Link to home pageLanguagesLink to all Bible versions on this site
அத்தியாயம் 10
ஞானமுள்ளவனும், ஞானமற்றவனும்
1 செத்த ஈக்கள் நறுமணத் தைலக்காரனுடைய நறுமணத் தைலத்தை நாறிக் கெட்டுப்போகச்செய்யும்; ஞானத்திலும் மதிப்பிலும் பெயர்பெற்றவனைச் சிறிய மதியீனமும் அப்படியே செய்யும். 2 ஞானியின் இருதயம் வலதுகையிலும், மூடனின் இருதயமோ இடதுகையிலும் இருக்கும். 3 மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாக இருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லோருக்கும் சொல்லுகிறான். 4 அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன்னுடைய இடத்தைவிட்டு விலகாதே; சாந்தம்*நீ ஒப்புக்கொடுக்கும்போது பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும். 5 நான் சூரியனுக்குக்கீழே பார்த்த ஒரு தீங்கும் உண்டு, அது அதிபதியினிடத்தில் தோன்றும் தவறே. 6 மூடர்கள் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள்; சீமான்களோ தாழ்ந்த நிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள். 7 வேலைக்காரர்கள் குதிரைகள்மேல் ஏறிப்போகிறதையும், பிரபுக்கள் வேலைக்காரர்கள்போல் தரையிலே நடக்கிறதையும் பார்த்தேன். 8 படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும். 9 கல்லுகளைப் பெயர்க்கிறவன் அவைகளால் காயப்படுவான்; மரத்தைப் பிளக்கிறவன் அதினால் அடிபடுவான். 10 இரும்பு ஆயுதம் மழுங்கலாக இருக்க, அதை ஒருவன் தீட்டாமற்போனால், அதிக பலத்தைச் செலவிடவேண்டியதாகும்; ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாகச் செய்வதற்கு ஞானமே முக்கியம். 11 தடை செய்யப்படாத பாம்பு கடிக்குமே, கோள்சொல்லுகிறவனும் அதற்கு ஒப்பானவன். 12 ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும். 13 அவன் வாய்மொழிகளின் ஆரம்பம் மதியீனமும், அவனுடைய வாக்குகளின் முடிவு கொடிய பைத்தியமாக இருக்கும். 14 மூடன் மிகுதியாகப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனிதன் அறியான்; தனக்குப்பிற்பாடு நடக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்? 15 ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் சோர்வடையச்செய்யும். 16 ராஜா சிறுபிள்ளையுமாகவேலைக்காரனாக, பிரபுக்கள் அதிகாலமே சாப்பிடுகிறவர்களுமாக இருக்கிற தேசமே, உனக்கு ஐயோ, 17 ராஜா உயர்ந்த குடிமகனுமாகவும், பிரபுக்கள் வெறிக்கச் சாப்பிடாமல் பெலன்கொள்ள ஏற்றவேளையில் சாப்பிடுகிறவர்களுமாக இருக்கிற தேசமே, நீ பாக்கியமுள்ளது. 18 மிகுந்த சோம்பலினால் மேல்தளம் பழுதாகும்; கைகளின் அசட்டையினால் வீடு ஒழுகும். 19 விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சைரசம் உயிருள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும். 20 ராஜாவை உன்னுடைய மனதிலும் இகழாதே, ஐசுவரியவானை உன்னுடைய படுக்கையிலும் இகழாதே; ஆகாயத்துப்பறவை அந்த சத்தத்தைக் கொண்டுபோகும், இறக்கைகள் உள்ளவை அந்த செய்தியை அறிவிக்கும்.

<- பிரசங்கி 9பிரசங்கி 11 ->