20 மொர்தெகாய் இந்தக் காரியங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலும் இருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் எல்லா நாடுகளிலுமுள்ள எல்லா யூதர்களுக்கும் கடிதங்களை அனுப்பி, 21 ஒவ்வொரு வருடமும் ஆதார் மாதத்தின் பதினான்காம் பதினைந்தாந்தேதிகளை, யூதர்கள் தங்களுடைய பகைவர்களுக்கு விலகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்களுடைய சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்களுடைய துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் அநுசரித்து, 22 அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷம்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் பரிசுகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மம் செய்யவும்வேண்டும் என்று திட்டம் செய்தான். 23 அப்பொழுது யூதர்கள் தாங்கள் செய்யத்துவங்கியபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள். 24 அம்மெதாத்தாவின் மகனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதர்களுக்கெல்லாம் எதிரியாக இருந்து யூதர்களை அழிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும், ஒடுக்கவும் பூர் என்னப்பட்ட சீட்டைப் போட செய்தான். 25 ஆனாலும் எஸ்தர், ராஜாவிற்கு முன்பாகப்போய், யூதர்களுக்கு விரோதமாக அவன் நினைத்த அவனுடைய பொல்லாத யோசனை அவனுடைய தலையின்மேல் திரும்பும்படி கட்டளையிட்டதால், அவனையும் அவனுடைய மகன்களையும் மரத்திலே தூக்கிப்போட்டார்கள். 26 ஆகையால் அந்த நாட்கள் பூர் என்னும் பெயரால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த கடிதத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினாலும், தாங்களே இந்த விஷயத்தில் அனுபவித்தவைகளினாலும், தங்களுக்கு சம்பவித்தவைகளினாலும், 27 யூதர்கள் அதை ஏற்றுக்கொண்டு, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை ஒவ்வொரு வருடமும், அவைகளின் சரியான காலத்தில் கொண்டாடாமல் இருப்பதில்லை என்பதையும், 28 இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூறப்பட்டு கொண்டாடப்படவேண்டும் என்பதையும், இந்தப் பூரீம் என்னும் பண்டிகை நாட்கள் யூதர்களுக்குள்ளே தவறிப்போகாமலும், அவைகளை நினைவுகூருதல் தங்களுடைய சந்ததியினர்களுக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும், தங்கள்மேலும், தங்களுடைய சந்ததியினர்கள்மேலும், தங்களுடைய மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற எல்லோர்மேலும் கடனாக நியமித்துக் கொண்டார்கள். 29 பூரிமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் கடிதத்தை உறுதிப்படுத்தும்படி, அபியாயேலின் மகளாகிய எஸ்தர் என்னும் ராணியும், யூதனாகிய மொர்தெகாயும், பின்னும் மகா உறுதியாக எழுதினார்கள். 30 யூதனாகிய மொர்தெகாயும், ராணியாகிய எஸ்தரும் யூதர்களுக்கு உறுதிசெய்ததும், அவர்கள் உபவாசத்தோடும் அலறுதலோடும் அனுசரிப்போம் என்று தங்கள்மேலும் தங்கள் சந்ததியினர்மேலும் கடனாக நியமித்துக்கொண்டதுமான, பூரீம் என்னப்பட்ட இந்த நாட்கள் அவைகளின் சரியான காலங்களில் அனுசரிக்கப்படும் காரியத்தை உறுதியாக்க, 31 அவன் அகாஸ்வேருவின் ராஜ்ஜியத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலும் இருக்கிற எல்லா யூதர்களுக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய கடிதங்களை அனுப்பினான். 32 இப்படியே எஸ்தரின் கட்டளையானது பூரீம் நாட்களைப்பற்றின இந்த சம்பவங்களை உறுதிப்படுத்தினது; அது ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டது.
<- எஸ்தர் 8எஸ்தர் 10 ->