Link to home pageLanguagesLink to all Bible versions on this site
அத்தியாயம் 6
மொர்தெகாய் கெளரவிக்கப்படுதல்
1 அந்த இரவில் ராஜாவிற்கு தூக்கம் வராததினால், அவனுடைய ராஜ்ஜியத்தின் நிகழ்வுகள் எழுதியிருக்கிற பதிவு புத்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது. 2 அப்பொழுது வாசற் காவலாளர்களில் ராஜாவின் இரண்டு அதிகாரிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு தீங்கு செய்ய நினைத்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது. 3 அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவிற்கு பணிவிடை செய்கிற வேலைக்காரர்கள்: அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள். 4 ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று, ராஜாவிடம் பேசும்படி ராஜஅரண்மனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான். அப்பொழுது ராஜா: முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான். 5 ராஜாவின் வேலைக்காரர்கள் அவனை நோக்கி: இதோ, ஆமான் முற்றத்திலே நிற்கிறான் என்றார்கள்; ராஜா: அவன் உள்ளே வரட்டும் என்றான். 6 ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனப்படுத்த விரும்புகிற மனிதனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னைத்தவிர, யாரை ராஜா கனப்படுத்த விரும்புவார் என்று தன்னுடைய மனதிலே நினைத்து, 7 ராஜாவை நோக்கி: ராஜா கனப்படுத்த விரும்புகிற மனிதனுக்கு செய்யவேண்டியது என்னவென்றால், 8 ராஜா அணிந்துகொள்ளுகிற ராஜஉடையும், ராஜா ஏறுகிற குதிரையும், அவருடைய தலையிலே சூட்டப்படும் ராஜகிரீடமும் கொண்டுவரப்படவேண்டும். 9 அந்த ஆடையும் குதிரையும் ராஜாவுடைய முக்கிய பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்; ராஜா கனப்படுத்த விரும்புகிற மனிதனை அலங்கரித்தபின்பு, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படிச் செய்து, ராஜா கனப்படுத்த விரும்புகிற மனிதனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான். 10 அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: சீக்கிரமாக நீ சொன்னபடி ஆடையையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரண்மனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்படியே செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான். 11 அப்படியே ஆமான் ஆடையையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவரும்படிச்செய்து, ராஜா கனப்படுத்த விரும்புகிற மனிதனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறினான். 12 பின்பு மொர்தெகாய் ராஜாவின் அரண்மனைவாசலுக்குத் திரும்பி வந்தான்; ஆமானோ துக்கப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு விரைவாகப்போனான். 13 ஆமான் தனக்கு நேர்ந்த எல்லாவற்றையும் தன்னுடைய மனைவியாகிய சிரேஷூக்கும் தன்னுடைய நண்பர்கள் எல்லோருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரர்களும் அவனுடைய மனைவியாகிய சிரேஷூம் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் துவங்கினீர்; அவன் யூத குலமாக இருந்தால், நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள். 14 அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராஜாவின் அதிகாரிகள் வந்து, எஸ்தர் செய்த விருந்திற்கு வர ஆமானைத் துரிதப்படுத்தினார்கள்.

<- எஸ்தர் 5எஸ்தர் 7 ->