன் தலையின்கீழ் வைத்து, அங்கே படுத்துத் தூங்கினான். 12 அங்கே அவன் ஒரு கனவுகண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர்கள் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாக இருந்தார்கள். 13 அதற்கு மேலாகக்*அவன் அருகே யெகோவா நின்று: “நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய யெகோவா; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். 14 உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரவுவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். 15 நான் உன்னோடு இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்திற்கு உன்னைத் திரும்பி வரச்செய்வேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யும்வரை உன்னைக் கைவிடுவதில்லை” என்றார். 16 யாக்கோபு தூக்கம் கலைந்து விழித்தபோது: “உண்மையாகவே யெகோவா இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாமலிருந்தேன்” என்றான். 17 அவன் பயந்து, இந்த இடம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல்” என்றான்.

18 அதிகாலையில் யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் ஊற்றி, 19 அந்த இடத்திற்குப் பெத்தேல் என்று பெயரிட்டான்; அதற்கு முன்னே அந்த ஊருக்கு லூஸ் என்னும் பெயர் இருந்தது. 20 அப்பொழுது யாக்கோபு: “தேவன் என்னோடிருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண உணவும், உடுக்க உடையும் எனக்குத் தந்து, 21 என்னை என் தகப்பன் வீட்டிற்குச் சமாதானத்தோடு திரும்பிவரச் செய்வாரானால், யெகோவா எனக்குத் தேவனாயிருப்பார்; 22 நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன்” என்று சொல்லிப் பொருத்தனை செய்துகொண்டான்.

<- ஆதியாகமம் 27ஆதியாகமம் 29 ->