Link to home pageLanguagesLink to all Bible versions on this site
அத்தியாயம் 26
தீருவுக்கு எதிரான தீர்க்கதரிசனம்
1 பாபிலோனின் சிறையிருப்பின் பதினோராம் வருடம் மாதத்தின் முதல் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனிதகுமாரனே, தீருவானது எருசலேமுக்கு விரோதமாக, ஆ ஆ, மக்களின் வாசலாக இருந்த நகரம் இடிக்கப்பட்டதென்றும் என்னிடமாக எல்லாம் புரண்டுவரும், அது பாழாக்கப்பட்டிருக்க நான் நிரப்பப்படுவேன் என்றும் சொல்லுகிறபடியினால், 3 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீருவே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன்; கடல் தன்னுடைய அலைகளை எழும்பிவரச்செய்கிறதுபோல நான் அநேகம் தேசங்களை உனக்கு விரோதமாக எழும்பிவரச்செய்வேன். 4 அவர்கள் தீருவின் மதில்களை அழித்து, அதின் மதில்களை இடித்துப்போடுவார்கள்; நான் அதின் மண்ணும் அதில் இல்லாமல் விளக்கிப்போட்டு, அதை வெறும் பாறையாக்கிவிடுவேன். 5 அது வலைகளை விரிக்கிற இடமாக கடலின் நடுவிலே இருக்கும்; நான் இதைச் சொன்னேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அது தேசங்களுக்குக் கொள்ளையாகும். 6 வெளியில் இருக்கிற அதின் மகள்களோ பட்டயத்தால் கொன்றுபோடப்படுவார்கள்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள். 7 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜாதிராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவை வடக்கேயிருந்து குதிரைகளுடனும், இரதங்களுடனும், குதிரைவீரர்களுடனும் கூட்டத்தோடும் அதிகமான மக்களுடனும் தீருவுக்கு விரோதமாக வரச்செய்வேன். 8 அவன் வெளியில் இருக்கிற உன்னுடைய மகள்களை வாளினால் கொன்று, உனக்கு விரோதமாக மதில்களைக் கட்டி அணைபோட்டு, கேடயங்களை எடுத்து, 9 உன்னுடைய மதில்களை இடிக்கிற இயந்திரங்களை எதிரே வைத்து, தன்னுடைய கடைப்பாரைகளால் உன்னுடைய முற்றுகை சுவர்களை இடித்துப்போடுவான். 10 அவனுடைய குதிரைகளின் கூட்டத்தினால் புழுதி எழும்பி உன்னை மூடும்; இடித்துத் திறக்கப்பட்ட பட்டணத்தில் நுழைவதுபோல, அவன் உன்னுடைய வாசல்களுக்குள் நுழையும்போது, குதிரை வீரர்களும் வண்டிகளும், இரதங்களும் இரைகிற சத்தத்தினாலே உன்னுடைய மதில்கள் அதிரும். 11 தன்னுடைய குதிரைகளின் குளம்புகளினால் உன்னுடைய வீதிகளையெல்லாம் மிதிப்பான்; உன்னுடைய மக்களை வாளினால் கொன்றுபோடுவான்; உன்னுடைய பலமான தூண்கள் தரையில் விழுந்துபோகும். 12 அவர்கள் உன்னுடைய செல்வத்தைக் கொள்ளையிட்டு, சரக்குகளைச் சூறையாடி, மதில்களை இடித்து, உனக்கு விருப்பமான வீடுகளை அழித்து, உன்னுடைய கல்லுகளையும், மரங்களையும், மண்ணையும் கடலின் நடுவிலே போட்டுவிடுவார்கள். 13 உன்னுடைய பாட்டுகளின் சத்தத்தை ஓயச்செய்வேன்; உன்னுடைய சுரமண்டலங்களின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை. 14 உன்னை வெறும் பாறையாக்கிவிடுவேன்; நீ வலைகளை விரிக்கிற இடமாக இருப்பாய்; இனிக் கட்டப்படமாட்டாய்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 15 தீருவுக்குக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன்னுடைய நடுவில் படுகொலை நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ? 16 கடலரசர் எல்லோரும் தங்களுடைய சிங்காசனங்களைவிட்டு இறங்கி; தங்களுடைய சால்வைகளைக் கழற்றி, தங்களுடைய சித்திரத்தையலாடைகளை கழற்றிப்போடுவார்கள்; நடுக்கமே அவர்கள் உடையாகும்; தரையிலே உட்கார்ந்து, ஒவ்வொரு நிமிடமும் தத்தளித்து, உனக்காக வியப்படைவார்கள். 17 அவர்கள் உனக்காக புலம்பி, உன்னைக்குறித்து:
கடலில் வாழ்பவர்கள் குடியிருந்த புகழ்பெற்ற நகரமே, ஐயோ,
உன்னில் தங்கினவர்களுக்கெல்லாம் பயமுண்டாக்கின உன்னுடைய குடிகளுடன் கடலிலே பலத்திருந்த நீ அழிந்துபோனாயோ,
18 நீ விழும் நாளில் தீவுகள் தத்தளிக்கும்;
நீ அகன்றுபோகும்போது கடலில் உள்ள தீவுகள் கலங்கும் என்பார்கள்.
19 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்:
நான் உன்னைக் குடியில்லாத நகரங்களைப்போலப் பாழான நகரமாக்கும்போதும்,
மிகுந்த தண்ணீர்கள் உன்னை மூடத்தக்கதாக நான் உன்மேல் கடலை வரச்செய்யும்போதும்,
20 ஆரம்பகாலத்தின் மக்களின் அருகில் குழியில் இறங்குகிறவர்களுடன் நான் உன்னை இறங்கச்செய்வேன்;
நீ குடியேறாமலிருக்க ஆரம்பகாலம் முதற்கொண்டு பாழாய் இருக்கிற பூமியின் தாழ்விடங்களிலே
குழியில் இறங்குகிறவர்களுடன் நான் உன்னைத் தங்கியிருக்கச்செய்வேன்;
ஜீவனுள்ளோருடைய தேசத்திலோ மகிமை விளங்கச்செய்வேன்.
21 உன்னை மகா பயங்கரமாக வைப்பேன்; இனி நீ இருக்கமாட்டாய்;
நீ தேடப்பட்டாலும் இனி என்றைக்கும் காணப்படமாட்டாய்
என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.

<- எசேக்கியேல் 25எசேக்கியேல் 27 ->